சமீபத்தில் புனே ரயில்வே சந்திப்பின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ரயில் பெட்டியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதில் அப்போது மனிதர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு மதுரை ரயில் நிலையம் அருகிலுள்ள போடி லைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டருந்த ஒரு ரயில்பெட்டி தீ விபத்தில் சிக்கியது. இதில் ஒன்பது பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். காஸ் சிலிண்டரை பயன்படுத்தி அந்த ரயில்பெட்டிக்குள் தேநீர் போடும்போது ஏற்பட்ட தீப்பொறி தீ விபத்துக்குக் காரணமாக இருந்தது. ட்ராவல்ஸ் நிறுவனம் ஒன்று 63 பேருக்கு ஒரு ரயில் பெட்டியை முன்பதிவு செய்துள்ளது. அந்தக் குழுவில் சமையற்காரர், டீ போடுபவர், உதவியாளர் என ஏழு பேர் வந்துள்ளனர். இவர்கள் மூலம் சட்ட விரோதமாக இரண்டு சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சம்பவ நாளன்று அந்த ரயில்பெட்டிக்குள் டீ போடப்பட்டுள்ளது. அப்போது, சிலிண்டர் குழாயில் கசிவு ஏற்பட்டு அதன் மூலம் தீப்பொறி வெளியேறியதில் ரயில்பெட்டி தீ பிடித்ததாம். காலை ஐந்து மணிக்கு எரியத் தொடங்கிய தீ, தீயணைப்புப் படையினரின் கடும் முயற்சிக்குப் பிறகு இரண்டு மணி நேரங்கள் கழித்துதான் அடங்கியது.
தீ விபத்துகள் ஆபத்தானவை. அதுவும் ரயில் தீ விபத்துகள் மேலும் ஆபத்தானவை. காரணம், வேகமாக அது பிற பெட்டிகளுக்குப் பரவ வாய்ப்பு அதிகம் உண்டு. அதுவும் ரயில் நகர்ந்து கொண்டிருப்பதால் காற்றின் அளவும் திசையும் பாதகமாக அமைந்தால் இந்த வேகம் வெகு வேகமாக மாறும்.
எரிவாயு சிலிண்டர்களில் கசிவு இருந்தாலும் பேராபத்து. அதனால்தான் அதுபோன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதை ரயில்வே தடை செய்திருக்கிறது.
ஆனாலும், அதிகாரபூர்வமாக தீயைப் பயன்படுத்தும் ரயில்பெட்டி ஒன்று பெரும்பாலான விரைவு ரயில்களில் காணப்படும். பயணிகளுக்கான உணவை சமைக்கும் பான்ட்ரி கார்! போதிய அக்கறை இல்லாமல் அங்கு சாதனங்கள் கையாளப்படுவதும் விபத்தில் முடியலாம். எனவே, இது தொடர்பாகவும் பல சட்ட திட்டங்கள் உண்டு.
அங்கு புகைப்பிடிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எண்ணெயில் நனைக்கப்பட்ட சணல் மற்றும் துணிகளை அலட்சியமாக கீழே போடக் கூடாது. எரியும் தீக்குச்சிகளும்தான். அங்குள்ள மின் கம்பிகள் தொங்கிக் கொண்டும் தளர்வாகவும் இருக்கக் கூடாது.
பொதுவாகவே, அனைத்து ரயில்பெட்டிகளிலும் உள்ள தீயணைப்புக் கருவிகள் நன்றாகத் தெரியும் வகையிலும் எளிதில் கையாளக்கூடிய இடங்களிலும் வைக்கப்பட வேண்டும். அவை இயங்கும் நிலையில் உள்ளனவா என்பதை சரிபார்த்தல், அவசரத்தின்போது அவற்றை சரியாக இயக்கும் பயிற்சி ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருத்தல், தீ விபத்துக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பும் சிஸ்டம் சரிபார்த்தல் போன்றவை அவசியம்.
ரயில் பெட்டியில் பற்றும் தீ சில நிமிடங்களிலேயே அந்த மொத்த பெட்டியையும் அழித்துவிடலாம். அதில் எழும் நச்சு வாயு இரண்டே நிமிடங்களில் பலரையும் நினைவிழக்க வைக்கலாம்.
வெப்பம் மற்றும் புகையை அறிந்து உணர்த்தும் (smoke detectors) கருவிகள் ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட வேண்டும். அப்படி நேரும்போது தானாகவே மின் சப்ளை துண்டிக்கப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதாவது, மனித முறையும் முயற்சி தேவைப்படாமலேயே தீ விபத்துகள் பரவாமல் தவிர்க்கப்படுவது (Automatic Fire Suppression systems) மேலும் நல்லது.
ரயில்வே சட்டத்தின் 164 மற்றும்165 பிரிவுகளின்படி எளிதில் தீப்பற்றக்கூடிய ஸ்டவ், எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றை யாராவது ரயிலில் எடுத்துச்சென்றால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்று வருடம் சிறை தண்டனையும் அளிக்கப்பட வாய்ப்புண்டு. பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் செல்லவும் தடை உண்டு என்பதை நினைவில் கொள்வோம். நிலைமையின் தீவிரத்தை மனதில்கொண்டு ஒவ்வொரு ரயில் பயணியும் ஜாக்கிரதையாக பயணிக்க வேண்டும்.