Do you know the meaning of teaching? https://www.tamilauthors.com
வீடு / குடும்பம்

கற்பித்தலின் பொருள் தெரியுமா உங்களுக்கு?

செளமியா சுப்ரமணியன்

னது பள்ளிப் படிப்பை பல ஆண்டுகளுக்கு முன்னர் முடித்த ஒருவர், தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த தனது ஆசிரியரை பார்ப்பதற்காக அந்தப் பள்ளிக்கு வருகை தந்தார். தனது ஆசிரியரைப் பார்த்த அந்த பழைய மாணவர் அவரிடம், ‘தன்னை நினைவிருக்கிறதா சார்?’ என்று கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர், ‘எனக்கு ஞாபகம் இல்லையே. எந்த வருடம் என்னிடம் படித்தாய்?’ என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவர், அவரிடம் தான் படித்த வருடத்தை கூறி, ‘நீங்கள்தான் எனக்கு முன்மாதிரி சார். உங்களை உதாரணமாக வைத்துத்தான் நானும் ஆசிரியராக வேண்டும் எனும் குறிக்கோளுடன் இன்று ஆசிரியராக ஆகியுள்ளேன்’ என்றார்.

‘ஓ, அப்படியா? என்னை எதற்காக முன்மாதிரியாக எடுத்துக்கொண்டாய்?’ என்றார் அந்த ஆசிரியர்.

அதற்கு அந்தப் பழைய மாணவர், ‘‘நான் படிக்கும் காலத்தில் என்னுடன் படித்த ஒரு மாணவன் அதிக விலையுள்ள கைகடிகாரம் ஒன்றை அணிந்திருந்தான். நான் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்திருந்ததால் அதுபோன்ற கடிகாரங்களை வாங்குவதற்கு எங்களுக்கு வசதி கிடையாது. அந்த கைகடிகாரத்தை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற பேராசை என்னுள் தோன்றியது. என் நண்பன் சாப்பாட்டை முடித்துவிட்டு கை கழுவ சென்றபோது தனது கடிகாரத்தை வைத்து விட்டுச் சென்றான். அந்த சமயத்தில் நான் அவனது கைகடிகாரத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். அவன் தனது கடிகாரம் காணாமல் போனதால், அதை எப்படியாவது கண்டுபிடித்துத் தரும்படி ஆசிரியரிடம் அழுது முறையிட்டான்.

அப்போது நீங்கள் உடனே எந்த பதற்றமும் இல்லாமல், எல்லா மாணவர்களையும் வரிசையில் நிற்க வைத்து, அவர்களது கண்களை கட்டிவிட்டு, எல்லோருடைய பேண்ட் பாக்கெட்டை சோதித்ததில், என் பேண்ட் பாக்கெட்டிலிருந்த கடிகாரத்தை எடுத்து, எந்த சத்தமும் இல்லாமல் அந்த மாணவனிடம் கொடுத்துவிட்டு, யாரிடமும் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. என்னிடமும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

அனைத்து மாணவர்களின் முன்பும் எனக்கு திருடன் என்ற பட்டம் கட்டாமல், எனது மானத்தையும் சுயமரியாதையும் காப்பாற்றினீர்கள். அன்றுதான் எனக்குப் புரிந்தது கற்பித்தல் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று. அதன் பிறகு அன்றே முடிவு செய்தேன் ஆசிரியர் பணிக்கு தான் படிப்பதோடு, கற்பித்தலை தலையான பணியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று. உங்களைப் போன்று முன்மாதிரியாக இருந்து நானும் ஆசிரியர் பணியை தொடருவேன்” என்றான்.

அதைக் கேட்ட ஆசிரியர், “சரிப்பா… மிக்க மகிழ்ச்சி. என் வாழ்த்துக்கள்” என்றார் ஆசிரியர்.

“சார் இப்போதாவது எனது முகம் உங்களுக்கு ஞாபகத்துக்கு வருகிறதா” என்று அந்த மாணவன் கேட்க, “இல்லை, எனக்கு இப்பொழுதும் உன் முகம் ஞாபகத்தில் இல்லை” என்று கூறுகிறார் ஆசிரியர்.

அதைக் கேட்ட அந்த பழைய மாணவர், “என்னை எவ்வளவு பெரிய இக்கட்டில் இருந்து காப்பாற்றி இருக்கிறீர்கள்? எனது முகம் உங்கள் நினைவில் இல்லை என்றால் எப்படி சார்?” என்றான்.

அதற்கு அந்த ஆசிரியர், “எனக்கு உன் முகம் துளி கூட ஞாபகம் இல்லை. ஏனென்றால், அன்று எல்லோருடைய பேண்ட் பாக்கெட்டிலும் கை கடிகாரத்தை தேடும்பொழுது நானும் எனது கண்களை கட்டியிருந்தேன்” என்றார்.

அந்த ஆசிரியர் நினைத்திருந்தால் அன்றே இந்த மாணவனுக்கு திருட்டுப் பட்டம் கட்டி இருக்க முடியும். அந்த மாணவன் யார் என்று அடையாளம் கண்டுபிடித்திருக்க முடியும். எங்கே அந்த மாணவனின் முகத்தை பார்த்து விட்டால் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்தத் திருட்டு நிகழ்வே ஞாபகத்திற்கு வரும் என்று நினைத்து இதுபோன்ற ஒரு வழியைக் கையாண்டு இருந்தார்.

மாணவப் பருவத்தில் ஒருவரை தண்டிப்பதை விட, கற்பித்தலில்தான் நல்ல நிகழ்வுகள் நடக்கும் என்பதை அந்த ஆசிரியர் நாசூக்காக சொல்லி உள்ளார். எனவே, நாமும் பிறரை தண்டிப்பதை விட, அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து பார்ப்போம். அவர்களும் நிச்சயம் மாறுவார்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT