Home Uses of Vinegar Rey Lopez for The Washington Post
வீடு / குடும்பம்

வீட்டு உபயோகத்தில் வினிகரின் பயன்கள் இத்தனையா?

கோவீ.ராஜேந்திரன்

பிரிட்ஜில் வைக்கும் காய்கறிகள் நீண்ட நேரத்துக்கு வாடாமல் இருக்க வேண்டுமா? வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் காய்கறிகளை ஊறவைத்து விட்டு வையுங்கள். காய்கறிகள் பிரஷ்ஷாக நீண்ட நேரத்துக்கு இருக்கும். உடைத்த தேங்காயில் வினிகரை தேய்த்து வைத்தால் தேங்காயின் நிறம் மங்காது.

ஊறுகாய் தயாரித்து முடித்து அதை பாட்டிலில் அடைக்கும் முன்பு பாட்டிலில் இரண்டு டீஸ்பூன் வினிகரை ஊறுகாயுடன் ஊற்றி நன்றாக குலுக்கி விடுங்கள். இதனால் ஊறுகாயில் பூஞ்சை படியாது. மேலும், நீங்கள் போடும் ஊறுகாய் துண்டுகளின் வடிவம் அப்படியே இருக்கும்.

வெங்காயம் நறுக்கிய பின்பு கைகளில் வெங்காய வாசனை போகவில்லையா? சிறிது வினிகரை கைகளில் தடவிக்கொண்டால் போதும். பிரட், ரொட்டியை வைக்கும் பெட்டியில் வாரத்திற்கு ஒருமுறை வினிகரை துணியில் தெளித்து துடைத்தால் ரொட்டி பெட்டியில் பிரட் ஒட்டிக் கொண்டு பிய்ந்து வருவதை தவிர்க்கலாம்.

பிராய்லர் சிக்கன், ‘பிரஷ்’ ஆக இருக்க வேண்டுமானால், அதை கடையில் இருந்து வாங்கி வந்ததும் பாலிதீன் கவரை நீக்கி விட்டு. வினிகர் முக்கிய துணியில் சிக்கனை பொதித்து வைத்து விடுங்கள்.

பாத்திரங்கள் கழுவும் நீரில் வினிகரை கலந்து கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென்று ஆகிவிடும். வினிகருடன் தண்ணீர் கலந்து கண்ணாடி சாமான்களை கழுவினால் கண்ணாடி பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும். ஒயிட் வினிகரை சம அளவு நீரில் கலந்து ஒரு பாட்டிலில் வைத்து ஸ்பிரே போல ஜன்னல் கதவுகளில் தெளித்து துடைத்தால் ஜன்னல்கள் பளிச்சென்று ஆகிவிடும். ஜன்னல்களில் படிந்திருக்கும் பெயிண்ட் கறையை வினிகரை சூடுபடுத்தி துடைக்க அவை நீங்கிவிடும்.

பாத்திரங்களில் படிந்திருக்கும் ஆழமான கரி கறையை அகற்ற வேண்டுமா? வினிகருடன் தேயிலை தூள் கலந்து சிறிது நேரம் ஊறவைத்தால் போதும். பாத்திரங்களில் சிறிது எண்ணெய் இருந்தால், அதை வினிகர் கொண்டு எளிதாக சுத்தம் செய்யலாம்.

முகம் பார்க்கும் கண்ணாடி மங்கலாக டல்லடித்து காணப்படுகிறதா? சிறிது வினிகரை கண்ணாடியில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று இருக்கும். 'துரு' கறையை வினிகரை கொண்டு தேய்த்தால் போய் விடும்.

பிளாஸ்க்கில் துர்வாசனை வருகிறதா? அரை கப் வினிகரை பிளாஸ்க்கில் ஊற்றி சிறிது நேரம் வைத்து விட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவினால் துர்வாசனை போய் விடும்.

பைபர் கிளாஸ் சூட்கேஸ்கள் நிறம் மங்கி காணப்படுகிறதா? வினிகரை பஞ்சில் நனைத்து விட்டு பின்பு மெழுகு பாலிஸில் தேய்த்து எடுத்தால் சூட்கேஸ் பளிச்சென்று இருக்கும்.

வெள்ளை வினிகரை வெஜிடபிள் ஆயிலுடன் சம அளவில் கலந்து பர்னிச்சர்களை சுத்தம் செய்ய, அவை பளிச்சென்று ஆகிவிடும். மரங்கள் மற்றும் செடிகளில் எறும்புகள் அல்லது புழுக்கள் கூடு கட்டியிருந்தால், கூட்டின் மீது வினிகரை தெளிப்பதன் மூலம் அவற்றை அகற்றலாம்.

அழுக்கு படிந்த வாஷிங் மெஷின்களை வருடத்திற்கு ஒருமுறை 3 அல்லது 4 லிட்டர் வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து வாஷிங் மெஷின் ‘டப்’ நிரப்பி ஓடவிட்டால் வாஷிங் மெஷின் சுத்தமாகி விடும். இதே முறையில் டிஷ்வாசரையும் சுத்தம் செய்யலாம்.

வீட்டில் வினைல் தரை விரிப்புகள் போட்டு இருந்தால் வினிகர் கலந்த நீரில், ‘மாப்’ போட, தரை பளிச்சென்று ஆகிவிடும். கார்பெட் கறைகளை ஒரு பங்கு வெள்ளை வினிகர் 7 பங்கு நீரில் கலந்து அழுத்தி துடைத்தால் கறைகள் போய்விடும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT