ஐ.என்.எஃப்.ஜே. என்பது மிகவும் அரிதான ஒரு ஆளுமை வகையாகும். INFJ என்பது உள்முக சிந்தனையாளர்கள் (Introverted) உள்ளுணர்வு மிக்கவர்கள் (Intuitive) உணர்வு மிக்கவர்கள் (Feeling) மற்றும் தீர்ப்பு வழங்குவதில் (Judging) வல்லவர்கள் என்ற குணாதிசயங்களைக் குறிக்கிறது. இவர்கள் மேலும் பல சிறப்பியல்புகள் கொண்டவர்கள்.
உள்முக சிந்தனையாளர்கள்: இவர்கள் சிறந்த உள்முக சிந்தனையாளர்கள். பெரிய சமூகக் கூட்டங்களை விட தனியாக அல்லது நெருங்கிய நண்பர்களின் சிறிய குழுவுடன் நேரத்தை செலவிட விரும்புவார்கள். தனிமையில் இருக்கும்போது அவர்களுக்கு நிறைய ஆற்றல் கிடைக்கும். தன்னை ரீசார்ஜ் செய்துகொள்ள அடிக்கடி தனிமையை நாடுவார்கள்.
உள்ளுணர்வு: இவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள். உடனடியாக நடக்கக்கூடிய விஷயங்களை விட எதிர்காலத்தில் நடக்கக்கூடிய பெரிய விஷயங்களைப் பற்றி நிறைய கற்பனைகள் வைத்திருப்பார்கள். புதிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் கொண்டு இருப்பார்கள். வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பது பற்றி அதிகமாக சிந்திப்பார்கள்.
உணர்வுமயமானவர்கள்: இவர்களுடைய முடிவுகள் பெரும்பாலும் உணர்வுகளைச் சார்ந்தே இருக்கும். தர்க்க ரீதியான பகுப்பாய்வை காட்டிலும் தங்கள் மதிப்புகள் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பார்கள். மிகவும் பச்சாதாபம் மற்றும் இரக்க குணம் உள்ளவர்கள். தாம் எடுக்கும் முடிவுகள் பிறரை எப்படி பாதிக்கும் என்று உணர்ந்து அதற்கேற்றார் போல தன்மையுடன் நடந்து கொள்வார்கள். பிறருடன் நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி செய்வார்கள்.
தீர்ப்பு: இவர்கள் வாழ்வில் மிகப்பெரிய லட்சியத்தை வைத்து அதை நோக்கி பயணம் செய்வார்கள். தன்னுடைய லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க தயாராக இருப்பார்கள். கட்டுப்பாடான வாழ்க்கை நெறிகளை கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மனிதர்கள் மற்றும் சூழ்நிலைகளை பற்றிய ஆழமான புரிதல் இருக்கும். அவர்களுடைய ஆழமான அறிவும் உள்ளுணர்வு திறனும் சிக்கலான கருத்துக்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. எதையும் வித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்து தீர்ப்பு சொல்வதில் வல்லமை மிக்கவர்கள்.
பிற சிறப்பியல்புகள்:
உதவும் பாங்கு: பிறருடைய உணர்வுகளுக்கு மரியாதை தருவார்கள். அவர்கள் மேல் அக்கறையும் புரிந்துணர்வும் கொண்டு அவர்களை வழிநடத்துவார்கள். மற்றவர்களுக்கு உதவுவதும் சமூகத்தில் தங்களது பங்களிப்பை நேர்மறையாக அளிக்கவும் அவர்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கும்.
தெளிவு: கடினமான கோட்பாடுகளையும் இலக்குகளையும் வைத்திருந்தாலும் எப்படி அடைவது என்பதைப் பற்றிய தெளிவான அறிவு அவர்களுக்கு இருக்கும். இந்த உலகத்தில் பிறரை விட தாம் வித்தியாசமாக நடக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.
படைப்புத்திறன்: இவர்கள் படைப்புத்திறன் மற்றும் கற்பனைத் திறன் மிக்கவர்கள். உள்மனம் கற்பனையால் நிறைந்த ஒரு பணக்கார உள் உலகத்தை கொண்டுள்ளன. இவர்கள் பெரும்பாலும் எழுத்து கலை அல்லது பிற படைப்பு வெளிப்பாட்டின் மூலம் தங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
உணர்வுகளை வெளிக்காட்டாத தன்மை: இவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் ஆழமாக சிந்திப்பார்கள். சில சமயங்களில் இவர்களுடைய உணர்வுகள் பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும். பிறர் மேல் ஆழ்ந்த அனுதாபம் மற்றும் பச்சாதாபம் இருந்தபோதிலும் அவர்கள் தங்கள் உண்மையான உணர்வுகளையும் எண்ணங்களையும் பிறரிடம் வெளிப்படுத்த முயல மாட்டார்கள்.
ஆலோசகர்: பிறருக்கு சிறந்த முறையில் ஆலோசனை சொல்வதில் வல்லவர்கள். இயற்கையாகவே ஞானம் மற்றும் இரக்கத்தின் பிறப்பிடமாக இருப்பார்கள். பிறர் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கான தீர்ப்புகளைத் தருவார்கள். பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வுகளைத் தருவார்கள்.
கற்றல்: இவர்கள் எப்போதுமே வாழ்க்கையில் கற்றுக்கொண்டே இருப்பார்கள். தனக்காகவும் பிறருடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவும் புதிய விஷயங்களை அறிந்துகொண்டே இருப்பார்கள். அதில் எப்போதும் களைப்படையவே மாட்டார்கள்.