ஏப்ரல், மே மாதங்களில் நிறைய வீடுகள் காலி ஆவதும், புதிய வீட்டிற்கு மாறுவதும் இயல்பாக நடக்கும் விஷயங்கள்தான். பள்ளிக்கு அருகில், ஆபீசுக்கு செல்லும் தொலைவில், பஸ், ரயில் வசதி நிறைந்த இடத்தில் என வீடு பார்ப்பது வழக்கம். வாடகைக்கு வீடு பார்ப்பவர்கள் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
முதலில் முக்கியமானது தண்ணீர் வசதி. குறிப்பாக, சென்னையில் வீடு பார்க்கும்பொழுது தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்குமா? கோடை காலத்தில் தண்ணீர் வருமா? மழை காலங்களில் வீட்டுக்குள் மழை நீர் தேங்குமா? நாம் பார்க்கும் ஏரியா பள்ளமானதா அல்லது மேடானதா என்பது எல்லாம் பார்த்த பிறகே முடிவு செய்ய வேண்டும்.
அடுத்ததாக, வாடகைக்கு வீடு ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு வாடகை பற்றிய தெளிவு வேண்டும். அடிக்கடி வாடகை உயர்த்துவார்களா, பெயிண்ட் அடித்து நல்ல நிலைமையில் தருவார்களா? பெயிண்டிங் செலவு யாருடையது? வீட்டுப் பராமரிப்பு செலவு யாருடையது என தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் புதிதாகப் பார்க்கும் வீடு குழந்தைகளின் பள்ளிக்கு ஓரளவுக்கு அருகில் உள்ளதா? நடந்து செல்லும் தொலைவில் பேருந்து நிறுத்தம் உள்ளதா? அவசர ஆபத்திற்கு மெடிக்கல் ஷாப், பலசரக்கு கடை, காய்கறி கடை ஏதேனும் அருகில் உள்ளதா என்று பார்ப்பது நல்லது. மொத்தத்தில் போக்குவரத்துக்கு எளிதாக இருக்குமா என்பதை கவனிக்க வேண்டும்.
அடுத்து, வாடகைக்கு வீடு எடுப்பதா அல்லது லீசுக்கா என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
குடிபோகும், வீட்டின் உரிமையாளர் எப்படிப்பட்டவர், வீட்டில் ஏதேனும் வில்லங்கம் உண்டா என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அடுத்ததாக, வீட்டில் போதுமான அளவு ஜன்னல்கள், பாதுகாப்பான கதவுகள் உள்ளதா என்று பார்ப்பதுடன் காற்றோட்டமாக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
முக்கியமாக, நல்ல ஏரியாவாக இருக்க வேண்டும். அதாவது அக்கம் பக்கத்தில் இருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கவனிக்க வேண்டும். குடிகாரர்கள் அதிகம் இருப்பின் தினசரி நடக்கும் தகராறுகளைக் கண்டு நமக்கு மன உளைச்சல் ஏற்படும். எனவே அக்கம் பக்கம் நல்ல மனிதர்கள் இருக்கும் இடமாக குடி செல்வது அவசியம்.
நீங்கள் செல்லப்பிராணிகள் வைத்திருந்தால் அவற்றை வைத்துக்கொள்ள அனுமதி உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் புதிதாக செல்லும் பகுதியில் செல்போன் டவர் சிக்னல் கிடைக்குமா என்பதையும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
குப்பைக் கிடங்கு ஏதேனும் பக்கத்தில் இருந்தால் எந்த நேரமும் துர்நாற்றம் வீசும். இது சுவாசப் பிரச்னை போன்ற உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும். எனவே, குப்பை கிடங்குகள் அருகில் குடி போவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.