Sculptor 
வீடு / குடும்பம்

மனதுக்கு குற்ற உணர்வை தரும் பிழைகள்!

க.பிரவீன்குமார்

சில நேரங்களில் நம்மை அறியாமல் ஒரு சில தவறுகள் செய்வோம். அது தவறு என்று நமக்குத் தெரியும்பொழுதும் அதைத் திருத்திக்கொள்ள நிச்சயமாக முயற்சிக்க மாட்டோம். காரணம், அது யாருக்கும் தெரியாது என்ற ஒரு எண்ணம் நமக்குள் தோன்றும். அந்த எண்ணம் சரிதானா என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மன்னர் ஒருவர் வழக்கம் போல் தனது அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தார். அரண்மனைக்குள்ளே உலாவுவதால் சளிப்பு ஏற்பட, வெளியில் செல்லலாம் என்று முடிவெடுத்தார். வெளியில் உலாவிக் கொண்டிருந்த மன்னர், வழியில் ஒரு சிற்பக்கூடத்தைக் காண்கிறார். அங்கு சென்று சிற்பி சிற்பங்களைச் செதுக்கும் விதங்களை எல்லாம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தனது வேலையில் மும்முரமாக இருந்ததால் மன்னர் வந்திருப்பதை அந்த சிற்பி கவனிக்கவில்லை.

நன்றாகச் செய்து கொண்டிருந்த சிற்பத்தை ஓரமாக வைத்து விட்டு மீண்டும் ஒரு கல்லை எடுத்து அதேபோன்று இன்னொரு சிற்பத்தையும் வடிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த மன்னருக்கு மனதில் சில குழப்பங்கள். 'இந்தச் சிலை நன்றாகத் தானே உள்ளது. பின்னர் ஏன் அதேபோன்று இன்னொரு சிலையைச் செய்ய வேண்டும்? ஒருவேளை இதேபோன்று இன்னொரு இடத்திற்கு இதே சிலையைச் செய்வாரோ?' இந்த மனக் குழப்பங்களுடனே பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த மன்னர், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், சிற்பியிடமே அதைக் கேட்டுவிட்டார்.

‘'நீ முன்னர் வடித்த சிலை நன்றாகத்தானே உள்ளது. பிறகு ஏன் இன்னொரு சிலையை வடிக்கிறாய்” என்றார். அதிர்ச்சியுற்று திரும்பிய சிற்பி, “இல்லை மன்னா, நான் செய்த சிலையில் ஒரு சிறு பிழை உள்ளது. அதனால்தான் இன்னொரு சிலையைச் செய்கிறேன்' என்றார்.

“பிழையா? அப்படி ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே?” என்றார் மன்னர்.

‘‘அது சிலையின் முன் பகுதியில் இல்லை மன்னா. பின்னால் உள்ள கூந்தலில் ஏற்பட்ட பிழை” என்றார் சிற்பி.

'‘சரி, இந்த புதிய சிலையை நீ எங்கு வைக்கப்போகிறாய்” என்று கேட்டார் மன்னர்.

அருகில் உள்ள ஒரு கோயிலில் 40 அடி உயரத்தில் இந்தச் சிலையை வைக்கப்போகிறேன் மன்னா” என்றார்.

“நாற்பது அடி உயரத்தில் இருக்கும் அந்தச் சிலையில் உள்ள பிழையை யாராவது கவனிக்கப் போகிறார்களா! அதற்கு ஏன் இன்னொரு புதிய சிலையை வடிக்க வேண்டும். ஏற்கெனவே வடித்ததை கொண்டு சென்று வைக்க வேண்டியதுதானே” என்றார் மன்னர்.

“மன்னா, இது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால், அந்த வழியாக நான் கடந்து செல்லும்பொழுது இந்தச் சிலையைப் பார்க்கையில் எனக்கு முதலில் ஞாபகம் வருவது நான் செய்த பிழை மட்டுமே. அதனால் நான் புதிய சிலையைச் செய்து வைத்து விடுகிறேன். இதனால் எனக்கு எந்தக் குற்ற உணர்வு இல்லாமல் என் வேலையின் மீது திருப்தி ஏற்படும்” என்றார் சிற்பி.

இதைக் கேட்ட மன்னரும், ‘சரிதான் நாம் செய்யும் சிறிய பிழை மற்றவர்களுக்குத் தெரியவா போகிறது என்று பல தவறுகளை, பல நேரங்களில் நாம் செய்கிறோம். ஆனால், நமக்குத் தெரியுமல்லவா, அது தவறென்று’ என்பதை மன்னர் உணர்ந்து சிற்பியிடம் வணங்கி விடைபெற்றுக் கொண்டார்.

நாமும் பல நேரங்களில் இப்படித்தான். ‘சிறு பிழைதானே, பிறகு பார்த்துக் கொள்வோம்’ என்று பல தவறுகளுக்குக் காரணமாக இருப்போம். அது யார் கண்களுக்கும் தெரியாதுதான். ஆனால், நமக்கு நன்றாகத் தெரியும். அதனால் மற்றவர்களுக்காக அல்லாமல் உங்கள் குறைகளை உங்களுக்காக நீங்களே சரி செய்து கொள்ளுங்கள்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT