Do you know the moments when babies feel safe? https://www.virakesari.lk
வீடு / குடும்பம்

பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் தருணங்கள் எவை தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

பிறந்த கைக்குழந்தைகளை தூக்குவதில் இருந்து, குளிக்க வைப்பது, உறங்க வைப்பது என்று ஒவ்வொன்றிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படியும் சில இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளை எப்படி கையாள்வது என்பதில் பெரிய குழப்பமே ஏற்படுகிறது. அவற்றைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சில குழந்தைகள் எடை குறைவாகப் பிறந்த விடும். அதுபோன்ற குழந்தைகளை தூக்குவதுதான் மிகவும் கடினமான வேலை. அதற்கு நல்ல திக்கான டவலை விரித்து அதில் குழந்தையை படுக்க வைத்தால், அந்த துணியுடன் தூக்கி பசியாற்றுவது வரை எல்லா வேலையும் சுலபமாக முடியும்.

குழந்தையை குளிக்கவைத்து பவுடர் போடும்போது பவுடரை அளவுக்கு அதிகமாக பூசாமல், லேசாக பூசினால் போதுமானது. பூசாமல் விட்டாலும் ஒன்றும் பிரச்னை இல்லை.

குழந்தைகளை நல்ல வெயிலில் காட்டுவது அவசியம். அப்படி காட்டிய உடனே ஏ.சி. அறைக்குள் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது. இதனால் சளி பிடிப்பதை தவிர்க்கலாம்.

குழந்தைகளை ஒருவர் மாற்றி ஒருவர் அதிகம் தூக்கி கொஞ்சாமல் இருப்பது நல்லது. அப்படி அதிகமாகத் தூக்கும் பொழுது உடல் வலியால் குழந்தை அழும். அதைத்தான் உரம் விழுந்துவிட்டது என்பார்கள்.

குழந்தையை பசியாற்றி தொட்டிலில் தனியாக போட்டு உறங்க விடாமல், தாயின் பக்கத்திலேயே சேயை அணைத்துக்கொண்டு படுப்பது பாதுகாப்பாக உணரும். அம்மாவின் உடல் சூடு அதற்குத் தெரிந்து விடும். தனியாக சிறிது நேரம் விட்டாலும் குழந்தைகள் அழுவதற்குக் காரணம், அம்மா அருகில் இல்லை என்பதை உணரும் போதுதான். ஆதலால் கூடவே படுக்கவைத்துக் கொள்ளுங்கள். தாலாட்டுப் பாடுங்கள். பாட்டை ரசிக்கும்பொழுது அம்மா அருகில் இருக்கிறாள் என்று குழந்தைகள் உணருகிறதாம். பகல் பொழுதில் அவ்வப்பொழுது தொட்டிலில் போடுங்கள். அதுதான் குழந்தைக்கு பாதுகாப்பு. தவழ ஆரம்பிக்கும்பொழுது தொட்டிலில் இருந்து கட்டிலில் போடாமல் தரையில் போடுவதை பழக்கமாக்கி வைத்துக்கொள்வது நல்லது.

குறிப்பாக, குழந்தையை வெளியில் எடுத்துச் செல்லும்பொழுது மட்டும் டயப்பர் அணிவியுங்கள். வீட்டில் இருக்கும்பொழுது அவர்களை ஃப்ரீயாக விடுங்கள். டயப்பர் அணிவிப்பதற்கு முன்னர் சுத்தமான துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்க வேண்டும். பிறகு உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்கிவிட்டு டயப்பர் அணிவிக்க வேண்டும்.

குழந்தைகள் அசௌகரியப்படும்படி டயப்பரை நீண்ட நேரம் மாற்றாமல் வைத்திருக்கக் கூடாது. டயப்பர் இறுகக் கூடாது. சரும பகுதியில் சிவப்பு திட்டுகள் போல் ஏற்பட்டால் அந்த பிராண்டு டயப்பரை மாற்றி விட வேண்டும். டயப்பர் கட்டும்போது பசைத் தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகிவிட்டால் ப்ளே ஸ்கூல் அனுப்பி விடுவோம். அதிலிருந்து எழுது, படி, அதை செய்யாதே, இதை செய்யாதே என்று கட்டளையிட ஆரம்பித்து விடுவோம். ஆதலால் குழந்தை பருவத்திலாவது நிம்மதியாக குழந்தையை தாலாட்டி, சீராட்டி வளர்க்க ஆசைப்படுங்கள். குழந்தைக்கும் நல்ல சுதந்திரத்தை கொடுங்கள். இதுதான் தாய்க்கும் சேய்க்கும் அன்புடன் ஆரோக்கியத்தை கொடுக்கும். 'தாய்மை என்ற கோணத்தில் எல்லா பெண்களும் அழகாகி விடுகிறார்கள்' என்பது பெண்களை உற்சாகப்படுத்தும் வார்த்தை அல்லவா? அதன்படி நடப்போம்; தாய்மையை மதிப்போம்!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT