தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பு நாம் செய்யும் தவறுகள் பல. அதனாலேயே நிம்மதியான தூக்கத்தை இழக்கிறோம். சமூக வலைதளங்களில் சாட்டிங் செய்வது, தொடர்ந்து செல்லில் பேசுவது, நீண்ட நேரமாக டிவி பார்ப்பது என இதில் ஏதாவது ஒரு தவறை ஒவ்வொருவரும் செய்வோம். ஆனால், ஆழ்நிலை தூக்கம் என்பது நமக்கு அரிதாகி விட்டது என்று வருத்தப்படுவோம்.
நீங்கள் எதை செய்தாலும் சரி, நல்ல சுகமான, ஆழ்ந்த உறக்கம்தான் நம் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அந்த வகையில் ஆழ்ந்த உறக்கம் ஏற்பட வேண்டும் என்றால் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு குளிப்பது நல்ல பலனைத் தரும்.
நாள் முழுவதும் வெளியிடங்களில் சுற்றித் திரிந்து களைத்துப் போன நம் உடலில் நிறைய அழுக்குகள் சேர்ந்திருக்கும். அத்துடன் உடலும் மிகுந்த சோர்வு அடைந்திருக்கும். இதே சோர்வுடன் நீங்கள் தூங்கச் சென்றால் தூங்குவதில் சிரமம் ஏற்படும். ஆகவே, குளித்துவிட்டு உறங்கினால் ஆழ்ந்த உறக்கத்திற்கு உத்தரவாதம் உண்டு. அதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இரவு குளியல் நம் உடலில் உள்ள சோர்வு அனைத்தையும் நீக்குகிறது. சருமத்தில் சேர்ந்துள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெய் பிசுக்கு போன்ற அனைத்தையும் நீக்க உதவுகிறது. உடலின் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. மனதுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
சூடான நீர், குளிர்ந்த நீர்ர் - எதில் குளிக்க வேண்டும்?
இரவு குளிப்பது என்று முடிவாகிவிட்டது. ஆனால், எந்தத் தண்ணீரில் குளிப்பது என்று உங்களுக்கு சந்தேகம் வருகிறதா? சிலர் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க ஆசைப்படுவர். சிலர் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு விரும்புவார்கள். எனினும், நம் உடலும், தசைகளும் சோர்வடைந்துள்ள நிலையில் அவற்றை ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் சுடு தண்ணீரில் குளிப்பது நல்ல பலனைத் தரும்.
தசை வலி, இடுப்பு வலி போன்றவற்றை நீக்குவதற்கு இது உதவிகரமாக இருக்கும். அதேசமயம் கோடை காலத்தில் நீங்கள் சுடு தண்ணீரில் குளிக்க முடியாது. இந்த சமயத்தில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது நல்ல அனுபவத்தைத் தரும். ஆக, இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக குளிப்பது என்று முடிவு செய்துவிட்டால், எந்த தண்ணீரில் நீங்கள் குளிக்க வேண்டும் என்பதை அப்போதைய பருவகால சூழ்நிலைதான் முடிவு செய்கிறது.
தூங்குவதற்கு முன்பாக குளிப்பது என்றால் எவ்வளவு நேரம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். மாலையில் வீடு திரும்பியவுடன் குளிப்பதா அல்லது தூங்குவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக குளிப்பதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், பொதுவாக தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக குளிப்பது நல்ல பலனைத் தரும். தூங்குவதற்கு முன்பாக நமது உடல் வெப்பநிலையை சீரான அளவில் வைத்துக் கொள்ள இது உதவும்.
இனி, தினமும் உறங்குவதற்கு முன்பு குளித்துவிட்டு உறங்குங்கள். ஆழ்நிலை தூக்கத்திற்குச் சென்று விடுவீர்கள்.