Let's forget past worries and live happily https://www.dailythanthi.com
வீடு / குடும்பம்

கடந்த கால கவலை மறந்து களிப்புடன் வாழ்வோம்!

சேலம் சுபா

‘‘கனிவுடன் வாழ்க்கையை நோக்குங்கள். கடந்த காலத்தை எண்ணி உங்களை நீங்களே துன்புறுத்துவதை நிறுத்திவிடுங்கள். நெற்றியில் அடித்துக்கொண்டு ‘என்னதான் நினைத்துக் கொண்டிருந்தேன்’ என்று கேட்டுக்கொள்வதை விட, நன்றாக மூச்சிழுத்து, இன்னும் கனிவான கேள்வியாக, ’என்ன நான் கற்றுக்கொண்டேன்?’ என்று கேட்டுக் கொள்ளுங்கள்" என்கிறார் கரேன் சல்மான்சோன்.

சிலர் எப்போது பார்த்தாலும் தங்கள் கடந்த காலத்தை நினைத்து, அதாவது முடிந்துபோன நிகழ்வுகளை நினைத்து வேதனையில் மூழ்குவார்கள். அவர்களிடம் பேசும்போது அந்தப் பேச்சில் நிச்சயமாக தங்கள் கடந்த காலத்தை பற்றிய புலம்பல்கள் இருக்கும். எதிரில் பேசிக்கொண்டிருப்பவருக்கும் அந்தக் கடந்த கால சோகம் தொற்றிக்கொண்டு, அந்த சூழலே இறுக்கமாகிவிடும். எதிரில் இருக்கும் நபர் இவரைப் பார்த்து தனது மனதில் உள்ள கவலைகளை மறக்கலாம் என்று வந்திருப்பார். ஆனால், போகும்போது இவரின் புலம்பல்களையும் சேர்த்து மனம் கனமாகிப் போவார்.

ஒரு பெண்ணின் கணவருக்கு திடீரென்று விபத்து நேர்கிறது. உறவினர் எல்லோரும் பதறிப்போகிறார்கள். உடனடியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துப் போகிறார்கள். மருத்துவமனையிலிருந்து செல்வதற்கு முன் மருத்துவர் அவரது மனைவியிடம், "இங்க பாருங்கமா, உங்கள் கணவர் உயிர் பிழைத்து விட்டார். ஆனால், அவருக்கு கடந்த கால நினைவெல்லாம் வராது. நீங்கள் ஏதாவது கேட்டு அவரை தொந்தரவு செய்யாதீர்கள்" என்று சொல்ல, அதற்கு அந்தப் பெண்மணி அந்த சோகத்திலும் "ஐயா மருத்துவரே, தினம் தினம் இவருடைய கடந்த கால புலம்பல்களை எல்லாம் கேட்டுக் கேட்டு நான்தான் நோயாளியாக மாறிப்போனேன். அடுத்தது என்ன என்று யோசிக்காமல் எப்போது பார்த்தாலும் நடந்ததையே பேசிக்கொண்டு அதில் இருக்கும் வேதனைகளை சுட்டிக்காட்டி என்னையும் குத்திக்காட்டுவது அவருடைய வழக்கம். இனி, எனக்கு அந்தத் தொந்தரவு இல்லாமல் இருக்கும் என்றால், இவரை சொர்க்கத்தில் இருப்பது போல் பார்த்துக் கொள்வேன். கவலைப்படாதீர்கள்" என்று சொல்லிவிட்டு மகிழ்வுடன் அவரது கணவரை கூட்டிக்கொண்டு சென்றாள்.

அதைக் கேட்ட அந்த மருத்துவருக்கு, " ஓ… இதில் இப்படி வேறு இருக்கிறதா?" என்று எண்ணத் தோன்றியது.

கடந்த காலத்தை எண்ணுவதால் அந்த நிகழ்வுகள் மாறப்போகிறதா? நம் மனதுக்கு மகிழ்வைத் தந்து வாழ்க்கையை உற்சாகமாக அடுத்தக் கட்டம் நோக்கி நகர்த்திச் செல்ல உதவும் கடந்த கால நினைவுகள் இதற்கு விதிவிலக்கு. வேதனைகளைத் தரும் கடந்த கால நினைவுகளை மூளை பதிவிலிருந்து கழற்றி அகற்றினால்தான் நிகழ் கால இன்பங்களை முழுமையாக நம்மால் அனுபவிக்க முடியும்.

கரேன் சல்மான்சோன் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை எழுத்தாளர். மேலே உள்ள கருத்தில் கூறியதுபோல் தலையில் அடித்துக்கொண்டு மாற்ற முடியாத சென்றதை நினைத்து வருந்துவதை விடுத்து, ‘இதிலிருந்து நான் கற்றுக் கொண்டது என்ன?’ என்ற கேள்வியுடன் ஒரே ஒரு முறை அந்நிகழ்வை சீர்தூக்கி ஆராய்ந்து பின் அதை அப்படியே தூர வீசி விட்டு, முன்னோக்கிச் செல்வதே வாழ்வில் நிம்மதியைத் தரும் செயல் ஆகும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT