Dogs go to school
Dogs go to school 
வீடு / குடும்பம்

பள்ளிக்குச் செல்லும் நாய்கள்!

பாரதி

நாய்கள் வீட்டின் செல்லப் பிராணிகள். வீட்டை மட்டுமல்ல, தெருக்களையும் பாதுகாத்து வரும் முக்கியப் பொறுப்புகளை நாய்கள் வகிக்கின்றன. ஒருவர் தனிமையை உணரும்போது நாயை வாங்கி வளர்ப்பார்கள். ஏனெனில், மனிதர்களை விட நாய்கள் அன்பாகவும், கவனமாகவும், நன்றியுடனும் பார்த்துக்கொள்ளும். எப்படி நமக்கு சிலசமயம் மீள முடியாத துயரம் ஏற்படுமோ, அதேபோல் நாய்களுக்கும் ஏற்படுமாம்.

நாம், நம் வீட்டு நாயை தினமும் நடைப்பயணம் அழைத்துச் செல்வோம். நல்ல உணவுகள் கொடுத்து அன்பாகப் பார்த்துக்கொள்வோம். சில நாடுகளில் நாய்களுக்கென்று பள்ளிகளே திறந்திருக்கின்றனர். அப்படி நாய்கள் பள்ளிக்குச் செல்லும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அந்த வீடியோ காட்சிகள் நம்மையே அந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக உள்ளன.

காலையில் நேரத்திற்கு பள்ளி வாகனம் வந்துவிடுகிறது. பள்ளிக்குச் செல்லும்போது குழந்தைகள்கூட, ‘போக மாட்டேன்’ என்று அடம்பிடிக்கும். ஆனால், இந்த நாய்கள் வாகனம் எப்போது வரும் என்று காத்திருந்து வாகனம் வந்தவுடன் துள்ளிக் குதித்து வாகனத்தில் ஏறுகின்றன.

வாகனத்தில் ஏறியவுடன் ஆசிரியர்கள் சீட் பெல்ட் அணிவித்து அவற்றை உட்கார வைக்கின்றனர். அனைவரும் ஒருவருக்கொருவர் வரவேற்றுக்கொள்கின்றனர். புதிதாக வரும் நாய்க்கு சிறிய பரிசும் கொடுத்து உற்சாகப்படுத்துகின்றனர். அனைத்து நாய்களும் ஏறிய பின்னர், அனைவருக்கும் தின்பண்டங்கள் கொடுத்து அவர்களின் ஒழுக்கமான செயலுக்குப் பரிசளிக்கின்றனர். பின்னர், சரியாக காலை 7 மணிக்கு வாகனம் பள்ளிக்கு வந்துவிடுகிறது. பள்ளியில் சில முறையான வழக்கங்கள் உள்ளன. அதனை சரியாகப் பின்பற்றவும் அவர்களுக்கு கற்றுத் தந்துள்ளனர்.

முதலில் பள்ளிக்கு உள்ளே செல்லும்போது வரிசையாகத்தான் செல்ல வேண்டும். உள்ளே சென்றவுடன் ஒரு நீச்சல் குளம் உள்ளது. முதலில் அங்கு நாய்கள் சிறிது நேரம் நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். சில நாய்களுக்கு நீந்துவது பிடிக்காது. அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ஒரு பெரிய இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறது. அங்கு சென்று ஒரு மணி நேரம் விளையாடிய பின்னர்தான் வகுப்புக்குச் செல்ல வேண்டும்.

தினமும் என்னென்ன செய்ய வேண்டும், குடும்பத்துக்கு என்ன உதவியெல்லாம் செய்ய வேண்டும், தொந்தரவு செய்யாமல் இருப்பது எப்படி போன்றவை வகுப்பில் சொல்லித்தரப்படும். பின்னர் மதிய உணவு அங்கேயே வழங்கப்படும். மதிய உணவுக்கு பின்னர் மாலை முழுவதும் வெளியே சுற்றிப்பார்க்க அழைத்து செல்வார்கள். அது பெரும்பாலும் இயற்கை நிறைந்த இடமாகத்தான் இருக்கும். பின்னர் மாலையில் அதே வாகனத்தில் வீட்டிற்குச் சென்று விட்டுவிடுவார்கள்.

இதுபோன்ற பள்ளிகள் இருந்தால் நாய்கள் மட்டுமல்ல, அனைவருமே பள்ளிக்குச் செல்லத் துடிப்பார்கள். மேலும், மனதில் துயரம், சோகம் போன்றவற்றுக்கெல்லாம் இடமே இருக்காது.

அதிக அளவில் மக்களை ஈர்க்கும் உலகின் டாப் 10 மியூசியங்கள்!

iPad Mini: 2024 இறுதிக்குள் அறிமுகமாகும் ஆப்பிள் சாதனம்! 

கோயில் செல்லும்போது அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

ஏடிஎம் திருட்டு – பணத்தைப் பாதுகாக்க பத்து வழிகள்!

கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

SCROLL FOR NEXT