ஃபேன் பாய் https://www.applesfera.com
வீடு / குடும்பம்

ஃபேன் பாயாக இருப்பதன் சாதக, பாதகங்கள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

பேன் பாய் (Fan boy) என்பவர் ஒரு குறிப்பிட்ட பிரபலங்களுக்கு ரசிகராகவோ அல்லது பிராண்டட்  ஆடைகள், கேட்ஜெட்கள் பிற சாதனங்கள் போன்றவற்றின் தீவிர விசுவாசியாகவோ இருக்கும் ஒரு இளைஞரைக் குறிக்கிறது. ஒரு ஃபேன் பாயாக இருப்பதன் சாதக, பாதகங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஃபேன் பாயின் குணாதிசயங்கள்: ஒரு ஃபேன் பாய் தனக்கு மிகவும் பிடித்த பிராண்டட் உடைகளை மட்டுமே அணிவார். மனம் கவர்ந்த கேட்ஜெட்டுகளை மட்டுமே வாங்கி உபயோகிப்பார். தனக்கு மிகப் பிடித்தமான நடிகர், பாடகர் விளையாட்டு வீரர், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுக்கு தீவிரமான ரசிகர்களாக இருப்பார்கள். பிறர் என்ன சொன்னாலும் தனது கருத்திலிருந்து மாறுபட மாட்டார்கள். அவர்கள் மீது மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார்கள். தாங்கள் உபயோகப்படுத்தும் பிராண்டுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அவற்றை மட்டுமே உபயோகிப்பார்கள்.

ஃபேன் பாயாக இருப்பதன் நன்மைகள்:

பேரார்வம் மற்றும் மகிழ்ச்சி: தனக்குப் பிடித்த ஒன்றில் தீவிரமாக, ஆழமான விசுவாசமும் ஈடுபாடும் காட்டுவது ஃபேன் பாயாக இருப்பவரின் பேரார்வத்தை காட்டுகிறது. மேலும், அவருக்கு அது மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும். ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் பழகுவதற்கும் கலந்துரையாடுவதற்கும் ஃபேன் பாய் மொமென்ட் உதவுகிறது.

வலுவான சமூகத் தொடர்பு: தன்னைப் போலவே ஃபேன் பாயாக இருக்கும் இளைஞர்களை மிக எளிதில் கவர்ந்து விடுவார்கள். இவர்களுக்கு வலுவான சமூகத் தொடர்புகள் மற்றும் நட்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

நிபுணத்துவம்: தங்களுக்கு மிகப் பிடித்தமான விஷயங்கள் பற்றி ஆழமான, விரிவான அறிவு இருக்கும். உதாரணமாக ஒருவர் ஆப்பிள் ஐபோனை தொடர்ந்து உபயோகப்படுத்துகிறார் என்றால் அதைப் பற்றிய நுணுக்கமான, நுட்பமான விஷயங்களைப் பற்றிய ஆழமான  நிபுணத்துவம் அவருக்கு இருக்கும். அதைப் பற்றி அவர் சகலமும் தெரிந்து வைத்திருப்பார்.

ஃபேன் பாயாக இருப்பதன் தீமைகள்:

சார்பு நிலை: தங்களுக்கு விருப்பமான பிராண்ட் அல்லது பொருட்களின் மீது வலுவான சார்புத்தன்மை கொண்டிருப்பார்கள். இதனால் மாற்று பொருட்களை நிராகரிப்பார்கள். அவை சிறந்தவைகளாகவே இருந்தாலும் அவற்றை இவர்கள் புறக்கணிப்பதன் மூலம் நல்ல பொருட்களை உபயோகிக்காமலே போகலாம். அதைப் பற்றி அனுபவங்களையும் அவர்கள் இழக்கிறார்கள்.

நச்சு நடத்தை: ஃபேன் பாய்களின் தீவிர விசுவாசத்தன்மை சில நேரங்களில் சமூக வலைதளங்களில் மிகவும் கடுமையான வாதத்தை முன்வைக்க செய்கிறது. வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவது, அவர்களைப் பற்றி இழிவாக கமெண்ட் போடுவது போன்ற நச்சு நடத்தைக்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்கள் மனநிலையில் மாறுபாடுகள் உண்டாகலாம்.

அதிக முதலீடு: பிடிவாதமாக தங்களுக்குப் பிடித்த பொருட்களின் மேல் அதீத ஆசை வைப்பதன் காரணமாக இவர்கள் அதில் அதிகமாக பண முதலீடு செய்யலாம். இதனால் நிதி இழப்பும் ஏற்படலாம். உறவுகளின் விமர்சனத்திற்கு உள்ளாகலாம். இதனால் மன ஆரோக்கியம் கூட பாதிக்கப்படலாம்.

விமர்சனத்தை கையாள்வதில் சிரமம்: பிறர் கூறும் நியாயமான கருத்துக்களை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி தாங்கள் எதிர்பார்க்கும் விமர்சனம் மட்டுமே வர வேண்டும் என்று நினைப்பதால் எதிர்மறையான கருத்துக்களை கையாள மிகவும் சிரமப்படுவார்கள். இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படும். பிறருடன் இது மோதலுக்கு வழிவகுக்கும்.

ஃபேன் பாயாக இருப்பது ஆர்வம் மற்றும் சமூகத் தொடர்பு போன்ற நேர்மறையான அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனால், அதில் இருக்கும் அதீத ஈடுபாட்டுத் தன்மையால் அவர்களுக்கு தீமையான விஷயங்களும் ஏற்படலாம். எனவே, திறந்த மனதுடன் தன்னுடைய ஃபேன் பாய் மனநிலையை சமநிலைப்படுத்தி வைத்திருப்பது அவர்களது உள்ளத்திற்கு நல்லது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT