Pregnant Woman 
வீடு / குடும்பம்

குறையில்லாத குழந்தைப் பேறு - தாயாகப் போகும் இளம் பெண்களே, கொஞ்சம் கேளுங்க!

பிரபு சங்கர்

மழலைச் செல்வம் ஒவ்வொரு பெற்றோருக்கும் கிடைக்கும் ஒரு சிறப்புப் பேறு. தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை எப்படியெல்லாம் வளரவேண்டும், எத்தகைய கல்வி பெறவேண்டும், எந்த மாதிரி வேலை பார்க்கவேண்டும், நல்லக் குடிமகனாக அந்தக் குழந்தை பெயர் எடுக்குமா என்றெல்லாம் ஒரு தாய் தன் கர்ப்ப காலத்தில் பலவாறாகக் கற்பனை செய்துகொள்வாள். எல்லாவற்றையும் விட, தன் குழந்தை எந்த உடல் கோளாறும் இல்லாமல் நலமாக வாழவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பாள்.

சில மனநல காப்பகங்களில் இயல்புக்கு மாறான வகையில் பல குழந்தைகள் அங்கே நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இந்தக் குழந்தைகளுக்கு இப்படி ஓர் அவல நிலை ஏன் ஏற்படுகிறது? அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில், சொந்தத்திலேயே திருமணம் செய்துகொள்வது, கரு தரித்தபின், அந்தக் குழந்தை வேண்டாம் என்பதற்காக பாதுகாப்பற்ற மருந்துகளை உட்கொள்வது என்ற காரணங்களை முக்கியமாகச் சொல்லலாம். இதுபோன்ற காரணங்களால் கர்ப்பத்திலேயே ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரிய வளர்ச்சியை அக்குழந்தை பெறாமல் போய்விடுவதால், பிறந்த பிறகு தாய்க்கு அதிர்ச்சி தரும் வகையில் சராசரி மனித உடல் இயல்புக்கு மாறான அமைப்பை அந்தக் குழந்தை கொண்டிருக்கும்.

முன்பெல்லாம் விஞ்ஞான, மருத்துவ முன்னேற்றம் இல்லாத காலத்தில் குழந்தை எப்படி பிறக்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்வது விதியாக இருந்தது. நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தை பிறந்துவிட்டால் சரி. அதுவே மூளை வளர்ச்சி குன்றியதாக அந்தக் குழந்தை பிறக்குமானால், ‘இதுதான் விதி’ என்று மனதைத் தேற்றிக்கொண்டு, அந்தக் குறையுடனேயே குழந்தையை வளர்த்து வரவும் செய்தார்கள்.

ஆனால் கருவிலேயே திருவுடையதாக கர்ப்பத்திலேயே வளர்த்து, நிறைவான, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க இப்போது மேம்பட்ட மருத்துவம் உதவிக்கு வருகிறது. இத்தகைய மருத்துவத்துக்கு தனிப்பட்ட முறையில் அதிகம் செலவாகும்தான். ஆனால் ஏழை கர்ப்பிணிகளுக்கு இத்தகைய மருத்துவ சோதனை இலவசமாகவே இப்போது வழங்கப்படுகிறது. ஆமாம், மத்திய அரசின் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் நிதி உதவியுடன் தமிழ்நாடு டவுன் ஸிண்ட்ரோம் சங்கம் மற்றும் மெடிஸ்கேன் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏழை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக டவுன் ஸிண்ட்ரோம் குறையைக் கண்டுபிடிக்கும் சிறப்பு பரிசோதனையை செய்கின்றன.

அது என்ன டவுன் ஸின்ட்ரோம் பிரச்னை? கருவுக்கு ஏதாவது குரோமஸோம் குறைபாடு இருந்தால் அதனால் ஏற்படுவது. அந்தக் குறைபாடு இருந்தால், குழந்தையின் தலை சிறியதாக இருத்தல், விழி மேல்புறம் நோக்கியதாக இருத்தல், மூக்கின் அமைப்பு சரிவர இல்லாமை, மூளை செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகிய பிரச்னைகள் குழந்தைக்கு இருக்கும். பிறக்கும் 600 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த பிரச்னை இருக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்தப் பரிசோதனை விவரம் என்ன?

கர்ப்பம் தரித்த எல்லா பெண்களும் 11, 12, 13வது வாரத்துக்குள் ஸ்கேன் எனப்படும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியது அவசியம். கருக் குழந்தையின் கழுத்து நீர் பரிசோதனை, அதாவது என்.டி சோதனை, மற்றும் சிறப்பு ரத்தப் பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். இப்படி சிறப்புப் பரிசோதனைகளைச் செய்வதால் டவுன் ஸின்ட்ரோம் குறைபாடு உள்ள குழந்தைகளை 90 சதவிகிதம் கண்டு பிடித்துவிட முடியும். அதன் பிறகு சில விசேஷ மருந்துகளை கர்ப்பிணிகளுக்குக் கொடுத்து அந்த பிரச்னையின்றி குழந்தை பிறப்பதை உறுதி செய்ய முடியும்.

விஞ்ஞான, மருத்துவ வளர்ச்சி இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது; அரசின் சுகாதார நலத் திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகள் இந்தப் பரிசோதனைகளை இலவசமாகவே பெற முடிகிறது. ஆகவே, இனி தலைவிதி, நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொள்ளாமல் உரிய நேரத்தில் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, கர்ப்பிணிகள் எந்தக் குறையும் இல்லாத நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்; எதிர்கால இந்தியாவுக்கு ஏற்றமிகு குடிமக்களை உருவாக்கவேண்டும்.

அதிகமாக டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்!

மூட்டு வலி மற்றும் வீக்கத்துக்கு முடிவு கட்ட முன்னெடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!

நிலவின் வெப்பநிலை சரிந்தது எப்படி தெரியுமா?

டிஜிட்டல் திரையுலகில் குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்தும் முறைகள்!

தூக்கணாங்குருவிகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் - கட்டிடக்கலை வல்லுநர்!

SCROLL FOR NEXT