மனிதர்களில் பல ரகம் உண்டு. சிலர் எதற்கெடுத்தாலும் பிறரை குறை, குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எவ்வளவுதான் எல்லாம் நன்றாக இருந்தாலும் மைக்ரோஸ்கோப் வைத்துத் தேடியாவது ஒரு குறையை கண்டுபிடித்து விடுவார்கள்.
இவர்கள் பலர் கூடி இருக்கும் இடத்தில்கூட தனது குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். பொதுவெளியில் பேசுகிறோமே என்கிற உணர்வு சிறிதும் இன்றி பிறரை குற்றம் கண்டு பேசுவதில் தேர்ந்தவர்கள். ஒரு கல்யாண விருந்தில் நல்ல சுவையாக, பல விதங்களில் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டிருந்தால் கூட அவற்றைப் பாராட்ட மனமின்றி, 'வாழை இலை ரொம்ப சின்னது, லட்டில் முந்திரியையே காணோம், மைசூர்பாகு இன்னும் கொஞ்சம் நீளமா இருந்திருக்கலாம்’ என்பது போன்ற உப்புச்சப்பில்லாத காரணங்களைச் சொல்வார்கள்.
பிறர் அழகாக உடுத்தியிருந்தால் இவர்களுக்குப் பொறுக்காது. 'இந்தக் கலர் கொஞ்சம் டல்லடிக்குது, இன்னும் கொஞ்சம் அழுத்தமான கலர்ல, அகலமான பார்டர்ல பட்டுப்புடவை வாங்கி இருக்கலாம்' என்று சொல்லி அவர்கள் மனதைப் புண்படுத்துவார்கள். கேட்காமலேயே தங்கள் கருத்துக்களை அள்ளி வீசுவார்கள்.
நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் தனது ஐம்பதாவது வயதில் மிகவும் ஆசையாக ஒரு கார் வாங்கினால், 'அடடா, இந்த மாடலை ஏன் வாங்கினீங்க? இதுக்கு அடுத்த மாடல் வந்தாச்சு, உங்களூக்குத் தெரியாதா?’ என்று கருத்து கந்தசாமியாக மூக்கை நுழைத்து புதுக்கார் வாங்கியவரின் மனதை நோகடித்து விடுவார்கள்.
குறை சொல்வதன் காரணம் என்ன?
குற்றம், குறை சொல்பவர்கள் மீது முதலில் கோபம் வந்தாலும் அமைதியாக யோசித்துப் பார்த்தால் இவர்கள் பிறரால் தாங்கள் பார்க்கப்படவேண்டும், பிறரின் கவனம் தன் மேல் விழ வேண்டும் என்கிற அட்டென்ஷன் சீக்கிங் உணர்வு உள்ளவர்கள். அதனாலேயே குரலை உயர்த்தி இதுபோன்ற குறைகளை சொல்லுகிறார்கள். மேலும் அவர்களுக்கு பாராட்டுகளோ அங்கீகாரமோ கிடைக்காத பட்சத்தில் பிறரை குற்றம் குறை சொல்வதன் மூலம் அதை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். அதில் ஒரு வகையான குரூர திருப்தியும் அவர்களுக்குக் கிடைக்கிறது.
எப்படி சமாளிப்பது இவர்களை?
அவர்கள் சொல்லும் கமெண்ட்டை கேட்டுவிட்டு லேசான புன்னகையால் கடந்து செல்லலாம். அல்லது மௌனமாக இருக்கலாம். அப்படியும் இல்லை என்றால், ‘இந்த சாரி எனக்கு பிடிச்சிருக்கு, இந்த வண்டி எனக்குப் பிடிச்சிருக்கு. அதனால வாங்கினேன்’ என்று நேரடியாக பதில் சொல்லிவிடலாம். அப்படியும் அவர்கள் ஏதாவது சொல்ல முயன்றால், ‘உங்களுக்கு நீங்க வாங்குறப்ப உங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாங்கிக்கோங்க’ என்று சொல்லி அவர்கள் வாயை அடைக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவர்களை நம்மால் மாற்ற முடியாது. மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஏற்றுக்கொள்ள முடியாததை விலக்கி விடுவது அதைவிட புத்திசாலித்தனம்.