கணவன் - மனைவிக்கு இடையே உள்ள வயது வித்தியாசத்திற்கு ஏற்ப திருமண வாழ்வு மகிழ்ச்சி தரும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது. இருவருக்கு இடையே அதிக வயது வித்தியாசம் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் உண்டாகும். அது எந்த விதத்திலும் இருவருக்கும் பொருந்தாது. இதனால் மன வேறுபாடுகள் அதிகரிக்கும். எப்பொழுதும் பிரச்னைகள் தலைதூக்கும் என்றும் கூறப்படுகிறது.
வெற்றிகரமான திருமண வாழ்விற்கு கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் எல்லா வகையிலும் திருப்திபடுத்துவது அவசியம். இருவரின் வயதில் அதிக வித்தியாசம் இருப்பின், ஒரே மாதிரியான சிந்தனையோ, கருத்துக்களோ, ஈடுபாடோ இல்லாமல் போகலாம். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு அதிகரிக்க அதிகரிக்க பிரிவு என்பது நிகழ்ந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது.
கணவனுக்கு வயது குறைவாகவும் மனைவிக்கு வயது அதிகமாகவும் இருப்பதை, ‘மே - டிசம்பர் ரிலேஷன்ஷிப்’ என்பார்கள். தன்னை விட வயதில் குறைந்த பெண்ணை ஒரு ஆண் எந்தளவு நேசிக்கின்றான், தன்னை விட வயதில் மூத்த பெண்ணை எந்த காரணத்துக்காக நேசிக்கின்றான் என்பதே, அந்தத் தாம்பத்தியத்தை நீட்டிக்கச் செய்து விடும்.
கணவன், மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது. இதைப் பேணுவதற்கு இரு தரப்பிலும் நிறைய மெனக்கெடுதல் அவசியம். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதும், விட்டுக்கொடுப்பதும், அன்புடன் நடந்து கொள்வதும் அவசியம் தேவை. திருமண வாழ்வில் மகிழ்ச்சி பெற வேண்டுமென்றால் ஒருவரையொருவர் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கண்ணியக்குறைவாக நடத்துவது குடும்பத்தில் ஒற்றுமையை குலைத்து, பதற்றமான சூழ்நிலையைத்தான் உருவாக்கும்.
இந்தப் புனிதமான உறவை பாதுகாக்க கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை புறக்கணித்தாலோ, உதாசீனப்படுத்தினாலோ வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது. திருமண வாழ்வில் தாம்பத்திய உறவு என்பது ஒரு பகுதி மட்டுமே. இதைத்தாண்டி உணர்வு ரீதியான பகிர்தல்கள் கணவன் மனைவியிடையே மிகவும் அவசியம். அவையெல்லாம் சரியாக இருந்தால் வயது வித்தியாசம் ஒரு பொருட்டே கிடையாது. மருத்துவ ரீதியாகவும் எந்த பிரச்னையும் வராது என்பதுதான் உண்மை.
உண்மையான காதல் (அன்பு) கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பட்சத்தில் வயது ஒரு தடையே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.