காலை எழுந்ததும் ஒரு கப் காபி கேட்பவர்கள் பலர் உண்டு. ஹோட்டலுக்கு சென்றால் பில்டர் காபியுடன் உணவை முடிக்கும் பழக்கம் இன்றும் நிறைய பேருக்கு உண்டு. அப்படி காபியின் மீது அதீத காதல் கொண்டவர்கள் அதிகம். இப்படி அதிகமாகக் காபி குடிப்பது நல்லதா? காபி குடிப்பதால் நாம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவோம். காபி குடிப்பதால் இதய நோய், பக்கவாதம், மாரடைப்பு வராமல் பாதுகாக்க உதவுகிறது. தினமும் 5 கப் வரை காப்பி குடிப்பது 15 சதவிகித இதயநோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பலவகை காபிகள் வந்து விட்டன. பில்டர் காபி, கேப்பசினோ, எக்ஸ்பிரஸோ, கோல்ட் காபி, லாட்டே, மாச்சியாட்டோ என்று சுவைத்து பார்ப்பதற்கெனவே பல வகைகள் உண்டு. இப்படி நம்மை அடிமையாக்கி வைத்திருக்கும் காபியின் வரலாறு பற்றி தெரியுமா?
‘கல்டி’ என்பவர் ஒரு ஆடு மேய்ப்பவர். அவர் ஒரு நாள் தனது ஆடுகள் மிகவும் உற்சாகமாக இருப்பதை கவனித்தார். இரவிலும் தூங்காமல் கத்திக் கொண்டிருப்பதை பார்த்தார். இதன் காரணத்தை தெரிந்துகொள்ள விரும்பினார்.
அடுத்த நாள் ஆடுகளை பின்தொடர்ந்து சென்றார். அந்த ஆடுகள் சிவப்பு நிற பெர்ரி போன்ற பழங்களை சாப்பிடுவதை கவனித்தார். அதை அவரும் எடுத்து சாப்பிட, மிகவும் உற்சாகமாக இருப்பதை உணர்ந்தார். கல்டி அந்த பழத்தை தனக்கு தெரிந்த துறவியிடம் கொடுக்க, அவர் அந்தப் பழத்தினால் ஏற்படும் உற்சாகத்தை கண்டு பயந்து, ‘இந்த பழத்தை சாப்பிடுவது பாவம்’ என்று நெருப்பில் எறிந்தார். இதனால் பழம் நெருப்பின் சூட்டில் காபிக்கொட்டைகளாக மாறி காபி நறுமணத்தை காற்றில் பரப்பிக்கொண்டிருந்தது. இதுவே முதல் காபிக்கொட்டை உருவான கதையாகும்.
காபி பயிர் இந்தியாவிற்குள் வந்த கதை: சூஃபி ஞானி பாபா புடன்தான் இந்தியாவிற்கு காபி பயிரை முதன் முதலில் கொண்டு வந்தவராவார். 16ம் நூற்றாண்டில் மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்ட பாபா, அங்கே காபியின் சுவையை கண்டு மெய்மறந்து போனார். அதை இந்தியாவிற்கு எடுத்து வருவதில் அவருக்கு ஒரு சிக்கல். அரேபியர்கள் வறுத்த காபி கொட்டைகளையே வணிகம் செய்தனர். பிற நாட்டில் காபி பயிர் செய்து விட்டால் தங்கள் வணிகம் பாதிக்கும் என்ற பயம் அவர்களுக்கு.
பாபாவோ ஏழு காபிக்கொட்டைகளை தன்னுடைய தாடிக்குள் மறைத்து எடுத்துக்கொண்டு இந்தியா வந்தடைந்தார். அதை தன்னுடைய சொந்த பிரதேசமான சிக்மகளுர் சந்திரகிரியில் விதைத்தார். இந்தியாவில் முதல் காபித் தோட்டம் கர்நாடகாவில் உருவானது. இன்றும் அந்த மலைபகுதி, ‘பாபா புடன்கிரி’ என்றே அழைக்கப்படுகிறது. இதுவே இந்தியாவிற்குள் காபி பயிர் வந்த வரலாறாகும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது காபிக்கும் பொருந்தும். என்னதான் காபியை அனைவரும் விரும்பி அருந்தினாலும், இரவில் இதை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். இரவில் அதிகமாக காபி குடிப்பது தூக்கத்தை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.