https://stafferty.ee
வீடு / குடும்பம்

மனதிற்குப் பிடிக்காதவர்களுடனும் சேர்ந்து இணக்கமாக வேலை செய்வது எப்படி?

எஸ்.விஜயலட்சுமி

ரு அலுவலகம் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும்போது உடன் பணிபுரியும் நபர்கள் எல்லோரும் ஒரே மனதினராய் இருப்பது சாத்தியமில்லை. ஒரு குழுவாய் வேலை செய்யும்போது உடன் இருப்பவரைப் பிடிக்காமல் போகும்போது அந்த வேலை சிறப்பாக நடைபெறாது. மனதிற்குப் பிடிக்காத மனிதர்களுடன் கூட இணக்கமாக எப்படி சேர்ந்து பணிபுரிவது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பார்வையில் மாற்றம்: இந்த உலகில் எதுவும் ஒன்றைப் போல மற்றொன்று இருப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் தனித்துவம் இருக்கிறது. நம்மைப் போல பிறரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. உங்களுக்குப் பிடிக்காத நபர் நீங்கள் விரும்பாத வண்ணம் உடையணிந்து வரலாம். சத்தமாகப் பேசுவது, சிரிப்பது என எரிச்சல் ஊட்டும்படி நடந்து கொள்ளலாம். இவர்களை சகித்துக் கொள்வது எப்படி? அவருடைய பழக்க வழக்கம் அப்படித்தான் என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அவருடன் பணிபுரியப்போவது ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டுமே. அதனால் அவரது புற நடவடிக்கைகளைப் பற்றி கவலைப்படாமல் அவர் வேலையில் ஒத்துழைப்பு தருகிறாரா என்று மட்டும் பாருங்கள். அவரை விரோதியாக நினைப்பதைக் கைவிட்டுவிட்டு சக மனிதராக ஏற்றுக் கொள்ளுங்கள்.

உணர்ச்சியின் நுண்ணறிவு: அலுவலக மீட்டிங்கில் மேலாளர் யாராவது உங்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக பேசினால் அதைப் பற்றி நாள் முழுக்கக் கவலைப்படுவது சரியா? இனிமேல் இவருடன் மீட்டிங்கில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று முடிவெடுப்பது முடியாத காரியம். எனவே, உணர்ச்சி நுண்ணுறிவை பயன்படுத்துவது அவசியம். அவரிடம் பொறுமையாக பதில் அளிக்கும்போது அவரது கோபம் குறையக்கூடும். ‘இவரிடம் போய் கத்தி விட்டோமே’ என்று அவர் நினைக்கலாம்.

நல்ல இயல்புகளைப் பாராட்டுதல்: உங்களை எரிச்சலூட்டும் நபர் முழுக்க முழுக்க கெட்டவராக இருக்க சாத்தியமில்லை. அவரிடம் இருக்கும் நல்ல இயல்புகளை பட்டியலிடுங்கள். அவரிடம் சென்று மனதாரப் பாராட்டுங்கள். அவரது மனம் இளகி உங்கள் மேல் நல்ல அபிப்ராயம் ஏற்படும். அதன் பின்பு உங்களிடம் அவர் பழகும் விதமும் கூட மாறக்கூடும். நமக்குப் பிடிக்காத நபர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு அவரை விட்டு விலகவே நினைக்கிறோம். அதற்கு பதிலாக அவரை அணுகி பேசும்போது அந்த இடைவெளி குறையும்.

தந்திரமாக செயல்படுங்கள்: உதாரணமாக, உங்களுக்குப் பிடிக்காத நபர் கத்திப் பேசுவார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் சென்று அவரது நல்ல இயல்புகளை பட்டியலிட்டு, ‘’நீங்கள் எல்லாவிதத்திலும் பர்ஃபெக்ட்தான். ஆனால் உரக்கப் பேசும் குணத்தை சற்றே மாற்றினால் உங்கள் பர்சனாலிட்டி கூடுதலாக ஜொலிக்கும்’’ என்று தந்திரமாக எடுத்துச் சொல்ல வேண்டும். உடன் பணிபுரியும் நபர் சரியாக வேலை செய்யவில்லை அல்லது தட்டிக்கழிக்கும் ஆசாமி என்றால் அவரை அழைத்து, ‘’நீங்கள் புத்திசாலி, டக்கென புரிந்து கொண்டு வேலையை சீக்கிரமாக செய்து முடிபீர்கள்’’ என்று ஐஸ் வைக்க வேண்டும். அப்போது அதுவும் பிறர் முன்னிலையில். அந்த வேலை நடந்து விடும்.

பச்சாதாபம் காட்டுங்கள்: சிலர் சிடுமூஞ்சியாக, இறுக்கமான குணம் கொண்டவர்களாக இருக்கலாம். அவர்கள் குடும்ப சூழ்நிலையில் என்ன கஷ்டப்படுகிறார்களோ? அல்லது அவர்களது வாழ்வு சோகமாகக் கூட இருக்கலாம். எனவே, அவரை அனுதாபத்துடன் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையிலேயே ஒரு நபர் மீது அன்பும் கருணையும் செலுத்தும்போது அது அவரது உள் மனதிற்கு தெரிய வரும். பிறரிடம் அவர் நடந்துகொள்ளும் விதமும் மாறிவிடலாம். மனிதர்கள் என்பவர்கள் நேசிக்கத்தானே தவிர, வெறுத்து ஒதுக்குவதற்கு அல்ல என்ற அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டால் யாரையும் எதிரியாக நினைக்கத் தோன்றாது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT