உறவுகளும் நட்புகளும் எப்போதும் உடன் இருப்பதுதான் ஒருவருக்கு மிகப் பெரிய பலம் ஆகும். அந்த உறவுகளுடனான பந்தம் எப்போம் வலிமையுடன் இருக்க ஒருவர் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது வாழ்வில் மிகவும் அவசியம் ஆகும்.
1. உறவுகள் சுமூகமாக இருக்க வேண்டும் என்றால் தயவு செய்து உறவினர்களிடம் மட்டும் கடன் வாங்கி விடாதீர்கள்!
2. சின்னச் சின்ன சண்டை வந்தாலும் அதனை பேசிப் பேசி பெரிதாக்காமல் இருப்பது நல்லது.
3. உறவினர்கள் ஏதாவது கூறும்போது உங்கள் மனதிற்கு அது சரி என்று படாவிட்டாலும் வாதம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.
4. உங்களின் தேவைகளுக்கு மட்டுமே அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்.
5. சிலர் காரியவாதியாக இருப்பார்கள். அவர்களிடம் சற்றே கவனமாக ஒதுங்கி இருங்கள். ஆதாயத்திற்காக மட்டுமே பழகுபவர்கள் ஆபத்தானவர்கள்.
6. உறவு என்பது பரஸ்பரம் புரிதலுடனும், நம்பிக்கையுடனும் இருத்தல் வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும், ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைப்பதும் உறவு நிலைத்திருக்க மிகவும் அவசியம்.
7. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இருப்பதே உறவுகளுக்கு இடையே பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கான வழியாகும்.
8. ஒருவர் மேல் வைக்கும் நம்பிக்கை உடையும்போதுதான் உறவில் விரிசல் ஏற்படும். எனவே, பரஸ்பரம் நம்பிக்கையை காப்பது நல்லது.
9. தவறு யாருடையதாக இருந்தாலும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போகார்! என்று சொல்வார்கள்.
10. ‘எதையும் வெளிப்படையாகப் பேசுபவன் நான்’ என்று கூறிக்கொண்டு எதையாவது பிதற்றாமல் இருந்தாலே முக்கால்வாசி பிரச்னைகள் ஏற்படாது.
11. வீண் வம்பு, வெட்டிப்பேச்சை குறைத்துக் கொள்வது உறவுகளுக்கு இடையே பிரச்னைகள் வராமல் இருக்கும்.
12. பரஸ்பரம் மரியாதை கொடுத்து பழகுவது உறவை நீடிக்க வைக்கும்.
13. குறை, நிறைகள் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. எனவே, குறைகளை பெரிது படுத்தாமல் இருப்பதுதான் உறவுகளுக்கு இடையே பிரச்னைகள் உருவாகாமல் தடுக்கும்.
14. உறவுகளுக்கிடையே பணத்தால் ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். பணத்தால்தான் போட்டி, பொறாமைகள் ஏற்படும். எனவே, ஒருவரின் வசதியை கருத்தில் கொள்ளாமல் அவருடைய குணத்தைக் கொண்டு அவர்களுடன் பழகுவது உறவை நீடித்திருக்கச் செய்யும்.