எதற்கெடுத்தாலும் கோபப்படும் குழந்தைகளை சமாளிக்க சில யுக்திகளை கையாண்டு அவர்களை அமைதிப்படுத்தலாம். அதுபோன்ற சில யுக்திகளை இந்தப் பதிவில் காண்போம்.
குழந்தைகளின் உணர்வுகளை மதியுங்கள்: நம் குழந்தைகளின் உணர்வுகளுக்கு எப்பொழுதும் மரியாதையும் அங்கீகாரமும் கொடுக்கத் தவறக் கூடாது. அவர்கள் கோபப்படும்போது அமைதியாக இருந்து அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தை நிதானமாக எடுத்துச் சொல்ல அவகாசம் கொடுங்கள். குழந்தைகளை கையாளும்போது பொறுமையும் அமைதியும் நமக்கு மிகவும் தேவை.
பாதுகாப்பான உணர்வை கொடுங்கள்: எந்தப் பிரச்னை என்றாலும், ‘நான் இருக்கிறேன்’ என்ற பாதுகாப்பு உணர்வை அவர்களுக்குக் கொடுக்கத் தவறாதீர்கள். அவர்களுடைய எந்த சூழ்நிலையையும் நம்மிடம் தைரியமாக எடுத்துச் சொல்ல, நம்மை அவர்களுடன் மனதளவில் நெருங்கி வைத்துக் கொள்ளுதல் அவர்களின் தயக்கத்தைப் போக்கும்.
மனம் விட்டுப் பேசுங்கள்: பெரிய குழந்தைகளாயிற்றே என்று தயங்காமல் அவர்களுடன் எப்போதும் மனம் விட்டுப் பேச வேண்டும். எந்த ஒளிவு மறைவும் இன்றி, எல்லா விஷயங்களையும் பேசவும், அவர்களுக்கு நம்மிடம் ஒரு சகஜமான மன நிலையை ஏற்படுத்திக் கொடுங்கள்.
அவர்களை அமைதிப்படுத்துதல் மிகவும் அவசியம்: சின்னச் சின்ன விஷயங்களுக்கும் தயங்காமல் அவர்களைப் பாராட்டுங்கள். முதுகில் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். நம் செல்வங்களை கட்டி அணைப்பதும் முத்தம் கொடுப்பதும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான, நிம்மதியான உணர்வை ஏற்படுத்தும்.
உடல் மொழி மிகவும் முக்கியம்: குழந்தைகளின் (வளர்ந்த பிள்ளைகளாக இருந்தாலும்) கரங்களை பிடித்துக்கொண்டு பேசுதல், தோளில் கை போட்டு நடத்தல், ஆதரவாகப் பேசுதல், நான் இருக்கிறேன் என்று எதற்கும் தோள் கொடுத்தல், எந்த விஷயத்திலும் நாம் கோபப்படாமல் ஆதரவுடன் இருத்தல் குழந்தைகளுக்கு ஒரு பலத்தை கொடுக்கும். எந்தப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் கொடுக்கும்.
அமைதியான சூழ்நிலையை உருவாக்குங்கள்: அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுங்கள். அவர்களுக்கும் தனிமை தேவைப்படும். எனவே, அதை உணர்ந்து அவர்களுக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுங்கள்.
தியானம் மூச்சுப் பயிற்சியை பழக்குங்கள்: குழந்தைகள் மனதை அமைதிப்படுத்துவதற்கு தியானம் மிகவும் உகந்தது. அவர்களுக்கு தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை செய்யப் பழக்குங்கள். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி கோபத்தைக் கட்டுப்படுத்தவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் உதவும்.
மன பயிற்சி போல் உடற்பயிற்சியும் அவசியம்: உடலில் இருந்து வியர்வை வெளிவரும் வகையில் விளையாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாட வைத்தல், நல்ல புத்தகங்களைப் படிக்கத் தூண்டுதல், ஓவியம் வரைதல் போன்றவை அவர்களை அமைதிப்படுத்த உதவும்.
சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்கப் பழக்குதல்: சுயக் கட்டுப்பாடு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. நல்லொழுக்கமும், சுயக்கட்டுப்பாடும் மனிதனுக்கு மிகவும் தேவை. இது நேர்மறையான செயல்களை செய்யத் தூண்டி, நம்மை பலப்படுத்தும். வாழ்வில் நம்மை உயரத்துக்குக் கொண்டு செல்லும்.
எதிலும் ஒரு ஒழுங்கை கடைப்பிடிக்க வலியுறுத்துங்கள்: விளையாடும் நேரம், படிக்கும் நேரம், உறங்கும் நேரம், உடற்பயிற்சிக்கான நேரம், சாப்பிடும் நேரம் என ஒவ்வொன்றுக்கும் சரியாக நேரத்தை ஒதுக்க பழக்குங்கள். இதனால் அவர்களின் பதற்றம் குறைந்து, மன ஆரோக்கியம் நீடிக்கும்.
ஒவ்வொரு குழந்தையிடமும் தனித்தன்மை நிறைந்திருக்கும். ஒருவருக்கு சரியாக இருப்பது மற்றவருக்கு சரியாக இராது. ஒரு குழந்தையைப் போல் மற்றொரு குழந்தை இருப்பது சாத்தியமில்லை. நிறைய முயற்சிகள் செய்தும் அவர்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தகுந்த குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறலாம்.