It's better to think and decide before doing anything 
வீடு / குடும்பம்

எதை செய்வதற்கு முன்பும் யோசித்து முடிவெடுப்பது சிறந்தது!

நான்சி மலர்

ம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் அல்லது எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பும் நன்றாக யோசித்து முடிவெடிப்பது நல்லது. ஒருவேளை அந்தச் செயலை செய்த பிறகு நாம் எடுத்த முடிவு தவறானது என்று தெரியவந்தால், அதை நினைத்து வருத்தப்படாமல் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல பழகிக்கொள்ள வேண்டும். இதை தெளிவாகப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ராபர்ட் ஒரு சிறந்த கோல்ப் பிளேயர். அவர் ஊரில் நடக்கும் ஒரு கோல்ப் போட்டியில் ராபர்ட் கலந்துகொள்கிறார். அந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஒரு பெரிய தொகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ராபர்ட்டும் அந்தப் போட்டியில் நன்றாக விளையாடி வெற்றி பெறுகிறார்.

இதனால் அந்தப் பெரிய தொகை ராபர்ட்டுக்கு வழங்கப்படுகிறது. அந்தப் பணத்துக்கான செக்கை வாங்கிக்கொண்ட ராபர்ட் தன்னுடைய கார் கதவை திறக்கலாம் என்று செல்லும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த ஏழைப் பெண் ஒருவர் ராபர்ட்டிடம் வந்து, ‘என்னுடைய பையன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். மருத்துவர்கள் சீக்கிரமாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். என்னிடம் அதற்கான பணமில்லை. உங்களிடம் ஏதேனும் பணம் இருந்தால் தந்து உதவி செய்யுங்கள்!’ என்று கேட்கிறார்.

இதைக்கேட்டு சற்று நேரம் யோசித்த ராபர்ட், அவர் பாக்கெட்டில் இருந்த செக்கை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டுகிறார். ‘உங்கள் பையனை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டுக் கிளம்புகிறார்.

சில நாட்கள் கழித்து ராபர்ட் கோல்ப் கிளப்பில் இருந்தபோது அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் இவரிடம், ‘சார்! நீங்கள் சில நாட்களுக்கு முன்பு ஒரு  அம்மாவிற்கு அவர்களின் பையனின் உடல்நிலை சரியில்லை என்று கேட்டதற்கு பணத்துக்கான செக் கொடுத்தீர்கள் அல்லவா? அந்தப் பெண்மணி உங்களிடம் சொன்ன அனைத்துமே பொய்.

உங்களிடமிருந்து பணம் வாங்குவதற்குத்தான் இப்படியொரு பொய்யை சொல்லியிருக்கிறார்’ என்று கூறினார். ‘அப்போ அந்தப் பெண்ணின் மகன் எப்படியிருக்கிறான்?’ என்று ராபர்ட் கேட்க, ‘அவனுக்கு என்ன கல்லு மாதிரி நல்லாதான் இருக்கிறான்’ என்று அந்தப் பணியாளர் கூறினார். இதைக்கேட்ட ராபர்ட் என்ன சொன்னார் தெரியுமா? ‘இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. இந்த விஷயத்தை என்னிடம் சொன்னதற்கு நன்றி’ என்று கூறிவிட்டு மீண்டும் விளையாடக் கிளம்பிவிட்டார்.

இந்தக் கதையின் மூலம் நாம் தெரிந்துக்கொள்வது என்னவென்றால், ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்கலாம். இதுவே அதை செய்து முடித்த பிறகு ஒரு முறைக் கூட ‘அதை அப்படி மாற்றிச் செய்திருக்கலாமோ?’ என்று நினைத்து வருத்தப்படக் கூடாது. வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டேயிருக்க வேண்டும். இதை புரிந்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT