வீடு / குடும்பம்

சர்வதேச இளைஞர்கள் தினம்...கொண்டாடுவோம்!

ஆகஸ்ட் - 12 சர்வதேச இளைஞர்கள் தினம்!

சேலம் சுபா

னித வாழ்வை மூன்று பருவங்களாக கொண்டாடுகிறோம். குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதியபருவம்.  இந்தப் பருவங்களில் இளமைப்பருவம் என்பது மட்டுமே நமக்கான வாழ்க்கையை நாம் மட்டுமே தீர்மானித்து வாழும் துணிவையும் சுதந்திரத்தையும் தருவதாக அமைகிறது. குழந்தைப்பருவமும் முதிய பருவமும் மற்றவரை சார்ந்தே உள்ளது.

இளமைப்பருவம் என்பது கவலைகளை புறம்தள்ளிவிட்டு மகிழ்ச்சியை மட்டும் நாடும் பருவம். நம் அனைவருக்குமே உங்களால் மறக்க முடியாத காலம் அல்லது நினைவுகள் எது என்று கேட்டால் உடனடி பதிலாக ‘பள்ளி அல்லது கல்லூரியில் கிடைத்த அனுபவங்கள் மட்டுமே’ என்றுதான் வரும். வாழ்வின் இறுதி மூச்சு வரை  மறக்க முடியாத நினைவுகளை சுமந்து நம்முடனே மடிவது இளமைக்கால நினைவுகள் மட்டுமே என்றால் மிகையல்ல.

    ஒருவர் தனது இளமைக்காலத்தில் பெற்ற கல்வி உலகளாவிய அனுபவங்கள் கற்றுக்கொண்ட பண்புகளை வைத்து செய்யும் செயல்களால்தான் அவரது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இளைய பருவத்தில் உடலும் மனமும் ஆரோக்கியத்துடனும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடனும் இருக்கும். அதை முறையாக நேர்வழியில் பயன்படுத்தி வாழ்வை வெற்றிகரமாக்கும் பொறுப்பு இளைஞர்கள் கையிலேதான் உள்ளது. இளையவர்களின் மனோசக்தி எத்தகையது என்பதை நன்கு உணர்ந்தே சுவாமி விவேகானந்தர் 100 இளைஞர்களைத் தாருங்கள் நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் என்றார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இளைஞர் களுக்காகவே தனது உரைகளையும் எழுத்துகளையும் அர்ப்பணித்தார். எழுச்சிமிகு தன்னம்பிக்கையை பள்ளி, கல்லூரிகளில் எதிர்கால இளைஞர்கள் முன் உரை நிகழ்த்தி ஊட்டினார்.

    அவ்வளவு ஏன்? மனிதக்குலத்தையே ஆட்டிப்படைத்த இயற்கைப் பேரழிவுகளான சுனாமி, வர்தாப்புயல், கொரோனாத்தொற்று என அத்தனை இடர்களிலும், ஜாதி, மதம், குலம், மொழி மறந்து, உயிரையும் துச்சமாக நினைத்து, தங்கள் முழு சக்தியையும் திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அவர்களின் பசி போக்க உதவியது சேவை குணமிக்க இளைஞர்கள்தான் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட இளையவர்களின் ஆற்றல் முறையாக பயன் படுத்தப்பட்டால் கலாம் அவர்கள் சொன்னதுபோல் இந்தியாவும் பசி பட்டினி அற்ற சிறந்ததொரு வல்லரசாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒரு இளைஞர் நலமுடன் வாழ்ந்தால் அவரால் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெருமையே.

     இப்படிப்பட்ட இளைய சமுதாயத்தை எண்ணியும் அவர்களின் முன்னேற்றம் குறித்தும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் உலகின் அனைத்து நாடுகளும் பல்வேறு வகைகளில் திட்டங்கள் வகுத்துள்ளதை அறிவோம். அந்த வகையில் 1965லிருந்தே உலக நாடுகளின் சார்பில்  ஐ.நா. சபை இளைஞர்கள் மீதான கவனத்தை அதிகப்படுத்தியது எனலாம். அமைதி, மரியாதை மற்றும் புரிந்துணர்வின் சில இலட்சியங்களை இளைஞர்கள் இடையே ஊக்குவிக்கும் விதமாக முன்னெடுப்புகளும் இருந்தன. டிசம்பர் 17, 1999 அன்று இளைஞர்களளின் மதிப்பை உணர்ந்த அமைச்சர்களால் உலக மாநாட்டில் வைத்த பரிந்துரையை ஏற்று ஐ.நா. சபையால் ஆகஸ்ட் 12 ந்தேதி அறிவிக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து  சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த நாள் இளைஞர்களின் கல்வி, அரசியல் ஈடுபாடு மற்றும் சமூகம் சார்ந்த உலகப் பிரச்சினைகளை சமாளிக்கும் மேலாண்மை போன்றவற்றில் விழிப்புணர்வைத் தரும் நாளாக அமைகிறது .இந்த வருடத்தின் கருபொருளாக “நிலையான உலகை நோக்கிய இளைஞர்களுக்கான பசுமைத்திறன்கள்” என்பது உள்ளது.

     தற்போது போதையின் பிடியில் சிக்கி தங்கள் வாழ்வை வீணடித்துக்கொள்ளும் இளைஞர்கள் அதிகம் பெருகிவிட்டனர். காதல் ஜாதி போன்ற ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு வன்முறையை ஆயுதமாக்கி தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல தங்களை சார்ந்த குடும்பத்தினரையும் கவலைக்குள்ளாக்குவது வேதனை தரும் விஷயமாகிறது. வாழ்வின் அங்கமாகிவிட்ட செல்போன்களின் மோகமும் பாலியல் குறித்தான புரிதலின்மையாலும் சினிமாக் கவர்ச்சியும் அவர்களை தடம் மாறவைத்து வாழ்வை கேள்விக்குறியாக மாற்றுகின்றன.

     இதையெல்லாம் தவிர்த்து இளைஞர்களின் சக்தியை அவர்களுக்குப் புரிய வைத்து பயனுள்ள நல்லதொரு பாதையில் அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இளைஞர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து தவறான வழிகளில் சக்தியை வீணடிக்காமல் வாழ்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித்தரவேண்டும்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT