Gold jewelry 
வீடு / குடும்பம்

மக்களே உஷார்! கவரிங் நகையா? தங்க நகையா? ஏமாறாதீங்க!

சுடர்லெட்சுமி மாரியப்பன்

பார்ப்பதற்கு தங்கம் போல் இருக்கும்; ஆனால் தங்கமாக இருக்காது. தற்போது சந்தைகளில் விற்கப்படும் நகைகளில் பல ஏமாற்றங்கள் நடக்கின்றன. கலப்படம் செய்யப்பட்ட தங்கத்தை விற்பது, தங்கம் போலே இருக்கும் கவரிங் நகைகளை விற்பது என மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.

தங்கம் மற்றும் கவரிங் நகைகள் பற்றியும், அதை வேறுபடுத்துவதற்கான வழிமுறைகளையும் இந்த பதிவில் காணலாம். 

தங்கம் 

புவியில் கிடைக்கும் உலோகங்களில் மிக குறைவாக கிடைப்பது தங்கம் மட்டும் தான். நிலத்தடியில் இருந்து தங்கம் எடுப்பது மிகவும் கடினமானது மற்றும் வேலைப்பளு மிக்கது. தங்கத்தின் விலையானது, அதை பிரித்தெடுக்கும் செலவு மற்றும் மக்களிடையே உள்ள தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

தங்கத்தின் சில தனிச்சிறப்புகள் என்னவென்றால்,

தங்கம் துரு பிடிக்காது, ஆக்சிஜனேற்றம் அடையாது, அதன் எடை நிலையானதாக இருக்கும். மேலும் தங்கத்தை அணியும் போது உடலில் எந்த பக்க விளைவும் ஏற்படாது. பார்ப்பதற்கும் பளபளப்பாக இருக்கும்.

கவரிங்

தங்கம் போ‌ன்றே ‌மி‌ன்னு‌ம் கவரிங் நகைகள் மும்பை, கொல்கட்டாவிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் பித்தளை, வெண்கலம், துத்தநாகம், அலுமினியம், நிக்கல் ஆகிய உலோகங்களால் இந்த கவரிங் நகைகள் செய்யப்படுகின்றன. இதில் உள்ள நிக்கல் உலோகம் தான், அதிக ஒவ்வாமையை ஏற்படுத்தும். இந்த உலோக ஆபரணங்கள் மீது தங்க முலாம் நிறத்தைப் பூசி விட்டால், பார்ப்பதற்கு பளபளப்பாக தெரியும்; தங்கம் என்று கூட சிலர் ஏமாறும் அளவிற்கு பளபளப்பாக இருக்கும்.

jewelry

கவரிங் நகையா? தங்க நகையா? எப்படி கண்டறிவது?

ஒரு கையில் தங்க நகையையும், மறு கையில் கவரிங் நகையும் வைத்து இதில் எது தங்க நகை என்று கேட்டால் கண்டறிய முடியுமா? சாதரணமாக பார்த்தால் கடினம் தான், ஆனால், சில சோதனைகள் செய்தால் எளிதில் கண்டறிய முடியும்.

மேக்னெட்டிக் சோதனை: தங்க நகையை காந்தத்தின் அருகில் கொண்டு சென்றால் அது காந்தத்துடன் ஒட்டாது. அதுவே கவரிங் நகை என்றால் காந்தத்துடன் ஒட்டிவிடும். ஆனால் இரும்பு இல்லாத கவரிங் நகைகள் காந்தத்தில் ஒட்டாது. அதை கண்டுபிடிக்க மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

ஹால் மார்க் நகை சோதனை: ஹால் மார்க் நகையா என்பதை கவனித்து வாங்க வேண்டும். 22 கேரட் தங்கமா? 24 கேரட் தங்கமா? BIS முத்திரை பதிந்து இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். கவரிங் நகையில் இது போன்று இருக்காது.

BIS Care செயலி சோதனை: புதிதாக தங்க நகை வாங்கும் போது HUID நம்பர் கொடுக்கப்படும். அந்த நம்பரை BIS Care என்ற மொபைல் செயலியில் செக் செய்தால் நகையை பற்றிய முழு விவரமும் கிடைத்துவிடும்.

ஆசிட் சோதனை: தங்கத்தை ஒரு கல்லில் உரசி அதில் நைட்ரிக் ஆசிட்டை ஊற்றினால், தங்கமாக இருந்தால் கரையாது. கவரிங்காக இருந்தால் கரைந்துவிடும். ஆனால் ஆசிட் போன்றவற்றை மிக பாதுக்காப்பாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் இதை தவிர்ப்பது நல்லது.

இது போன்ற சோதனைகள் நகையை தங்கமா? கவரிங்கா? என கண்டறிய உதவுகின்றன.

தங்கம் எப்படி வாங்க வேண்டும்?

999 - 24 கேரட் சுத்தமான தங்கம். இந்த சுத்தமான தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது. தங்கத்துடன் மற்ற உலோகங்களை கலந்தால் தான் ஆபரணங்கள் செய்ய முடியும். 916- 22 கேரடில் ஆபரணங்கள் செய்ய முடியும். தங்கம் வாங்கும் போது 18 கேரட் தங்கம் வாங்குவது சிறந்தது. ஏனெனில், இதில் 75% தங்கமும், 25% மற்ற உலோகங்களும் கலக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக தங்கம் வாங்கும் போது அதற்கான பில்லை சரிபார்த்து வாங்க வேண்டும். செய்கூலி, சேதாரம் என அனைத்தையும் கவனிக்க வேண்டும்.  

கடந்த இரண்டு மாதங்களாகவே, தங்கத்தின் விலைஅதிகமாகத்தான் இருக்கிறது (இந்த கட்டுரையை பதிவிடும் நேரம் தங்கத்தின் விலை 1 கிராம் 6,770). இந்த நிலையில் குறைந்த விலையில் தங்கம் என சந்தைகளில் விற்கப்பட்டால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே தங்கம் வாங்கும் போது இவற்றையெல்லாம் கவனித்து வாங்குவது அவசியம்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT