வெயில் காலங்களில் ஜில்லென்று ஐஸ் வாட்டர் குடிக்கும்போது உடனடியாக தாகம் தீர்ந்து நிவாரணம் கிடைக்கும். அது ஒரு புத்துணர்ச்சியை நமக்கு ஏற்படுத்தும். இதனாலேயே பலரும் கோடைக் காலங்களில் குளிர்ச்சியான பானங்களை விரும்பிக் குடிக்கின்றனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி நம் உடலின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால், பலரது வீடுகளில் இப்போது ஃப்ரிட்ஜ் இருப்பதால், குளிர்ந்த நீரை குடிக்கும் பழக்கம் அனைவரிடமும் உள்ளது. இந்தக் குளிர்ந்த நீர் நம்முடைய ஆரோக்கியத்தில் பல மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் வல்லுநர்கள்.
தலைவலி உண்டாகும்: குளிர்ந்த நீர் நம் தலையில் இருக்கும் நரம்புகளை பாதிக்கிறது. இதனாலேயே மிகக் குளிர்ச்சியானவற்றை நாம் உட்கொள்ளும்போது தலைவலி ஏற்படுகிறது. சில நேரங்களில் வெயில் காலங்களில் ஐஸ் வாட்டர் குடிக்கும்போது திடீரென தலைவலி ஏற்படும். வெயில் காரணமாகவே இது வருகிறது என நீங்கள் நினைத்தால் அது தவறாகும். இது ஐஸ் வாட்டர் செய்யும் வேலை. எனவே, அதிகம் குளிர்ந்த நீரை குடிக்க வேண்டாம்.
தொண்டையில் புண்: அடிக்கடி குளிர்ந்த நீரைக் குடிப்பதால் ஜலதோஷம் ஏற்படலாம். அது சளித் தொந்தரவை ஏற்படுத்தி தொண்டையில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தொண்டை வீக்கம், சுவாசிப்பதில் பிரச்னை போன்றவை ஏற்படும்.
செரிமானப் பிரச்னை: குளிர்ந்த நீர் வயிற்றை இருக்கச் செய்வதால் செரிமானப் பிரச்னை ஏற்படும். இதனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குளிர்ச்சியான நீர் உங்கள் இதயத் துடிப்பை குறைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது கழுத்தின் பின்புறத்தில் உள்ள நரம்புகளை பாதிப்பதால் இதயத் துடிப்பு குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடல் எடை அதிகரிக்கும்: நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபராக இருந்தால், குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ளாதீர்கள். குளிர்ச்சியான நீரை உட்கொள்வதால் உங்கள் கொழுப்பு கரைவது கடினமாகிறது. எனவே, என்னதான் கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்தாலும் குளிர்ந்த நீர் குடித்தால் உடல் பருமன் குறையாது.
மேற்கூறிய விஷயங்கள் அனைத்துமே ஒரு தகவலை உங்களுக்குத் தெரியப்படுத்தும்விதமாக சொல்லப்பட்டதுதானே தவிர, இதைப் பற்றிய உண்மையான விவரங்கள் தெரிய தகுந்த மருத்துவர்களை ஆலோசிப்பது நல்லது.