https://www.magnum.org.in
வீடு / குடும்பம்

டிஜிட்டல் பூட்டின் அவசியம் தெரியுமா?

நான்சி மலர்

பூட்டு என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது திண்டுக்கல் பூட்டுதான். இந்தப் பூட்டு அதனுடைய  நம்பகத்தன்மைக்கும் உறுதிக்கும் பெயர் போனது. ஆனால் இந்த நவீன காலத்தில் பூட்டையும் சாவியையும் வைத்துக்கொண்டு மாற்றி மாற்றி பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. சாவியை தொலைத்து விட்டால் அதனால் ஏற்படும் தொல்லைகளை தவிர்க்கவே இந்த காலத்தில் டிஜிட்டலாக பூட்டுக்கள் வந்து விட்டன.

எல்லாமே டிஜிட்டலாக மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் பூட்டு மட்டும் ஏன் இன்னும் பழசாகவே இருக்க வேண்டும்? டிஜிட்டல் பூட்டுகளின் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

இதற்கு தனியாக சாவி என்பதே தேவையில்லை. நம்முடைய போனில் இருந்தே திறப்பது, மூடுவது என்று சகலத்தையும் டிஜிட்டலாகவே செய்து விடலாம்.

தனித் தனியாக நமது குடும்பத்தினர், நண்பர்கள் என்று பாஸ்வேர்டு வைத்துக்கொள்ளலாம். இதனால் வீட்டுக்கு தெரிந்தவர்கள் வருவார்கள் என்று சாவியை பூந்தொட்டியின் கீழ் மறைத்து வைத்து விட்டு போக வேண்டிய அவசியமில்லை.

உள்ளே யார் வந்தார்கள், வெளியே யார் சென்றார்கள் என்று எல்லா தகவல்களையும் சேமித்து நம்முடைய கைப்பேசிக்கு தெரிவித்து விடும்.

சில சமயங்களில் கதவை மூடாமல் மறந்து விட்டு சென்றுவிட்டால், ஸ்மார்ட் லாக் கதவுகளை சார்த்த சொல்லி கைப்பேசிக்கு தகவல் தெரிவித்து விடும் என்பது மேலும் ஆச்சரியமான விஷயம்.

டிஜிட்டல் பூட்டை நம்முடைய குரலை வைத்து கூட கட்டுப்படுத்தி கொள்ளலாம். கைரேகையையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை சுலபமாகப் பயன்படுத்த முடியும். சாவியை மறந்து விட்டு வருவது, தொலைத்து விட்டு தேடுவது என்ற பிரச்னைகள் இதில் கிடையாது.

என்னதான் டிஜிட்டலாக பூட்டை பயன்படுத்தினாலும் 5 முதல் 8 வருடமே இது தாங்கும். பாதுகாப்பு பிரச்னைகள் ஏதும் பெரிதும் வராது. உடைத்து கொண்டு செல்ல முயற்சித்தால், உடனே அலாரம் அடித்து காட்டிக் கொடுத்து விடும்.

ஸ்மார்ட் லாக்குகளை வீடுகளில் மட்டுமில்லாமல், பள்ளிகளில், மருத்துவமனைகளிலும் பயன்படுத்துகிறார்கள். பல நாடுகளில் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் லாக்கை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

எப்படி இந்தத் தொழில்நுட்பத்தில் பல சாதகங்கள் இருக்கிறதோ அதேபோல சில பாதகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. வருடத்திற்கு ஒரு முறை பேட்டரியை நிச்சயமாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இது முழுவதும் பேட்டரியிலும் மின்சாரத்திலேயும் இயங்குவதால் மின்சாரம் இல்லாத சமயங்களில் பயன்படுத்துவது கடினமாகிவிடும்.

ஸ்மார்ட் லாக் சற்று விலை அதிகமாக இருந்தாலும் பாதுகாப்பு தன்மையை கருத்தில் கொண்டு பார்த்தால் பயனுள்ளதாகவே இருக்கிறது.

எப்படி படிக்கட்டுகளுக்கு மாற்றாக லிப்ட் வந்ததோ, போனுக்கு பதில் கைப்பேசி வந்ததோ அதேபோல பூட்டு சாவிக்கான மாற்றாக டிஜிட்டல் லாக் இன்னும் சில காலங்களில் எல்லோர் வீட்டிலும் வந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT