குழந்தைகளுக்கு மிகவும் பிரியமானவர்கள் தாத்தா, பாட்டிதான். அப்பா, அம்மாவை விட அதிகமாக செல்லம் கொடுப்பவர்கள் அவர்கள் என்ற காரணத்தினால் பொதுவாக எல்லா குழந்தைகளுமே தம் தாத்தா. பாட்டிகள் மீது அதிக அளவு அன்பு வைப்பது சகஜம். தற்கால தாத்தா. பாட்டிகள் தங்களை அந்தப் பெயர் சொல்லி பேரக்குழந்தை அழைக்கக்கூடாது என்ற கண்டிஷன் போடுகிறார்கள்.
தொழில்நுட்பம் பெருகியதற்கு ஈடாக மனித மனங்களும் பல மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. சென்ற தலைமுறையில் தாத்தா. பாட்டி என்று நாம் அன்போடு அழைத்த முதியவர்கள் அந்த சொற்களுக்காக ஆனந்தப்பட்டார்கள். ஆனால். தற்போது இருக்கும் இளம் தாத்தா, பாட்டிகள் இந்த சொற்களை விரும்புவதே இல்லை என்பது கசப்பான நிஜம்.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம். ''என்னுடைய மகளுக்கு குழந்தை பிறந்தாலும் நான் பார்ப்பதற்கு இளமையாகத்தானே இருக்கிறேன்? எதற்கு என்னை பாட்டி என்று கூப்பிட வேண்டும்? என்கிறார்கள். அம்மாவின் அம்மா அல்லது அப்பாவின் அம்மாவை பாட்டி அல்லது அம்மம்மா, ஆத்தா என்று அந்தந்த பகுதிகளில் வழங்கப்படும் சொற்களுக்கு ஏற்ப அழைப்பதுதானே முறை? ஆனால். அப்படி அழைத்தால் தாங்கள் மிகவும் வயதானவர்கள் போல தெரிகிறோம் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். சென்ற தலைமுறையில் தலை நரைத்துப் போனால் அதைப்பற்றி ஆண்களும் பெண்களும் அவ்வளவாக கவலைப்பட்டதில்லை. பெரும்பாலும் நரைத்த தலையுடன்தான் இருந்தார்கள்.
ஆனால். இப்போது ஹேர் டையின் உபாயத்தால் பெரும்பாலானவர்கள் நரை முடியை மறைத்துக் கொண்டு தங்களை இளமையாக காண்பிக்க முயற்சிக்கிறார்கள். ஆனாலும். மூட்டு வலி, வயதின் பிற கோளாறுகளான சருமச்சுருக்கம், முகச்சுருக்கம் எல்லாமே அவர்கள் வயதை காட்டிக் கொடுத்து விடும். இருந்தாலும் தாத்தா, பாட்டி என்று அழைக்கக்கூடாது என்பதில் சிலர் பிடிவாதமாகவே இருக்கிறார்கள்.
எங்கள் பகுதியில் உள்ள ஒரு தாத்தா, பாட்டி தனது ஆறு வயது பேத்தியை தங்களை பெரியம்மா, பெரியப்பா என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொல்லி, அதன்படியே அந்தப் பிள்ளை அழைத்து வருகிறது. ஆனால், அப்பாவின் அண்ணன்தானே பெரியப்பா என்று அழைக்கப்பட வேண்டியவர்? தாத்தா எப்படி பெரியப்பா ஆக முடியும்? அவர்கள் சொல்லும் காரணம் அப்பாவுடைய அப்பா பெரிய அப்பா. ஆனால், இது எவ்வளவு பெரிய உறவு முறை சிக்கலுக்கு உள்ளாகும் என்று யோசித்துப் பார்ப்பதில்லை.
வயதுக்கேற்ற பக்குவத்துடன் நடந்துகொள்வதுதான் அழகு. வயதாகவில்லை என்று வெளிப்புறத்தில் போடப்படும் மேக்கப் தங்களை இளமையாக காட்டிக்கொள்ள விரும்பினாலும் அவர்களது உடல் இயக்கம், நடை உடை பாவனைகள் கண்டிப்பாக அவர்களது முதுமையை வெளிச்சம் போட்டுக் காட்டும். வெறும் தோற்றத்தில் மட்டும் இளமையாக காண்பிதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. மனது இளமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். புதுமையான கருத்துக்கள் எந்த வயதிலும் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்.
சில முதியவர்கள் சொல்வது, ''எங்கள் பேரன், பேத்திகள் எங்களை தாத்தா, பாட்டி என்று அழைத்தால் பிற வீட்டு குழந்தைகளும் எங்களை அதேமாதிரி அழைப்பார்கள். எங்களுக்கு அது பிடிப்பதில்லை. அதனாலேயே நாங்கள் எங்கள் பேரக் குழந்தைகளை எங்களை அம்மா, அப்பா என்றே அழைக்கச் சொல்கிறோம்” என்கிறார்கள். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் பாட்டியின் பெயரோடு சேர்த்து அம்மா என்று அழைக்க வேண்டுமாம். உதாரணத்திற்கு பாட்டி பெயர் சாந்தி என்றால், ‘சாந்திமா’ என்று அழைக்க வேண்டுமாம். சொந்தப் பிள்ளைகளையே எந்த அம்மாவும் பெயர் சொல்லி அழைக்க அனுமதி தர மாட்டார்கள். அப்படி இருக்கும்போது 50 வருடம் வித்தியாசமுள்ள ஒரு சிறு குழந்தை தன்னை பெயருடன் சேர்த்து அம்மா என்று அழைப்பது அவர்களுக்கு என்ன ஆனந்தம் தருகிறது என்று புரியவில்லை.
ஏற்கெனவே கூட்டுக் குடும்ப முறை சிதைந்து தனித்தனி தீவுகளாக மனிதர்கள் வசித்து வரும் சூழ்நிலை நிலவுகிறது. நிறைய வீடுகளில் ஒற்றைப் பிள்ளை மட்டுமே இருக்கிறது. அதனால் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என்று யாரும் இருக்கப்போவதில்லை என்பது மிகவும் கசப்பான நிஜம். அப்படி இருக்கும்போது தாத்தா பாட்டி என்ற சொல்லும் வழக்கொழிந்து போகும்.
இது அவரவருடைய சொந்த விருப்பம் என்றாலும் அந்த தாத்தா, பாட்டி என்ற சொற்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. முதிய வயதிலும் இளமையாக தோற்றமளிக்க உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக மன ஆரோக்கியம் அவசியம். நேர்மறை சிந்தனையோடு, புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்தால் 80 வயதிலும் ஒருவர் இளமையாக இருக்க முடியும். மனதளவில் இதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, பெண்கள்தான் இந்த வயதைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள்.