நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வண்ணங்களின் பிரதிபலிப்பாய் கொண்டாடப்படும் இந்த விழா வரும் 25ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அந்த தினத்தன்று அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். அதன் பிறகு அவர்கள் அவர்களின் முடியையும், சருமத்தையும் பழைய படி கொண்டு வர சில வாரங்கள் எடுக்கும்.
ஏனென்றால் சிலர் கெமிக்கல் கலந்த பொடிகளை தூவுவார்கள். இதன் மூலம் உங்கள் முடி வீணாகும் அபாயம் உள்ளது. மேலும் இதனால் உங்கள் சருமம் வறட்சியடையவும் வாய்ப்புள்ளது. இது வெயில் காலம் என்பதால் சாதரணமாகவே சருமம் வறட்சியாக இருக்கும். அதனால் கூடுதல் கவனத்தோடு ஹோலி பண்டிகை கொண்டாடுவதன் மூலம் உங்கள் முடியையும், சருமத்தையும் பளபளப்பாக வைக்கலாம்.
ஹோலி கொண்டாட செல்வதற்கு முன்பு இதை எல்லாம் தவறாமல் செய்துவிட்டால், இதில் இருந்து தப்பித்து கொள்ள முடியும்.
நீங்கள் ஹோலி விளையாட செல்வதற்கு முன்பு முதலில் உங்கள் தோலில் ஒரு நல்ல இயற்கையான டோனர் அல்லது ஃபேஸ் க்ரீமை தடவி கொள்ளவும். இது போன்ற பொருட்களை பயன்படுத்த விரும்ப மாட்டீர்கள் என்றால் உடல் முழுவதும் கடுகு அல்லது எள் எண்ணெய்யை தடவி கொள்ளலாம். இதனால் உங்கள் சருமத்தை ரசாயனம் பாதிக்காது.
உங்களுக்கு எண்ணெய்யும் பிடிக்காது என்றால், மருத்துவரின் ஆலோசனைப்படி நல்ல நிறுவனத்தின் சன் க்ரீம் அல்லது மாய்ஸ்சரைசரையும் தடவலாம்.
முடியை பராமரிப்பது எப்படி?
ஹோலி பொடி நிறம் முடியில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். உங்கள் அடர் கருப்பு நிற கூந்தல் சில நாட்களுக்கு வேறு நிறத்திலோ, செம்பட்டையாகவோ தெரியும். இதற்கு காரணம் இந்த ரசாயனம் தான். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஹோலி விளையாடுவதற்கு முன்பு, முடியில் எண்ணெய் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். உங்களுக்கு எவ்வளவு முடி இருந்தாலும் சரி அதை விரித்து விடாமல், கட்டி வைக்கவோ, பிண்ணி வைப்பதோ நல்லதாகும். மேலும் நீங்கள் தொப்பி கூட அணிந்து கொள்ளலாம், இதன் மூலம் உங்கள் முடியின் வேரில் எந்த பிரச்சனையும் வராது.
ஹோலிக்கு பின்:
ஹோலி விளையாடிய பிறகு வீட்டிற்கு வந்தவுடன் முதலில் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். சிறிது நேரம் கழித்து உளுத்தம்பருப்பு, கிளிசரின், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட்டாக முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு ஆலிவ் எண்ணெய்யால் சருமத்தை தடவி க்ளீன் செய்தால் ரசாயனம் எளிதாக நீங்கி விடும்.
சருமத்தை பராமரித்தது பிறகு தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பின் ஷாம்புவால் 2 - 3 முறை போட்டு அலசவும். பிறகு கண்டிஷனர் போட்டு முடியை கழுவினால் ஸ்மூத் ஆகிவிடும். கண்டிஷனர் உபயோகிக்காதவர்கள், தயிர் மாஸ்கை தலையில் தடவி கழுவினால் மிருதுவாக மாறிவிடும்.