பாத்ரூமுக்குச் செல்லும்போதும் செல்போனை கூடவே எடுத்துச் செல்லும் பழக்கமுடையவரா நீங்கள்? அப்படித்தான் என்றால் அது நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்து மட்டுமின்றி, பலவகையான நோய்களையும் நமக்கு உண்டுபண்ணும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது மொபைல் போன் என்பது நம்மில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. எங்கு சென்றாலும் அதனுடனேயே பயணிக்கிறோம். பாத்ரூமுக்கு சென்றால் கூட போனை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. அந்த அளவிற்கு அதற்கு அடிமையாகி வருகிறோம். பலருக்கும் பாத்ரூமில் மொபைலை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதோடு, பலருக்கும் போன் கையில் இருந்தால் நீண்ட நேரம் பாத்ரூமிலேயே செலவிடுகிறார்கள். அப்படி இருப்பவர்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காரணம், ‘நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்திருப்பது இடுப்பு பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன் இது இரத்த ஓட்டத்தையும் பாதிக்கும். பெல்விக் சதைகளை வலுவிழக்கவும் செய்யும்’ என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அது மட்டுமல்ல, பைல்ஸ் வருவதற்கான வாய்ப்புகளும் இதனால் அதிகம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கழிவறையில் பல வகையான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை பாத்ரூமில் நாம் போனை பயன்படுத்தும்போது நம்முடைய போனை அடைந்து, அங்கிருந்து நம் கைகள் மூலம் அல்லது வேறு வகையிலோ நமது உடலுக்குள் நுழைகிறது. இதன் காரணமாக நாம் நோய்வாய்ப்படும் வாய்ப்பை அடைகிறோம். அத்தியாவசியமான சமயங்களில் மட்டுமே போனை கையாள்வது அவசியம். எப்போதும் போனும் கையுமாக இருப்பது உடலில் பல பிரச்னைகளை உண்டுபண்ணும். மேலும், மொபைல் போனின் தொடுதிரையை அவ்வப்போது சுத்தப்படுத்துவதும் அவசியம்.
கழிப்பறை இருக்கைகள் பல வகையான கிருமிகளை இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது. நீண்ட நேரம் மொபைல் போனுடன் கழிப்பறையில் அமர்ந்திருந்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் தொற்றுகள் பரவும் அபாயம் அதிகரிக்கும். அதிக நேரம் கழிப்பறையில் அமர்ந்தபடி போனை பயன்படுத்தும்பொழுது முதுகு வலி பிரச்னையை உண்டுபண்ணும். அத்துடன் மலக்குடலில் அழுத்தம் ஏற்பட்டு பைல்ஸ் போன்ற தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும்.
கழிவறையில் அதிக நேரம் அழுத்தமாக அமர்ந்திருக்கும்பொழுது இரைப்பை மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குடல் நோயுடன், சிறுநீர் தொற்றும் ஏற்பட வாய்ப்புண்டு. முக்கியமாக, நீண்ட நேரம் போனை பயன்படுத்துவது நம் உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் பெருமளவில் பாதிக்கும். மன அழுத்தம், எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமத்தை உண்டுபண்ணும். இதனால் தூக்கமும் தடைபடலாம். எனவே, கைபேசியை அளவோடு பயன்படுத்துவது, குறிப்பாக பாத்ரூம் செல்லும் சமயம் எடுத்துச் செல்வதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
ஆய்வுகளின்படி கழிவறையில் உள்ள கிருமிகள் நம் மொபைல் போன் திரைகளில் 28 நாட்கள் வரை உயிரோடிருக்கும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களால் கழிப்பறை இருக்கைகளை விட 10 மடங்கு அதிகமான கிருமிகளை எடுத்துச் செல்ல முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கழிவறை என்பது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி, நம் உடலை சுத்தமாக்கும் இடம். அங்கு தேவையில்லாமல் அதிக நேரம் செலவழிப்பது பல நோய்களை உருவாக்கும் என்பதை மறக்க வேண்டாம்.