‘யாரோ ஒருவர் உங்களை மகிழ்ச்சியானவராகவோ மகிழ்ச்சி அற்றவராகவோ மாற்ற முடியும் என்றால், நீங்கள் எப்படி எஜமானராக இருக்க முடியும்? வெறும் அடிமையாகத்தான் இருப்பீர்கள்’ இதைச் சொன்னது பெரும் தத்துவஞானியான ஓஷோ. ஓஷோவின் இந்த மொழிகள் நமக்கு மிகப்பெரிய ஒரு வாழ்வியல் பாடத்தை கற்பிக்கிறது.
நம்முடைய மகிழ்ச்சி என்பது நமது மனதிற்குள்ளே மட்டும்தான் என்பது ஞானிகள் சொல்லும் மகத்தான உண்மை. ஆனால், பெரும்பாலோர் என்ன செய்கிறோம்? ‘அதோ அவர் என் செயலால் மகிழ்கிறார். அதனால் நானும் மகிழ்வாக இருக்கிறேன். நான் அவரை சரியாக கவனிக்கவில்லை என்று என்னை கண்ட வார்த்தைகளால் பேசிவிட்டார். அதனால் நான் மகிழ்ச்சியற்று இருக்கிறேன். அதனால் என் மனம் மகிழ்ச்சியற்றதாக இருக்கிறது’ இப்படித்தான் சொல்லிக் கொண்டுள்ளோம்.
தினமும் ஏதேனும் ஒரு வழியில் அடுத்தவருக்காக நாம் வாழ்ந்தே தீர வேண்டியதாக உள்ளது. குடும்பம் என்றால் ஒருவருக்கொருவர் உதவி செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டியது அவசியம் ஆகிறது. அன்பின் அடிப்படையில் அது சரியாகத்தான் இருக்கும். ஆனால், அதே அன்பின் அடிப்படையில் அந்த அன்பு போர்வையில் உங்களை அடக்கும் சர்வாதிகாரமாக மாறும்போது உங்கள் மனம் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்காது என்பதுதான் உண்மை. மற்றவருக்காக நீங்கள் வாழும்போது உங்கள் சுயம் மறைக்கப்படுகிறது.
உங்களுக்கு இருக்கும் தனித்தன்மை மங்கிப்போய் மற்றவர்கள் வார்த்தைகளுக்கு முதலிடம் தருவீர்கள். ஏனெனில், உங்கள் சிந்திக்கும் திறனை நீங்கள் அவரிடம் அடகு வைத்து விட்டீர்கள். குடும்ப உறுப்பினர்களின் சந்தோஷத்துக்காகவே வாழ்ந்து தன்னைத் தொலைத்த இல்லத்தரசிகள் அநேகர் உண்டு.
ஒரு சிறந்த பாடகி. அவரது கணவர் சொல்படிதான் கச்சேரிகளை ஒப்புக்கொள்வார். நீண்ட நாட்களாக அவர் விரும்பிய ஒரு ஆலயத்தில் பாட வேண்டும் என்பது அவரது நீண்டகால ஆசை. ஆனால், அதற்கு வழி விடாமல் சிவன் குறுக்கே நந்தி போல் கணவர். ஒரு கட்டத்தில் எங்கே தன்னால் அங்கே பாட முடியாமலே போய்விடுமோ என்ற வருத்தத்தில் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் அந்த ஆலயம் நோக்கி சென்றவர், அங்கிருந்த இறைவன் முன்பு பாடினார். அவர் பாடப் பாட அங்கிருந்தவர்கள் கர கோஷம் எழுப்ப, இறைவன் தனது கலையை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது.
இதுவரை பல மேடைகளில் பணம் பெற்றுக்கொண்டு பாடியபோது கிடைக்காத மகிழ்ச்சி, இங்கு முழுமையாக அடைந்தார் அந்தப் பாடகி. ஏனெனில், இது அவரின் சுய விருப்பத்தின் பேரில் பாடியது. ஆகவே, முழு மகிழ்வு பெற்றார்.
அலுவலகத்தில் மேலதிகாரியைப் புகழ்ந்து அவருக்கு அடிமையாக இருப்பவரை பார்க்கலாம். அவர் நிற்கச் சொன்னால் நிற்பார். சொன்ன சொல்லைத் தட்டமாட்டார். இதனால் மற்றவர்கள் அவரைப் பார்க்கும் பார்வையில் ஒரு ஏளனம் தெரியும். இதனால் இழந்தது அவரின் மொத்த மகிழ்ச்சி என்பது புரிவதற்குள் நிறைய வேதனைகளை சந்தித்திருப்பார்.
ஆகவே, மற்றவர்களுக்காக உங்கள் மகிழ்ச்சியை விட்டுத்தராதீர்கள். அதேபோல், அடுத்தவர் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க அனுமதிக்காதீர்கள். அவர்களால் உங்கள் மகிழ்ச்சி கட்டமைக்கப்படுகிறது என்றால் அவர்களை விட்டு விலகுங்கள். உங்கள் மகிழ்ச்சி உங்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதை உணர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கம்தான்.