Ennam pol Vaazhkkai Endru En Sonnargal Theriyumaa?
Ennam pol Vaazhkkai Endru En Sonnargal Theriyumaa? meyyarinthuvaazhvoam
வீடு / குடும்பம்

எண்ணம் போல் வாழ்க்கை என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

ந்த ஒரு செயலைச் செய்யும்பொழுதும், பேசும் பொழுதும் நேர்மறை எண்ணத்துடனும், நல்ல நம்பிக்கையுடனும் பேசவும், செய்யவும் வேண்டும் என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். இதைத்தான், ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்பார்கள். நாம் எண்ணத்தில் எதைப் பதிக்கிறோமோ அந்த எண்ணத்திற்கு வலிமை அதிகம் உண்டு என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எங்கள் நட்பு வட்டத்தில் ஒருவர் எப்பொழுது, யாரிடம் பேசினாலும், ’என் இரண்டு பிள்ளைகளையும் என் தம்பிமார்கள் கடைசி வரையிலும் காப்பாற்றுவார்கள், பார்த்துக் கொள்வார்கள், விடவே மாட்டார்கள்’ என்றே கூறுவார். ‘உங்கள் பிள்ளைகளை நீங்கள்தானே பார்த்துக்கொள்ள வேண்டும். அதை ஏன் தம்பிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறுகிறீர்கள். இனி அப்படிக் கூறாதீர்கள்’ என்று யார் கூறினாலும் கேட்க மாட்டார். அணிச்சைச் செயலாக அவர் வாயிலிருந்து அந்த வார்த்தைதான் வரும்.

அதேபோல், ஏதாவது ஒரு பண்டிகை வந்து விட்டால், அவர்களின் தம்பிகளுக்கு முதலில் துணிமணிகள் மற்றும் வேண்டிய அத்தனையையும் வாங்கிக் கொடுத்து விட்டு, பிறகுதான் மனைவி மக்களுக்கு வாங்கித் தருவார். தம்பிமார்களும் இவர் சொல்வது எதையும் அப்படியே கேட்டு நடப்பார்கள். எதிர்த்துப் பேசவே மாட்டார்கள். அப்படி ஒரு பாசம் இவர்களுக்குள்.

சரியாக நண்பருக்கு 42 வயது ஆகியபோது நோய் வாய்ப்பட்டு அவர் இறந்து விட்டார். பிறகு மூன்று வருடம் கழித்து 42வது வயதில் அவர் மனைவியும் காலமானார்.

அந்த சமயத்தில் நண்பரின் இரண்டு பெண் குழந்தைகளையும், முழு பொறுப்பு எடுத்து கவனித்துக் கொண்டது அவரது தம்பிமார்கள்தான். அதிலும் கடைசி தம்பி அதிகப் பொறுப்பு. இவர்கள் இருவரின் மனைவிமார்களும் அதைவிட பாசத்தை அந்தப் பெண்கள் மீது கொட்டினார்கள். இந்தப் பிள்ளைகளும் சித்தப்பாக்களிடம் பாசமாக இருப்பது போல், சித்திமார்களிடமும் நடந்து கொண்டார்கள். ‘பெற்றோர் இல்லாத பிள்ளைகளை வேலை வாங்கி விட்டோம்’ என்று யாரும் கூறி விடாதபடிக்கு, எந்த ஒரு சிறு வேலையையும் செய்ய விடாமல் அவர்களின் சித்திமார்களே கவனித்துக் கொண்டார்கள்.

இந்தப் பெண்களை திருமணம் செய்து கொடுத்தபொழுது எல்லோரும் ஆச்சரியமாக கூறியது இதைத்தான். ‘‘அந்தப் பெண்களின் அப்பா அடிக்கடி கூறும் என் பிள்ளைகளை என் தம்பிமார்கள் கடைசி வரைக்கும் பார்த்துக் கொள்வார்கள். விடவே மாட்டார்கள் என்று கூறுவார். ஏன்தான் அவர் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை வந்ததோ தெரியவில்லை. அவர் நினைத்தது போலவே தம்பிமார்களே பார்த்துக்கொள்ளும்படி ஆகிவிட்டது. இது நேர்மறை சிந்தனையா? எதிர்மறை சிந்தனையா? தெரியவில்லை. ஆனாலும் 'நம் மனதில் இருப்பதை வாய் பேசும்' என்பதற்கு இணங்க. அவர் வாயிலிருந்து இந்த வார்த்தை வந்து விழுந்ததை மறக்க முடியாது” என்று கூறிக் கொண்டார்கள்.

ஆதலால் அன்பர்களே! அனைவரும் நேர்மறையான எண்ணங்களையே மனதில் பதிப்போம். நேர்மறையான வார்த்தைகளையே பேசுவோம். அது நம்மை நல்வழிக்கு இட்டுச் செல்லும் என்று ஒருமனதாக நம்புவோம்!

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT