மேகத்தின் மழைத்துளி மண்ணில் விழுந்து பயன் விளைவிக்காமல் சென்றதுண்டா? அதைப்போலத்தான், பேசுகின்ற சொற்களுக்கும் வார்த்தைகளுக்கும் விளைவு உண்டு. பயனற்ற சொற்களைத் தவிர்த்து விடுங்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் முறையாகப் பயன்படுத்துங்கள். அப்போது இன்றைய நாளை முறையாகப் பயன்படுத்துகிறோம் என்ற உண்மை விளங்கும்.
வீதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகள் பேசிக்கொண்டது இது. ‘‘நாளைக்கு எங்க அப்பா ஆப்பிள் வாங்கி வருவார்’’ என்று கூறியது ஒரு குழந்தை. அதற்கு மற்றொரு குழந்தை, ‘‘அதற்கு அடுத்த நாள் எங்க அப்பாவும்தான் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா என்று நிறைய வாங்கிக் கொண்டு வருவார்’’ என்றது.
அதற்கு முதல் குழந்தை, ‘‘ஆப்பிளை நான் மட்டும்தான் சாப்பிடுவேன். யாருக்கும் தர மாட்டேன்’’ என்று கூறியது. அதற்கு அடுத்த குழந்தை, ‘‘அப்படி என்றால், நீ எங்கள் வாசல் வழியாக பள்ளிக்குச் செல்லும் போது உன்னை போக விடாமல் தடுப்பேன்’’ என்றது. அதற்கு அடுத்த குழந்தை, ‘‘நீ மட்டும் எங்க வீட்டுப் பக்கம் வரமாட்டாயா? அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன் உன்னை’’ என்றது.
இதை கவனித்துக் கொண்டிருந்த பெரியவர், ‘என்ன விஷயம்?’ என்று கேட்க, குழந்தைகள் இதைச் சொல்ல, ‘‘அட இதுக்குப் போயா இப்படிப் பேசிக்கொள்கிறீர்கள்? உங்கள் அப்பாக்கள் இருவரும் பழங்களை வாங்கிக் கொண்டு வரட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சண்டை போடாமல் விளையாடுங்கள், எதையும் பகிர்ந்து சாப்பிடுங்கள்’’ என்று கூறி விட்டுச் சென்றார்.
இதேபோல் உள்ள ஒரு குட்டிக் கதையைப் பாருங்கள்:
இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவருமே ஏழைகள். அவர்கள் ஒருநாள் ஒரு புல்வெளியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். விரைவிலேயே பொழுது இருட்டி விட்டது. அவர்களில் ஒருவன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, ‘‘இந்தப் புல்வெளி மட்டும் என்னுடையதாய் இருந்தால் இங்கு நான் கழுதைகள் வளர்த்துப் பெருக்குவேன்?’’ என்றான்.
அதைக் கேட்ட அடுத்தவன் சொன்னான், ‘‘நானும் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அளவுக்கு அத்தனை ஆடுகளை வளர்க்க விரும்புகிறேன்?’’
இதைக் கேட்டு முதலாமவன் கத்தினான். “உன் ஆடுகளை என் புல்வெளியில் மேய விட மாட்டேன்’’ என்றான்.
இதைக் கேட்ட அடுத்தவனும் கோபத்துடன், ‘‘மேய விட மாட்டாயா? அப்படி என்றால் நான் உன் அசட்டு கழுதைகளையும், உன்னையும் அடித்து விரட்டி விடுவேன்’’ என்றான்.
இப்படியே ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து, முடிவில் சண்டையிடத் தொடங்கினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வழிப்போக்கன் அவர்களிடம், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டான். இரு நண்பர்களும் அவனிடம் விவரத்தைச் சொன்னார்கள்.
கடைசியில் வழிப்போக்கன், "இல்லாத ஒன்றிற்காக நீங்கள் சண்டையிட்டு கொள்கிறீர்களே, நீங்கள் மிகவும் புத்திசாலிகள்தான்" என்று சிரித்தபடியே சென்றான்.
வீண் பேச்சுகள் ஒருபோதும் வேண்டாம். வீண் விவாதங்கள், உரையாடல்கள் விபரீதத்தில்தான் முடியும். நல்ல சொற்கள் நன்னிலத்தில் விழுந்த விதை போல நற்பயன் அல்லவா நல்கும். அதை மறப்பானேன்?