வீடு / குடும்பம்

மாமியாரை கைக்குள் போட்டுக்கொள்ள எளிய ஆலோசனைகள்!

பொ.பாலாஜிகணேஷ்

மாமியார், மருமகள் பிரச்னை என்பது எல்லோரது வீட்டிலும் பொதுப் பிரச்னையாக உள்ளது. ஆனால், மாமியார், மருமகள் பிரச்னை வராமலேயே சுமூகமாகக் குடும்பத்தைக் கொண்டு செல்லலாம். ‘எப்படி இதெல்லாம் சாத்தியம்?’ என்றுதானே யோசிக்கிறீர்கள். அதற்கான சில எளிய யோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

போட்டி போட வேண்டாம்: உங்கள் மாமியாரைக் கவர ஒருபோதும் அவருடன் போட்டி போடாதீர்கள். அவருடைய மகனை அவரை விட நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்வதாக ஒருபோதும் அவரிடம் சொல்ல வேண்டாம்.

பாராட்டுவது நல்லது: மாமியார் சமைக்கும் உணவுகள் நன்றாக இருக்கிறது என்று பாராட்டத் தவறாதீர்கள். அவருக்குப் பிடித்த சமையலைக் கற்று அதை அவருக்குச் செய்து கொடுத்தால் மாமியார் மகிழ்ச்சியாக இருப்பார்.

மாமியார் முன்பு கணவருடன் கவனமாக இருங்கள்: உங்கள் மாமியார் முன்பு அவரது மகனை நன்றாக கவனித்துக்கொள்வது அவரை ஈர்க்கும். மகனைப் பற்றிய எந்தப் புகாரையும் மாமியாரிடம் சொல்லக் கூடாது. முடிந்தால் ஏதாவது பாராட்டு சொல்லலாம். எந்தத் தாயும் தனது மகனைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை விரும்புவதில்லை.

மரியாதை முக்கியம்: உங்கள் மாமியாருடன் வாக்குவாதம் செய்வதற்கு பதிலாக, நல்ல தொடர்பை அதிகரிக்கும் வழிகளைக் கண்டறிவது நல்லது. உங்கள் கணவரின் தாய், உங்களை விட மூத்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால் அவர் எப்போதும் மதிக்கப்பட வேண்டியவர்.

மாமியாருக்காக நேரம் செலவிடுங்கள்: உங்கள் மாமியாருக்கென்று சிறிது நேரம் ஒதுக்குவது அவசியம். அவரை இரவு உணவிற்கு அழைப்பது, ஸ்பாவிற்கு அழைத்துச் செல்லவது அவருக்குப் பிடிக்கும். ஒன்றாக வெளியே செல்வதும், அவருடன் ஃபங்ஷன்களுக்கு செல்வதும் அவருடனான உறவை அதிகரிக்கிறது.

மாமியார் கருத்தை ஏற்றுக்கொள்வது: எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தோன்றினாலும், சில சமயங்களில் அவரது உதவியை நாடுவதும் நல்லது. நீங்கள் பர்னிச்சர்களை மாற்ற நினைத்தால் உங்கள் மாமியாரின் ஆலோசனையை ஒருமுறை கேட்டுக்கொள்வது அவரை மிகவும் ஈர்க்கும்.

சோம்பேறித்தனம் வேண்டாம்: வீட்டை சுத்தம் செய்யும்போது சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருங்கள். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் மாமியார் தங்கள் மருமகளிடம் முதலில் எதிர்பார்க்கிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.

விசாரிப்புகள்: உங்கள் மாமியாருடன் நீங்கள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். அவ்வப்போது போன் செய்து அவரது உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மாமியார் உங்களை அழைக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.

பரிசுகள் கொடுக்கத் தவறாதீர்கள்: நீங்கள் உங்கள் மாமியாரை சந்திக்கும் போதெல்லாம், அவருக்கு ஏதாவது பரிசுகளை வழங்குவது அவர்களை ஈர்க்கும். அவர்களுக்காக எதையாவது கொடுத்துக்கொண்டே இருப்பது, உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

மேற்கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றினாலே, உங்கள் வீட்டில் மாமியார், மருமகள் சண்டை நீங்கி, வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி தாண்டவமாடும் என்பதில் சந்தேகமே இல்லை.

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

காலை 11 மணிக்கு முன்னதாக இந்த 7 விஷயங்களை செய்துவிட்டாலே வெற்றிதான்! 

சனி தோஷம் நீக்கும் புரட்டாசி சனி விரதம்!

SCROLL FOR NEXT