A child who has swallowed an unwanted substance https://tamil.boldsky.com
வீடு / குடும்பம்

குழந்தைகள் எதையாவது விழுங்கி தொண்டையில் சிக்கிக்கொண்டால் செய்யவேண்டிய முதலுதவி தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

விவரம் அறியாத சிறிய குழந்தைகள் கையில் கிடைத்தவற்றை முதலில் வாய்க்குதான் கொண்டு செல்வார்கள். அப்படி சமயத்தில் வேண்டாத சில பொருட்கள் குழந்தைகளின் தொண்டையில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. அதுபோன்ற சமயங்களில் செய்ய வேண்டிய முதலுதவி என்னவென்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

எவ்வளவுதான் நாம் பார்த்து பார்த்து வளர்த்தாலும் சமயத்தில் குழந்தைகள் செய்யும்  குறும்பால் எதையாவது விழுங்கி விட்டால் பதறிப் போய் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்று விடுவோம். ஏதேனும் விபரீதம் நடந்து விடுமோ என கற்பனையில் யோசித்து செய்வதறியாது குழம்பி விடுவோம்.

தவழும் வயதில் குழந்தைகள் எதைப் பார்த்தாலும் அவர்களுக்கு அது புதுமையாக தெரிவதால் கையில் கிடைத்தவுடன் முதலில் தொட்டு பார்ப்பார்கள். பிறகு கையில் எடுத்து வாயில் போட்டு கடிக்க ஆரம்பிப்பார்கள். சில நேரங்களில் கடித்து தின்னும் பொருளை குழந்தைகள் விழுங்கி விடுவதும் உண்டு. சிறு சிறு மணிகள், காசு, ரப்பர், பாசி மணிகள், சாக்பீஸ் துண்டுகள், நறுக்கிய காய்கறிகள் என ஒரு பெரிய லிஸ்டே இதில் உண்டு.

குழந்தைகள் விழுங்கும் பொருட்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக் குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. மூச்சுக் குழாய்க்குள் சென்று அடைத்துக் கொண்டால் சுவாசப் பாதை தடைப்படும். மூச்சு விட சிரமம் ஏற்படும். உணவுக் குழாய்க்குள் சென்றால் இரப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும்.

இப்படி வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருட்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மலம் கழிப்பதன் மூலம் வெளியேறிவிடும். ஊக்கு, ஸ்க்ரூ போன்ற கூர்மையான பொருட்களை விழுங்கிவிட்டால் உள் உறுப்புகளில் காயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கு உடனடி சிகிச்சை அவசியம்.

சில குழந்தைகள் பொம்மைகளில் காணப்படும் பேட்டரி பட்டன் போன்றவற்றை விழுங்கி விடும். இது மிகவும் ஆபத்தானது. இதற்கு உடனடியாக தீவிர சிகிச்சை செய்ய வேண்டும். பேசக்கூடிய வயதில் உள்ள பிள்ளைகள் என்றால் அவர்களிடமே என்ன பொருள், எதை விழுங்கினார்கள் என்று கேட்டு அவர்களை முதலில் இரும சொல்ல வேண்டும். பின்னர் அவர்களை குனிய வைத்து முதுகு பகுதியில் ஐந்து ஆறு முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால் குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்கு கீழே தொப்புளுக்கு மேலே நம் ஒரு கை முஷ்டி மேல் இன்னொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கி தள்ளலாம். அப்படியும் அந்தப் பொருள் வரவில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் நல்லது.

சில குழந்தைகள் எதையாவது விழுங்கி விட்டு சத்தம் போடாமல் இருந்து விடும். இதனை கண்டுபிடிக்க சில வழிகள் உண்டு. சாப்பிட எதை கொடுத்தாலும் மறுத்து விடும். தொடர்ந்து இருமும். வாந்தி உண்டாகும். வயிற்று வலி என்று சொல்லும். இந்த அறிகுறிகளை வைத்து முதலுதவியோ டாக்டரிடம் அழைத்துச் செல்வதையோ அவசியம் செய்ய வேண்டும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT