Do you know what words not to say to your spouse even in anger? https://news4tamil.com
வீடு / குடும்பம்

கோபத்தில் கூட வாழ்க்கைத் துணையிடம் சொல்லக்கூடாத வார்த்தைகள் எவை தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

திருமணம் என்று அழகிய பந்தத்தில் இணைந்த பின்பு வாழ்க்கைத் துணையை அன்போடும் மரியாதையோடும் நடத்துவது மிகவும் அவசியம். நிறைய திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கு காரணம் இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொள்ளும் படலத்தில்தான் ஆரம்பிக்கின்றன. என்னதான் கணவன் மனைவி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அதீத அன்பு வைத்திருந்தாலும் சில சமயங்களில் கோபத்தில் சில வார்த்தைகளை சொல்வதுண்டு. அது அவர்கள் மனதை மிகவும் பாதிக்கும். அதுபோன்ற வார்த்தைகளை அவர்களிடம் சொல்லக்கூடாது. அவை என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. நீ ரொம்பத்தான் ஓவரா ரியாக்ட் பண்ற: இந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், இது அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அமையும். சரியாக அவர்களுக்கு பிறர் உணர்வுகளை மதிக்க தெரிவதில்லை; சாதாரண விஷயத்தைக் கூட பூதாகரமாக்கிப் பார்ப்பது போன்ற பிம்பத்தைத் தருகிறது இந்த வாக்கியம். எனவே, இதை  அவர்களிடம் சொல்லக்கூடாது.

2. ஏன் எப்பவுமே என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குற: ஏதாவது ஓரிரண்டு சந்தர்ப்பத்தில் வாழ்க்கைத் துணை உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்திருக்கலாம். ஆனால், இந்த வாக்கியம் எப்போதுமே உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடப்பது போல அமைந்திருப்பதால் அது அவர்கள் மனதை காயப்படுத்தும். அவர்களை குற்ற உணர்விலும் ஆழ்த்தும். எனவே, ‘இந்த சந்தர்ப்பத்தில் நீ பேசுறது சரியில்ல’ என்று சொல்லலாம்.

3. நீ எப்பவுமே இப்படித்தான்: இதுவும் அவர்களின் மொத்த இமேஜையே காலி செய்யக்கூடியதாக, அவர்களின் ஒட்டுமொத்த குணாதிசயத்தையே கேலி செய்வது போல இருக்கிறது. எனவே, பொத்தாம் பொதுவாக சொல்லாமல் அவர்கள் எந்த விஷயத்தில் சரியில்லை என்பதை  நாசூக்காக எடுத்துச் சொல்லலாம்.

4. குழந்தைகளுக்காகத்தான் உன்னோடு இருக்கிறேன்: ஒருபோதும் இந்த வார்த்தையைச் சொல்லாதீர்கள். இந்த வார்த்தை, அவர் மேல் உங்களுக்கு முழு அன்பில்லை. குழந்தைகள் பொருட்டுதான் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து இருக்கிறீர்கள் என்பது போலவும், அவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விட்டு விட்டுப் போய் விடுவீர்கள் என்பது போலவும் இருப்பதால் இதை சொல்லவே சொல்லாதீர்கள்.

5. நான் உன்னை நம்பவே மாட்டேன்: உன்னை எல்லாம் நம்பவே கூடாது என்பது மாதிரி விளையாட்டுக்கு கூட சொல்லாதீர்கள். கணவன் மனைவி தாம்பத்தியத்திற்கு முக்கியமான அடிப்படை விஷயமே நம்பிக்கைதான். அதுவே ஒரு வெற்றிகரமான தாம்பத்தியத்திற்கு அடையாளம். இந்த அடிப்படையையே காலி செய்வது போல நம்ப மாட்டேன் என்று சொல்வது தகாது.

6. நான் உன்னை திருமணம் செய்துக்காமலே இருந்திருக்கலாம்: எவ்வளவு கோபத்திலும் இந்த வார்த்தைகளை சொல்லவே கூடாது. அது தாம்பத்தியத்தை வெகுவாக பாதிக்கும். அத்தனை சீக்கிரத்தில் இது ஏற்படுத்திய காயத்தின் வடு மறையாது.

7. நீ செஞ்சதை மன்னிக்கவே முடியாது: இந்த உலகத்தில் யாருமே 100 சதவிகிதம் சரியானவர்கள் அல்ல. உங்களை கோபப்படுத்துமாறு ஏதாவது செய்திருந்தாலும் அப்போதைக்கு அது உங்கள் மனதை வருத்தப்படுத்தலாம். ஆனால், நிதானமாக யோசித்துப் பார்த்தால் அது அவ்வளவு பெரிய தவறு இல்லை என்று புரியும். எனவே, ’நீ செஞ்சது எனக்கு வருத்தமா இருக்கு’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.

8. என்னை விட பெட்டரா உனக்கு யாரு கிடைச்சிருப்பா?: இப்படிச் சொல்ல வேண்டாம். ஏனென்றால், விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டீர்கள் என்பதை மறக்கவே கூடாது. அவர் உங்களுடைய வாழ்க்கைக்கு பொருத்தம் இல்லாதது போல பேசினால் அவர் மனது  நிச்சயம் புண்படும்.

9. நீ அப்படியே உங்க அம்மா, அப்பா மாதிரி நடந்துக்கற: வாக்குவாதத்தின்போது இந்த வார்த்தைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வாழ்க்கை துணையை யாருடனும் ஒப்பிட்டு பேசக்கூடாது. எதிலும் குறிப்பாக அவர்கள் தான் தாய் தந்தையுடன் ஒப்பிட்டு பேசினால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், மாமனார், மாமியாரை தாக்கிப்பேசுவது போல இருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் துணைவர் உங்களை மன்னிக்க மாட்டார்.

10. உனக்கு நிஜமாவே என் மேல அன்பு இருந்தா: இந்த வார்த்தையும் அவர்களுடைய அன்பை நீங்கள் சந்தேகப்படுவதாக அமையும். இந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT