ஆற்றல் மிக்க தியானத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது நம் தமிழகம். இதன் பலன்களை அனுபவ பூர்வமாக சொன்னவர்கள் நம் சித்தர்கள்தான். இருப்பினும் இதன் பெருமைகள் நமக்குத் தெரியவில்லை. ஆனால், மேல் நாட்டில் இதன் பெருமை தெரிந்து அதைப் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு, அதன் மகிமையை ஆய்வுகள் செய்தும் வருகின்றனர்.
தியானம் நீண்ட நேரம் கவனம் செலுத்தவும், உங்கள் கவனத்தை அதிகரிக்கவும் உதவும். நீங்கள் வேகமாக தூங்கவும், உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். கவலை மற்றும் அச்சங்கள் போன்ற மனநலப் பிரச்னைகளைக் குறைக்க உதவும். உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களின் அழுத்தத்தைக் குறைக்கும்.
தியானம் வலியைக் குறைத்து உணர்ச்சிக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும். உங்களை நன்றாகப் புரிந்துகொள்ளவும் மற்றவர்களிடம் நேர்மறையான உணர்வுகளையும் செயல்களையும் அதிகரிக்கவும் உதவும். நினைவாற்றலையும், மனத் தெளிவையும் அதிகரிக்க உதவும். உணர்ச்சிப் பிரச்னைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும், சமாளிக்கவும் உதவும். உங்கள் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும், கவனம் செலுத்தவும், பிரச்னைகளை தீர்க்கவும் உதவும்.
தியானம் மன உளைச்சலை குறைக்கிறது. மேலும், பிரச்னைகளை கையாளவும், அதிலிருந்து மீண்டு வரவும் உதவுகிறது. தியானத்தால் ஏற்படும் மூளை மாற்றங்கள் மன நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தியானம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மரபணுக்களை தூண்டுகிறது என்பதை அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தியானத்தால் தூண்டப்பட்ட மரபணுக்களால் உடலுக்கு மூன்று முக்கியமான நன்மைகள் ஏற்படுகின்றன. ஒன்று உயிரணுக்களின் ஆற்றல் தொழிற்சாலை எனப்படும் ‘பைட்டோ காண்ட்ரியாவின்’ செயல்பாடு மேம்படுகிறது. இரண்டாவதாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோன் உற்பத்தி அதிகமாகிறது. மூன்று உயிரணுக்கள் வயதாகி இறந்து போவதைத் தடுத்து அவற்றின் டிஎன்ஏவை பலமாக வைக்கும், குரோமோசோம்களின் மூடி எனப்படும் ‘டிலோமியர்கள்' சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. நாம் எவ்வளவு தூரம் தியானம் செய்கிறமோ அவ்வளவு தூரம் நமது மரபணுக்கள் தூண்டப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தியானத்தின்போது தலையின் உச்சிக்கு நம் கவனத்தை கொண்டு செல்லும்போது செரிபெரல் கார்டெக்சில் மென்மையான அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் செரிபெரல் கார்டெக்சின் செயல்கள் தீவிரமடைகின்றன. இதனால் மனித மூளையில் வன்முறையைத் தூண்டும் காரணிகள் குறைந்து நன்முறையான காரணிகள் ஊக்குவிக்கப்படுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மனிதர்களின் மூளையில் செரிபெரல் கார்டெக்ஸ் 80 சதவீதம் இடம் பெற்றுள்ளது. இது பகுத்தறிவு மையமாக உள்ளது. செரிபெரல் கார்டெக்ஸ் வளர்ச்சி அடைந்துள்ளதால்தான் மன்னித்தல், பொறுத்து கொள்ளுதல், இரக்கம், அன்பு, கருணை போன்ற மனிதப் பண்புகள் வெளியிடப்படுகின்றன.
தியானம் செய்வதால் மனம் நிம்மதியாகிறது என்பதை ஆய்வுபூர்வமாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு நிரூபித்துள்ளது. தியானம் செய்வதால் மனநிலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதனால் அதிகரிக்க முடியும் என்பதை விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு நிரூபித்துள்ளது. மூளையின் முன் இடது பக்கம் சுறுசுறுப்பாக இயங்கும்போது மனிதர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். இதற்கு தியானம் செய்வது உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.