உலகில் அதிக ஆயுள் கொண்ட மக்கள் ஜப்பானில்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவு முறை:
வேகவைத்த கடல் வாழ் உயிரினங்கள்: நிறைய வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் கால்நடைகளை அதிகமாக வளர்த்தாலும் தங்கள் உணவில் குறைவாகவே சிவப்பு நிற இறைச்சி வகைகளை எடுத்துக் கொள்கிறார்கள். கடல் வாழ் உயிரினங்களான மீன், இறால் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். இவற்றையும் வறுத்துப் பொறித்து உண்ணாமல் வேக வைத்து சாப்பிடுகிறார்கள். அதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய நோய்களிலிருந்து அவர்களைக் காக்கிறது. நீண்ட ஆயுளோடும் இவர்களை வைத்திருக்கிறது.
காய்கறிகள்: பெரும்பாலும் பச்சை காய்கறிகளை அதிகமாக சாப்பிடுகிறார்கள். பீன்ஸ், பசலைக் கீரை, கடுகுக்கீரை, இனிப்பு உருளைக்கிழங்கு என இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்களைத்தான் அதிகம் உண்கின்றனர். பதப்படுத்திய உணவுகளை அவர்கள் உண்பதில்லை. ‘கோயா’ எனப்படும் பாகற்காயை அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும கொடுக்கிறது.
சமைக்கும் மற்றும் உண்ணும் முறை: அவர்கள் சமைக்கும் முறையே சற்றே வித்தியாசமானது. நிறைய உணவு வகைகளை ஆவியில் வேக வைக்கின்றனர். துரித உணவு முறை இல்லை. மெதுவான சமையல் முறையைக் கடைபிடிக்கிறார்கள். உலகம் எங்கும் பிரட் ரொட்டி வகைகள் எல்லோருடைய தட்டிலும் வியாபித்து இருக்கும்போது ஜப்பானியர்கள் அதை அதிகமாக எடுத்துக் கொள்வதில்லை.
அவர்கள் உணவு உண்ணும் தட்டுகள், கிண்ணங்கள் மிகவும் சிறியதாக இருக்கும். ஒரு கப் சூப், குறைந்த அளவு அரிசி சாதம், நிறைய காய்கறிகள் மீன் பீன்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள்.
சாப்ஸ் ஸ்டிக்ஸ் உபயோகப்படுத்தி உண்ணும்போது, எண்பது சதவீதம் வயிறு நிறைந்தால் உடனே சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். இதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். அவர்கள் எடுத்துக்கொள்ளும் சோயா பீன் வகைகள், டோபு போன்றவை உடல் பருமன், இதய நோய், கேன்சர் போன்ற நோய்களிலிருந்து காக்கின்றன.
பிரஷ்ஷான காய்கள், மீன்கள், கிரீன் டீ: அவர்கள் மிகவும் பிரஷ்ஷான காய்கள், மீன்களைத்தான் உண்கிறார்கள். ஃப்ரிட்ஜில் வாங்கி ஸ்டோர் செய்த பழைய மீன்களையோ காய்கறிகளையோ உண்பதில்லை. ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த கிரீன் டீ குடிக்கிறார்கள். அது அவர்களை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை: ஜூடோ, அக்கிடோ, கராத்தே போன்ற தற்காப்பு கலைகளைக் கற்று வைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள். வயதானவர்கள் கூட அங்கே எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்கிறார்கள்.
பெரும்பான்மையான நேரங்களில் மளிகைக்கடை, ரயில்வே ஸ்டேஷன், ஹோட்டல் என நடந்தே செல்கிறார்கள். அதிகாலையில் எழுந்து தங்கள் பணியிடங்களுக்கு ரயிலில் செல்வார்கள். ட்ரெயினில் நின்று கொண்டே பயணிப்பது, பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்துவது, காலையில் உடற்பயிற்சி செய்வது என ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள்.
அவர்கள் தங்கள் நண்பர்களுடன் வெளியில் அதிகமாக சாப்பிடுவார்கள். நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பது நல்ல உற்சாகத்தைத் தந்து, அவர்களின் உணர்வுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
எங்கும் சுத்தம்: ஜப்பானியர்கள் சுத்தத்தின் மேல் அதீத பிடிப்புக் கொண்டவர்கள். கோடைக் காலங்களில் இருமுறை குளிக்கும் வழக்கம் கொண்டவர்கள். தங்கள் இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் மிக மிக சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். பொது இடங்களில் தேவையில்லாத குப்பைகளைப் போடுவது போன்ற செயல்களை செய்ய மாட்டார்கள். இதனால் நோய்த் தொற்றில் இருந்து காத்துக்கொண்டு நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கிறார்கள்.
சிறந்த வாழ்க்கை முறையுடன் மனதையும் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்கிறார்கள். அதனால் நீண்ட ஆயுளுடன் அவர்கள் வாழ்கிறார்கள்.