Health Benefits of raw Turmeric https://tamil.oneindia.com
வீடு / குடும்பம்

பெண்கள் ஆரோக்கியத்தைக் காக்கும் பொங்க பானை பச்சை மஞ்சள்!

ஆர்.ஜெயலட்சுமி

பொங்கலுக்கு மஞ்சள் கொத்து வாங்கி பொங்கல் பானையில் கட்டி பொங்கலிடுவோம். அந்தப் பசும் மஞ்சளில் பெண்களுக்கு நன்மை செய்யும் பல்வேறு குணநலன்கள் அடங்கி இருக்கின்றன. பொங்கல் முடிந்த பிறகு அந்த பசும் மஞ்சள் தனியாக எடுத்து நன்றாக நீரில் கழுவ வேண்டும். பிறகு அதை ஈரம் போக துடைத்து சிறிது சிறிதாக நறுக்கி வெயிலில் காயவைத்து பொடியாக ஆக்கிக் கொண்டு அந்தப் பொடியை பெண்கள் குளிக்கும்போது முகத்தில் தேய்த்துக் குளிக்கலாம்.

இந்த மஞ்சளை தேய்த்துக் குளித்து வருவதால் பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் நீங்கும். மேலும், ஈரமான இடங்களில் தொடர்ந்து இருப்பதால் உண்டாகும் சேற்று புண் வராமலும் தடுக்கும். மஞ்சளை தேய்த்து குளித்துவிட்டு பிறகு முகத்தில் சோப்பை போட்டு கழுவக் கூடாது. அப்படி கழுவினால் சருமத்தில் உள்ள சிறிய துளைகள் எல்லாம் அடைத்துக்கொள்ளும். மஞ்சளில் இருக்கும் குர்க்குமின் நமது சருமத்தில் உள்ள துளைகளைத் திறந்து முகத்தை ஹைட்ரேட் செய்து மைக்ரோபியல் எஃபெக்ட்டை கிரியேட் செய்யும்.

சருமப் பிரச்னைகளுக்கு மஞ்சள் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது. சோரியாசிஸ் நோய்களுக்குக் கூட மஞ்சளுடன் வேப்பிலையை சேர்த்து தடவி வந்தால் சருமம் பொலிவடையும். எலுமிச்சையுடன் சேர்த்து மஞ்சளை கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் இறந்த செல்களை அது அகற்றும். தயிருடன் மஞ்சளை சேர்த்து கலந்து முகத்தில் தடவி வந்தால் முகத்திற்கு பொலிவைத் தரும். ரோஸ் வாட்டர் கலந்து மஞ்சளை முகத்தில் தேய்த்தால் முகம் குளிர்ச்சி பெறும். சந்தனத்துடன் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பொலிவாகும்.

மஞ்சளை பயன்படுத்தி ஒரு எண்ணெய் எடுத்து வைத்துக் கொள்ளலாம். மஞ்சளை நன்றாக அலம்பி அதிலுள்ள தோலை சீவி விட வேண்டும். பிறகு அதை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை விட்டு அடுப்பில் வைத்து அதில் இந்த அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைத்து பிறகு இறக்கி வைத்து அந்த எண்ணெயை அப்படியே வைத்திருக்க வேண்டும். மறுநாள் அந்த எண்ணெய் லேசான மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும். ஒரு காட்டன் துணியில் இந்த எண்ணையை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை முகம், கை, கால், உடம்பில் தடவி வந்தால் சருமம் மிகவும் பளபளப்பாகும். முகப்பரு போன்றவை வரவே வராது.

மஞ்சள் தேய்த்து குளித்தால் முகம், கை, கால்களில் தேவையற்ற ரோமங்கள் வராது. அது வந்திருந்தாலும் நீக்கிவிடும். பாதத்தில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயுடன் மஞ்சள் பொடியை சேர்த்து குழைத்து பூசினால் உடனே சரியாகிவிடும். பச்சை மஞ்சளுடன் வெள்ளரிக்காய் அரைத்து எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பேஷியல் பேக் போட்டு வந்தால் மாசு இல்லாமல் முகம் பளிச்சென மாறும்.

பச்சை மஞ்சளை நன்றாக அரைத்து விழுதாக்கி அந்த விழுதை கால் பாதத்தின் மேல், கைகளில் பூசி பிறகு கழுவினால் கை, கால்களில் எந்த விதமான தொற்று நோயும் வராது. பசும் மஞ்சளை தேய்த்து குளிக்கும்போது அதிலிருந்து வரும் மணத்தினாலே நம் உடலில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். முகம் தகதகவென தங்கம் போல ஜொலிக்கும்.

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியும் கூட. மஞ்சள் பொடியையோ விழுதையோ தண்ணீரில் கலந்து குளித்தால், உடலில் எந்த கெட்ட வாடையும் வராது. உடலை நோய், நொடிகள் அண்டாமல் தடுக்கும். பசும் மஞ்சளை அப்படியே வெயிலில் காயவைத்து வைத்துக் கொண்டால் நம் வீட்டுக்கு வரும் பெண்களுக்கு கையில் கொடுத்தாலே போதும் நமக்கு மங்கலம் பெருகும். பசும் மஞ்சளில் மகாலட்சுமி வசிக்கிறார். அதனால்தான் பசும் மஞ்சள் கொத்தை பொங்கல் பானையில் கட்டி பொங்கல் பூஜை செய்கிறோம்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT