‘பெறுவதை விட, கொடுத்தல் சிறந்தது’ என்பார்கள். பிறரிடம், ‘இதைத் தா’ என்று கேட்டு நிற்பதை விட, சிறிதேனும் மற்றவருக்குத் தருவது சிறந்தது. அதேசமயம் எதை பிறருக்கு அளித்தாலும் அதை மனப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அது பொருளாக இருந்தாலும் பணமாக இருந்தாலும் அல்லது பாராட்டாக இருந்தாலும் சரி, முழு மனத்தோடு அளிக்கிறோமா என்பதே மிகவும் முக்கியம்.
ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு பக்தர் வந்து, "சுவாமி, இந்த ஆயிரம் பொற்காசுகளை உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன். தயவுசெய்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட பரமஹம்சர், "இது முழுக்க முழுக்க எனக்குதானே?" என்று கேட்க, "ஆம் சுவாமி’ என்றார் பக்தர்.
"இதை நான் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வேன். ஏனென்றால், இதை நீங்கள் எனக்கு அளித்து விட்டீர்கள்" என்று சொன்ன ராமகிருஷ்ணர், அந்தப் பொன் முடிப்பை பக்தரிடமே அளித்து, "இதை கொண்டுபோய் கங்கை நதியில் வீசி விடுங்கள்” என்றதும், பக்தர் திகைத்துப் போனார். ''இப்போது இது எனது பணம்தானே? பிறகு ஏன் தயங்குகிறீர்கள்? எனக்கு அளிக்கப்பட்ட ஒரு பொருளை நான் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் அல்லவா? ஏன் கங்கை நதியில் வீச சொன்னதற்கு தயங்குகிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் இதை எனக்கு மனப்பூர்வமாக அளிக்கவில்லை என்றுதானே பொருள்?’’ எனக் கேட்க, ராமகிருஷ்ணருக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனாராம் பக்தர்.
''எப்போதுமே எந்தப் பொருளையும் மனப்பூர்வமாக அளித்தால்தான் அதற்கு மதிப்பு. பிறருக்குக் கொடுத்த பின்பும் அது என்னுடையது என்று நினைத்தால் கொடுத்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். மேலும், சன்னியாசியான எனக்கு பணம் தேவையில்லை என்பதை உணர்த்தவே நான் அதை கங்கை நதியில் வீசச் சொன்னேன்'’ என்றாராம் பரமஹம்சர்.
இந்த பக்தரைப் போலத்தான் சிலர் இருக்கின்றனர். எப்போதும் உளப்பூர்வமாக எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபாடு செய்துவிட்டு வெளியே வரும்போது வாசலில் அமர்ந்திருக்கும் யாசகர்கள் கையேந்தும்போது, 'என்னடா இது ஒரே தொல்லையாக இருக்கு' என்று சலித்துக் கொள்ளாமல் மிகச்சிறிய தொகையாய் இருந்தாலும் அதை முழு மனதோடு சந்தோஷமாக தர வேண்டும். அப்போதுதான் தந்ததற்கு பலன் கிடைக்கும்.
சிலருக்கு பிறரைப் பாராட்டுவது என்பது வேப்பங்காய் தின்பது போல கசப்பான விஷயம். மனதிற்குள் அவர்களின் செயலை மெச்சிக் கொண்டாலும் வாய் திறந்து புகழ்ந்து இரண்டு வார்த்தைகள் சொல்ல மாட்டார்கள். பாராட்டு என்பது எப்போதும் தாராளமாக இருக்க வேண்டும். அது ஒருவரின் உயரிய குணத்தைக் காட்டுகிறது. நல்ல செயலை ஒருவர் செய்யும்போது மனதார அதைப் பாராட்ட வேண்டும். அதில் கஞ்சத்தனம் எதுவும் தேவையில்லை. பாராட்டை எதிர்பார்த்து யாரும் நற்காரியங்களில் இறங்குவதில்லை. ஆனால், அதை பாராட்டுவதற்கு தயக்கம் காட்டுவது நியாயமும் இல்லை.
பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது உடன் பணிபுரியும் தோழனோ, தோழியோ புதிய உடை அணிந்து வந்தால் அதை நன்றாக இருக்கிறது என்று மனப்பூர்வமாக பாராட்டலாம். அதை விடுத்து, அவர்கள் ‘நல்லா இருக்குதா’ என்று கேட்கும்போது வெறுமனே பெயருக்கு தலையை ஆட்டுவது நகைப்புக்குரியது. அது சம்பந்தப்பட்ட நபருக்கு பொறாமை உணர்ச்சி உள்ளது என்பதையே காட்டுகிறது.
இன்னும் சிலர் திருமண விழாக்களுக்கு சென்றால் கூட மணமக்களை மனதார ஆசிர்வாதம் செய்ய மாட்டார்கள். பெயருக்கு அட்சதையை போட்டுவிட்டு அமர்ந்திருப்பார்கள். பிறரை வாழ்த்தும்போது அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உளப்பூர்வமாக ஆசீர்வாதம் செய்ய வேண்டும். அப்போதுதான் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல, ஆசீர்வாதம் செய்பவர்களுக்கும் நன்மையைத் தரும். பிறருக்கு எதைத் தந்தாலும் உளப்பூர்வமாக மனதார தர வேண்டும்.