மன வலிமை உள்ளவர்கள் எப்போதும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களையே கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய உணர்வுகள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அழகாக சமாளிக்கத் தெரிந்தவர்கள். அவற்றை பயன்படுத்தி தனது வாழ்க்கையில் வெற்றியை அடைவார்கள். அவர்களிடம் கீழ்க்கண்ட 13 பழக்கங்கள் இருக்கவே இருக்காது என்று சொல்கிறார் அமின் மோரின் என்கிற சமூக சேவகர் மற்றும் உளவியலாளர். அவை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
மன வலிமை உள்ளவர்கள் ஒருபோதும் செய்யாத 13 விஷயங்கள்:
1. மன வலிமை உள்ள மக்கள் தங்களைப் பற்றியும் தங்களுடைய சூழ்நிலைகளை பற்றியும் பிறர் தங்களை எவ்வாறு மோசமாக நடத்தினார்கள் என்பதைப் பற்றியும் நினைத்து கவலைப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பார்கள். அதேசமயம் வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க ரோஜாக்கள் நிறைந்த மலர் படுக்கையல்ல, அதில் முட்களும் உண்டு என்று அறிந்தவர்கள்.
2. தங்களுடைய ஆற்றலை விட்டுத் தர மாட்டார்கள். பிறர் தங்களை கட்டுப்படுத்தவோ அதிகாரத்தை பிரயோகிக்கவோ இவர்கள் விடுவதில்லை. தங்களுடைய உணர்ச்சிகளை நன்றாக கையாளத் தெரிந்ததால், ‘அவர் என் மனதை நோகடித்து விட்டார்’ என்று சொல்ல மாட்டார்கள்.
3. மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளவர்கள். மாற்றங்கள் வாழ்க்கையில் தவிர்க்க இயலாது என்பதைப் புரிந்து கொண்டு முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள்.
4. இவர்கள் ஒருபோதும் தொலைந்துபோன தனது பொருட்களைப் பற்றியோ போக்குவரத்து நெரிசலைப் பற்றியோ புலம்புவது இல்லை.. தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை.
5. அவர்கள் பிறர் மேல் கருணையோடும் அன்போடும் இருந்தாலும், அவர்களை எல்லா நேரத்திலும் திருப்திபடுத்த வேண்டும் என்று முயற்சி செய்வதே இல்லை. எந்த இடத்தில் நோ சொல்ல வேண்டும் என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியும். அதை சொல்வதற்கு அவர்கள் பயப்படுவதில்லை.
6. முட்டாள்தனமான, ரிஸ்க்கான காரியங்களை அவர்கள் செய்வதில்லை அதேசமயம் வாழ்க்கைக்குத் தேவையான ரிஸ்கை எடுக்கிறார்கள். ஒரு முடிவு எடுக்கும் முன்பு அதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்த பின்பே எடுக்கிறார்கள்.
7. இவர்கள் ஒருபோதும் கடந்த காலத்தில் வாழ்வதில்லை. அவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள். இன்றைய நாளில் வாழ்கிறார்கள். வருங்காலத்திற்கு நன்றாகத் திட்டம் தீட்டுகிறார்கள்.
8. தான் செய்த தவறுகளை திரும்பச் செய்வதில்லை. பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு விலக்கிவிடுகிறார்கள்.
9. பிறரின் வெற்றியை பாராட்டுகிறார்கள். அதைப்பற்றி பொறாமைப்படுவது இல்லை. தங்கள் கடின முயற்சியினால் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறார்கள்.
10. தோல்வியைக் கண்டு அஞ்சி முயற்சியை கைவிடுவது இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்கள்.
11. தனிமையில் இருப்பதற்கு பயப்படுவதில்லை. தங்களுடன் நேரம் செலவழிப்பதில் ஆனந்தம் கொள்கிறார்கள். தங்களை சந்தோஷப்படுத்துவதற்கு பொழுதுபோக்குகளும் பிறரும் தேவையில்லை என்று நினைப்பார்கள். தங்களுக்கான சந்தோஷத்தை அவர்களாகவே உருவாக்கிக்கொள்ள முடியும்.
12. பிறர் தங்களை கவனித்துக் கொள்வார்கள். இந்த உலகம் எல்லாவற்றையும் அவர்களுக்காகக் கொடுக்கும் என்று ஒருபோதும் நினைப்பதில்லை. தங்களுடைய திறமையினால் ஜெயிக்கவே விரும்புகிறார்கள்.
13. தங்கள் முயற்சிகளுக்கான பலனை அவர்கள் உடனடியாக எதிர்பார்ப்பது இல்லை. தங்களுடைய முழு திறமையையும் நேரத்தையும் செலவழித்து செயல்கள் வெற்றி அடையும் வரை பொறுமை காக்கிறார்கள்.
மேற்கண்ட இந்த 13 விஷயங்களும் உங்களுக்கும் இருந்தால் நீங்களும் மிகவும் மன வலிமை உள்ளவர்கள் என்று பொருள்.