Japan Passport https://visaindex.com
வீடு / குடும்பம்

உலகிலேயே ஜப்பானிய பாஸ்போர்ட் மதிப்பு மிக்கதாகக் கருதப்படுவதன் காரணம் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

லகிலேயே ஜப்பானிய பாஸ்போர்ட்டுக்கு மிகவும் மதிப்பும் சக்தியும் அதிகம். அதற்கான காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இலவச விசா: ஜப்பானிய பாஸ்போர்ட் வைத்திருந்தால் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். 2024ம் ஆண்டு நிலவரப்படி ஜப்பானிய மக்கள் முன்கூட்டியே விசா வாங்கத் தேவையில்லாமல் 193 நாடுகளுக்குச் செல்லலாம். இது சர்வதேச பயணத்திற்கான மிகவும் வசதியான பாஸ்போர்ட்டுகளில் ஒன்றாகும். விசா தேவையில்லாத நாடுகளின் விரிவான பட்டியலில் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா போன்ற நாடுகளும் அடங்கும். இதனால் ஜப்பானியர்களுக்கு விசா பெற காத்திருக்கும் நேரம், செலவு போன்றவை குறைகிறது.

ஜப்பானின் உலகளாவிய நிலைப்பாடு: உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் ஜப்பான் வலுவான ராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, ஜி-செவன், ஜி20 மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளின் உறுப்பினராக ஜப்பான் இருக்கிறது. உலகளாவிய விவகாரங்களில் குறிப்பிடத்தக்க பங்கை ஜப்பான் வகிக்கிறது. இதனால் தனது குடிமக்களுக்கு பயணத்தை எளிதாக்கும் பல இருதரப்பு ஒப்பந்தங்களை நிறுவியுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை: உலகில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் மூன்றாவது பெரிய நாடு ஜப்பான். அதன் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, உற்பத்தித் திறன் மற்றும் வலுவான நிதி சந்தைக்கு பெயர் பெற்றது. இந்த பொருளாதார பலம், நாட்டின் சர்வதேச நற்பெயருக்கும், ஜப்பானிய குடிமக்கள் மீது மற்ற நாடுகள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் பங்களிக்கிறது.

சட்டத்தை மதிக்கும் பண்பு: ஜப்பானிய பயணிகள் பெரும்பாலும் குறைந்த ஆபத்து உள்ள மக்கள் என்று கருதப்படுகிறார்கள். இவர்கள் விசா விதிகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு இணங்கி நடந்து கொள்வார்கள். அதனால் சட்ட விரோத குடியேற்றம் தொடர்பான ஆபத்துக்கள் இவர்களிடம் இல்லை. சட்டத்தை மதிக்கும் பண்பினால் நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்க வாய்ப்பு அதிகரிக்கிறது.

நிலையான அரசியல் சூழல்: நிலையான ஆட்சி, வலுவான சட்ட ஆட்சி  மற்றும் குறைந்த அளவிலான ஊழலுடன் ஜப்பான் நிலையான அரசியல் சூழலை கொண்டுள்ளது. இந்த ஸ்திரத்தன்மை நாட்டின் சர்வதேச நிலைப்பாட்டை மேம்படுத்துகிறது. ஜப்பானிய கலாசாரம் மற்றும் அந்த சமூகத்தின் மேல் நேர்மறையான கருத்து அதன் குடிமக்களுக்கு எளிதான பயண அணுகலை வழங்குகிறது. வெளிநாடுகளில் உள்ள ஜப்பானிய குடிமக்களுக்கு வலுவான தூதரக ஆதரவு மற்றும் பாதுகாப்பை ஜப்பான் தருகிறது. எனவே, அந்த நாட்டு பாஸ்போர்ட் சக்தி வய்ந்ததாக இருக்கிறது.

ஜப்பானின் கலாசார செல்வாக்கு: ஜப்பானின் கலாசார செல்வாக்கு ‘மென்மையான சக்தி’ என்று அறியப்படுகிறது. அதன் உணவு வகைகள், பொழுதுபோக்கு (அனிமே மற்றும் ஜே-பாப் போன்றவை), ஃபேஷன் மற்றும் பாரம்பரிய கலைகள் மூலம் பரவுகிறது. இந்தக் கலாசார ராஜதந்திரம் உலகளவில் ஜப்பானின் பிம்பத்தை மேம்படுத்துகிறது. நல்லெண்ணத்தையும் பரஸ்பர மரியாதையையும் வளர்க்கிறது.

நம்பர் ஒன் ஜப்பான்: ஜப்பானிய அரசாங்கம் மற்ற நாடுகளுடன் விசா இல்லாத ஒப்பந்தங்களை வழங்க பேச்சுவார்த்தை நடத்தவும் பராமரிக்கவும் தீவிரமாக செயல்படுகிறது. சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் இதேபோன்ற விசா இல்லாத அணுகலுடன் உயர்தர வரிசை பாஸ்போர்ட்டுகளை கொண்டுள்ளன. ஆனாலும், ஜப்பான் முன்னணியில் உள்ளது. ஆசியாவில் ஜப்பானின் செல்வாக்கு மற்றும் அதன் வலுவான கூட்டணியில், மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது அதன் பாஸ்போர்ட்டின் சக்திக்கு அதிக பங்களிக்கின்றன.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT