Loving parents https://stock.adobe.com
வீடு / குடும்பம்

10 வகை பெற்றோர் பற்றி தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

பிள்ளை வளர்ப்பில் தன்னலமற்ற அர்ப்பணிப்பும் அன்பும் காட்டும் உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்டுவதற்காக ஜூன் 1ம் தேதியை உலகளாவிய பெற்றோர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு பலவிதமான அணுகுமுறைகள் உள்ளன. இந்தப் பதிவில் 10 விதமான பெற்றோரின் இயல்புகளைப் பற்றி பார்ப்போம்.

1. சர்வாதிகார பெற்றோர்: இந்த வகையான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மிகவும் கடினமான விதிகள், கட்டுப்பாடுகள் என விதித்திருப்பார்கள். பிள்ளைகள் செய்யும் சிறு தவறுகளுக்கு கூட தண்டனை தருவார்கள். பிள்ளைகள் மேல் பாசத்தை விட கண்டிப்பு காட்டுவதையே விரும்புவார்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்காமல் தனக்குத் தோன்றிய முடிவுகளை மட்டுமே எடுப்பவர்கள். இவர்களின் பிள்ளைகள் அன்பிற்காக ஏங்குவார்கள். ஆதரவே இல்லாமல் வளருவார்கள்.

2. தலையாட்டும் பெற்றோர்: இவர்கள் மிகவும் மென்மையானவர்கள். தங்கள் குழந்தைகள் எது கேட்டாலும் வாங்கித் தருவது, என்ன ஆசைப்பட்டாலும் செய்வது என பிள்ளைகளின் கோரிக்கைகளை நல்லதா கெட்டதா என்று கூட பார்க்காமல் நிறைவேற்றுவார்கள். இதனால் பிள்ளைகள் ஒழுக்கம் மற்றும் நல்ல நடத்தை போன்றவற்றை மதிக்காமல், தான்தோன்றித்தனமாக வளருவார்கள்.

3. சமநிலைப் பெற்றோர்கள்: இவர்கள் சர்வாதிகார மற்றும் தலையாட்டும் பெற்றோருக்கு இடையில் வரும் சமநிலை பெற்றோர்களாவர். பிள்ளைகளுக்கு தெளிவான எல்லைகளை அமைப்பார்கள். உணர்ச்சிபூர்வமான ஆதரவை, சுதந்திரத்தை வழங்குவார்கள். அதேசமயம், பிள்ளைகளுக்குத் தேவையான கண்டிப்பையும் தருவார்கள்.

4. அன்பான பெற்றோர்: பிள்ளைகளுடன் வலுவான, அன்பான உறவை உருவாக்குவதற்கு தேவையான விஷயங்களை செய்வார்கள். பிள்ளை, பெற்றோருக்கு இடையே அன்பால் ஆன இணைப்புப் பாலத்தை உருவாக்குவார்கள்.

5. நேர்மறை பெற்றோர்கள்: இவர்கள் பிள்ளைகளின் நல்ல நடத்தையை ஊக்குவிப்பதற்காக பாராட்டு மற்றும் வெகுமதிகளை வழங்குவார்கள். பிள்ளைகளிடம் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் செயல்களை வளர்ப்பதற்கு கவனம் செலுத்துவார்கள். இந்த பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் நல்லவர்களாக பிறருக்கு உதவுபவர்களாக இருப்பார்கள்.

6. ஹெலிகாப்டர் பெற்றோர்: இந்த வகை பெற்றோர் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து விளையாடும்போது கூடவே இருந்து அவர்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவர்களை கட்டுப்படுத்தியும் சுதந்திரம் தராமல் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார்கள். இதனால் வளர்ந்த பின்பு கூட பிள்ளைகள் தன்னிச்சையாக இயங்க முடியாமல் போகும்.

7. கற்றுத்தராத பெற்றோர்: இந்த வகை பெற்றோர் குழந்தைகளுக்கு நல்லது எது? கெட்டது எது என்று எடுத்துச் சொல்லாமல் அவர்களாகவே தெரிந்து கொள்ளட்டும் என்று அதீத சுதந்திரத்தை தருவார்கள். அதனால் பிள்ளைகள் பல ஆபத்துகளை வாழ்வில் சந்திக்க நேரிடும்.

8. இயற்கை பெற்றோர்: தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்வில் எளிமை, மினிமலிசம், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை போன்றவற்றை போதிக்கும் பெற்றோர்கள். இதனால் பிள்ளைகள் மனித சமுதாயத்தின் மேல் அன்பையும் அக்கறையும் காட்டி இயற்கையை நேசிப்பவர்களாக இருப்பார்கள்.

9. மாண்டிசோரி பெற்றோர்கள்: இந்த பாணி, டாக்டர் மரியா மாண்டிசோரியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. பிள்ளைகள் தாங்களாக சுயமாக கற்றுக்கொண்டு சுதந்திரமாக இயங்குவதை வலியுறுத்துகிறது.

10. நிபந்தனையற்ற பெற்றோர்: இந்த வகை பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மேல் எந்த வகையான திணிப்பும் செய்வதில்லை. அவர்களை எதற்காகவும் கட்டுப்படுத்துவதுமில்லை. பிள்ளைகளை அவர்களின் குறைகளோடு ஏற்றுக் கொண்டு, அன்பு செலுத்துகிறார்கள். பிள்ளைகளும் பிறரை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

எனவே, சிறந்த பிள்ளை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் மாறுபடும். மேற்கண்ட இந்த பத்து வகைகளில் சிறந்ததாக தோன்றும் விஷயங்களை வைத்து ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்க்கலாம். சிறந்த சமூக திறன்கள், சுயமரியாதை, மேம்பட்ட கல்வி செயல்திறன், சிறந்த உணர்ச்சி கட்டுப்பாடு, பெற்றோருடன் வலுவான உறவுகள் போன்றவற்றை பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதில் கவனம் வைக்கவேண்டும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT