அந்தத் தெருவில் இருந்த கோயில் ஒன்றுக்கு நாள்தோறும் ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர் வருவது வழக்கம். அவர் இரண்டு கால்களும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலி வண்டியில் தினமும் அந்தக் கோயிலுக்கு வந்து அவர், ‘நன்றி… நன்றி’ என்று சொல்லி வணங்குவதை ஒருநாள் பார்த்தேன்.
அவரிடம், "எதற்காக இப்படி இறைவனுக்கு நன்றி சொல்கிறீர்கள்? உங்களை இந்த நிலையில் வைத்ததற்காகவா?” என்று கேட்டேன். அதற்கு அந்த இளைஞர் சொன்னார், "என்னிடம் எல்லாம் இருக்கின்றது. நன்றி சொல்வதற்கு ஒரு நாக்கு, உங்களைக் காண்பதற்கு கண்கள், கேட்பதற்கு காதுகள், சுவாசிக்க மூக்கு, கடமையைச் செய்து இறைஞ்ச ஒரு இதயம், அனைத்தையும் உணர ஒரு உடல் என இத்தனையும் எனக்குத் தந்த ஆண்டவன், உடலில் சிறு பாகத்தில் ஒரு குறையை வைத்து இருக்கிறார். எல்லாம் நிறைந்து இருக்கும் நான் அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும்” என்றார்.
என் மனம் நெகிழ்ந்தது. ‘எல்லா வசதிகளும் இருந்தும் எந்தக் குறையும் இன்றி இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் இறைவனுக்கோ அல்லது நமக்கு உதவி செய்த மற்றவர்களுக்கோ நன்றி சொல்லி பழகி இருக்கிறோமா’ என்று தோன்றியது. இறைவனோ அல்லது உதவி செய்பவர்களோ நமது நன்றியை எதிர்பார்த்து எதையும் செய்வதல்ல. ஆனால், நன்றி என்பது அவர்கள் எதிர்பார்க்காமல் நாமே அவர்களுக்கு செலுத்தும் ஒரு காணிக்கை அல்லது நன்றிக்கடன் ஆகும்.
அதிகாலையில் தூக்கத்தின் மூலம் நம்மை மரணிக்கச் செய்து, மீண்டும் விழிக்க வைத்து நமக்கு உயிர் அளிக்கும் அந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவது நமது கடமையாகும். அதேபோல்தான் நமது வாழ்க்கையில் நாம் துவண்டு விழும்போது ஆதரவாக வந்து நமக்கு நம்பிக்கை அளிக்கும் இதயங்களுக்கு நன்றி சொல்வது நமக்கு மேலும் நன்மையைத் தரும்.
நம்மைச் சுற்றி உள்ளவர்கள் செய்யும் நல்ல செயல்களைப் பாராட்டி நன்றி சொல்ல பழக வேண்டும். நாம் நன்றி சொல்வதைப் பார்த்து நம் குழந்தைகள் இந்த நல்ல பண்பை கற்க வேண்டும். இந்த அவசரகால முன்னேற்றம் நம்மிடமுள்ள பல நற்பண்புகளை பறித்து வருகிறது. அதில் ஒன்று நன்றி பாராட்டுதல்.
நன்றி எனும் அந்த ஒற்றை வார்த்தை செய்யும் ஜாலங்கள் ஏராளம். பிரச்னை செய்யும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சென்று, ‘நன்றி நண்பரே’ என்று சொல்லிப் பாருங்கள், பிரச்னைகள் ஓடிவிடும்.
ஆட்டோ அல்லது பேருந்துகளை விட்டு இறங்கும்போது அதன் ஓட்டுநரிடம் நன்றி சொல்வது, நமக்காக நம் வீட்டு வேலைகளைச் செய்யும் பணிப்பெண்களிடம் நன்றி சொல்வது என நன்றியின் மகத்துவத்தை அறிந்து, அதை வாழ்வில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மதிப்பை நாம் பெறுவது உறுதி.