ஒரு குழந்தையின் நிகழ்கால வளர்ப்பில் இருக்கிறது அவர்களின் எதிர்கால வெற்றி. ஆம், பெற்றோரின் ஊக்கமும் பயிற்சியும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு விதைகளாகின்றன. படிப்புடன் விளையாட்டு, ஓவியம், நடனம் என அவர்கள் விரும்பும் கலைகளை கற்றுத் தருவதுடன் புத்தக வாசிப்பையும் அவர்களிடம் ஊக்குவிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
எல்லாவற்றிலும் சிறந்த ஒன்றைத் தங்கள் பிள்ளைகள் பெற வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், அனைத்திலும் சிறந்த புத்தக வாசிப்பை கற்றுத் தர வேண்டியது முக்கியம் என்பதை உணர வேண்டும். புத்தக வாசிப்பு என்ற பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், பெற்றோராக நாமும் சில விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும். அவை என்ன தெரியுமா?
1. குழந்தைகள் வாசித்து புரிந்துகொள்ளும் ஆரம்ப கால வயதிலேயே அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது நல்லது.
2. அவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுக்க வேண்டும்.1 முதல் 5 வரை படங்கள் உள்ள காமிக்ஸ் புத்தகங்களை அவர்கள் மொழியிலேயே வாசிக்க விடுங்கள்.
3. குழந்தைகள் புத்தகங்களை வைத்துப் படிக்கத் தகுந்த டேபிள், வெளிச்சம் மற்றும் இடம் போன்ற வசதிகளை பெற்றோர் செய்து தர வேண்டும்.
4. அவர்கள் எதிரில் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் அதை தொலைவில் வைத்து விட்டு, பிடித்த புத்தகங்களை வாங்கி அவர்கள் முன்பு முதலில் பெற்றோர் வாசிக்க வேண்டும்.
5. தங்கள் பெற்றோரின் புத்தக வாசிப்பை ஆர்வத்துடன் பார்க்கும் குழந்தைகள் நாளடைவில் அவர்களாகவே புத்தகங்களை எடுத்து வாசிக்கத் துவங்குவார்கள்.
6. பெற்றோர் வாசிப்புக்கு முக்கியத்துவம் தருவதைப் பார்க்கும் குழந்தைகளுக்கு புத்தகங்களின் மதிப்பு புரியும். தேவையான புத்தகங்களை தேர்வு செய்யும் ஆவல் அதிகரிக்கும்.
7. குழந்தைகளுடன் சேர்ந்து வாசிப்பது அவர்களுக்கு நாமும் வாசிக்க வேண்டும் என்ற ஊக்கத்தைத் தந்து புத்தகங்களுடன் ஒரு நேர்மறையான தொடர்பை ஏற்படுத்தித் தருகிறது.
8. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை வாசித்துக் காட்டும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும். இதனால் இலக்கிய வளம், உரை நடை திறனை குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க முடியும்.
9. உங்கள் அருகாமையிலுள்ள நூலகங்கள், புத்தகக் கண்காட்சிகள் மற்றும் புத்தக கடைகளுக்கு நேரம் கிடைக்கும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். இதனால் அவர்களுக்கு புத்தக உலகில் புதுப்புது அனுபவம் கிடைக்கும்.
10. நீங்கள் படித்த, உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் குறித்து அவர்களிடம் பகிருங்கள்.
அவர்களிடமும் அவர்களுக்குப் பிடித்த புத்தங்கள் மற்றும் கதைகள் குறித்து கலந்துரையாட வாய்ப்பு தாருங்கள். இதனால் அவர்களுக்கு சிந்திக்கும் திறன் மேம்படும்.
இப்படி குழந்தைகளிடம் பல்வேறு முறைகளில் பெற்றோர் புத்தக வாசிப்பை மேம்படுத்தினாலும், செல்போன், டிவி, கணினி போன்ற திரைகளிலிருந்தும் அவர்களை விடுவிக்கப் பழக வேண்டும். புத்தக வாசிப்பை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என உங்களின் பிள்ளைகள் உறுதி எடுக்கும் வரை அவர்களுடன் இணைந்து படித்து அவர்களுக்கு வழிகாட்டியாக மாறுவது பெற்றோரின் கடமை.