Let's live knowing good and bad 
வீடு / குடும்பம்

நல்லது - கெட்டது தெரிந்து வாழ்வோம்!

பாரதி

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு, ’நல்லது மட்டும்தான் செய்ய வேண்டும். கெட்டது செய்யவே கூடாது’ என்று சொல்லி வளர்ப்பார்கள். ஆனால், எந்த விஷயம் சொல்லித் தந்தாலும் அதனைத் தெளிவாக சொல்லித் தர வேண்டும் என்பது மிகவும் முக்கியம் இல்லையா?

‘நல்லவராய் இருப்பது நல்லது; ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்து.’ இந்தத் தத்துவத்தைக் கூறியது பெர்னாட்ஷா. நாம் ஒரு விஷயத்தில் எத்தனை நன்மைகள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்கிறோம். அதேபோல், என்னென்ன தீமைகள் உள்ளன என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கும் இதை அறிவுறுத்துவது மிக மிக அவசியம்.

உதாரணத்திற்கு, ஒருவர் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். அவருக்கு அவருடைய பணத்தை தருமம் செய்வதைவிட, வேறு எதுவுமே தெரியாது. தருமம் செய்வது ஒன்றே மிக உத்தமமான காரியம்; அதுவே நன்மைகளுக்கு எல்லாம் தலையாய நன்மை என அவர் நினைத்து, வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் தருமம் செய்து வருகிறார்.

இது தெரிந்த ஒருவர், தன்னை பணம் இல்லாமல் தவிக்கும் ஒருவராக மாற்றிக்கொண்டு அந்தப் பணக்காரரை ஏமாற்றி பணம் வாங்குவதை வழக்கமாக வைத்துக்கொள்கிறார். அந்தப் பணக்காரரும் இது எதுவும் தெரியாமல் பணத்தை கொடுத்து வருகிறார். இதில் அவருக்கு என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது, இதுபோன்று தொடர்ச்சியாக ஏமாற்றம் அடைவதைத் தவிர? அவர் தர்மம் செய்வதற்கான உண்மையான நோக்கமே உடைந்துவிடுகிறது இல்லையா?

இதுவே அந்தப் பணக்காரர் தான் தர்மத்தை சரியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணி, அதில் உள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வினை யோசித்து சரி செய்தால், அவரின் இந்த உதவி சரியான ஆட்களுக்குச் சென்று, அவர்களும் பயனடைவார்கள்தானே.

ஆகையால், ஒவ்வொரு விஷயம் செய்யும்போதும் அதில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை அலசி ஆராய்வது அவசியம். ‘தீமைகளைப் பற்றி தெரிந்துக்கொள்வதில் என்ன அவசியம் உள்ளது? நன்மைகளைத் தெரிந்துகொண்டால் போதாதா?’ என்று மட்டும் எண்ணி அலட்சியமாக இருக்க வேண்டாம். ஒரு சிறப்பான செயலுக்கு, நன்மை, தீமை இரண்டும் இரு திசைகளிலிருந்து கைக்கொடுக்கும் இரு பலங்கள்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே நல்லது கெட்டதை கற்றுத்தருவது மிக அவசியம். இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவி செய்யும்.  நல்லதை சுட்டிக்காட்டும்போதே கெடுதல்களையும் எடுத்துச்சொல்வது நல்லது.

தனது குழந்தை யார் உதவியும் இல்லாமல் பள்ளிக்குச் சென்று வீட்டிற்கு வர வேண்டும் என்று ஒரு பழக்கத்தை கற்றுத்தரும்போதே, பள்ளிக்குச் செல்லும் வழியில் என்னென்ன தீமைகளை சந்திக்க நேரிடும், அதை எப்படிச் சமாளிப்பது போன்றவற்றையும் சொல்லித்தர வேண்டும். அந்தக் கெடுதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள என்னென்ன செய்யலாம் என்றும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இதுபோல்தான் நல்ல பழக்கத்தைக் கற்றுத்தருவதோடு, அதனால் ஏற்படக்கூடிய தீமைகளையும் சொல்லித்தந்து, அவற்றை சமாளிக்கும் முறைகளையும் கற்றுத்தருவது அவசியம்.

ஆகையால், ஒரு விஷயத்தில் நல்லவை, கெட்டவை, முடியும், ஏன் முடியாது, எது செய்யலாம், எது செய்யக்கூடாது என்பன போன்று இரண்டையுமே தெரிந்துக்கொண்டு, புரிந்துகொண்டு வாழ்வது சிறந்தது.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT