ஐ.க்யூ. அதிகமுள்ள நபர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும், சில வேடிக்கையான அல்லது நகைச்சுவையான பழக்கங்களைக் கொண்டிருக்கலாம். அது அவர்களின் தனித்துவமான சிந்தனை மற்றும் உலகத்துடன் தொடர்புகொள்வதை பிரதிபலிக்கிறது. உயர் IQ நபர்களின் சில வேடிக்கையான பழக்க வழக்கங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பகல் கனவு காண்பது: பொதுவாக பகல் கனவு காண்பதை வெட்டி வேலை என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால், ஐ.க்யூ. அதிகமுள்ள நபர்கள் பகல் கனவு காண்பது அதிகமாக இருக்கும். அவர்கள் ஒரு உரையாடலின் நடுவில் கூட ஆழ்ந்த சிந்தனையில் அல்லது பகல் கனவுகளுக்குச் செல்லலாம். இது ஒருவருடைய படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. மூளையின் பல்வேறு பகுதிகளை தூண்டிவிட்டு ஞாபக சக்தி மற்றும் சிறந்த முறையில் மூளை வேலை செய்வதை உறுதி செய்கிறது.
2. தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்: இவர்கள் அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். அதனால் தங்களுக்கு எழும் ஐயங்களை தீர்த்துக் கொள்வார்கள். நிறைய கற்றுக்கொள்வார்கள். தன்னைப் பற்றிய ஒரு சிறந்த புரிதலோடு இருப்பார்கள். சிக்கலான பிரச்னைகளைப் பற்றி தங்களுக்குள் முழு உரையாடல்களையும் பேசிக்கொண்டு, அவர்கள் அடிக்கடி சிந்திக்கிறார்கள்.
3. கவனக்குறைவு, மறதி: அவர்கள் தங்கள் சாவியை எங்கு வைத்தனர் அல்லது என்ன செய்து கொண்டிருந்தார்கள் போன்ற எளிய விஷயங்களை மறந்துவிடுவார்கள். ஏனெனில், அவர்களின் மனம் பெரிய எண்ணங்களில் மூழ்கி இருக்கும். ஹீட்டரை ஆஃப் செய்ய மறப்பது, ஐன்ஸ்டீன் போல வீட்டு விலாசம் மறப்பது போன்றவை கூட நடக்கும்.
4. அசாதாரண பொழுதுபோக்குகள்: அவர்கள் வினோதமான பொருட்களை சேகரிப்பது, சிக்கலான புதிர்களை உருவாக்குவது அல்லது விசித்திரமான விளையாட்டுகளை கண்டுபிடிப்பது போன்ற வழக்கத்திற்கு மாறான பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.
5. சிக்கலான நகைச்சுவை: அவர்களின் நகைச்சுவைகள் மிகவும் சிக்கலானதாகவோ அல்லது அறிவார்ந்ததாகவோ இருக்கலாம். அது ஒருசிலருக்கு மட்டுமே புரியும். இது மிகச்சிறிய, தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் மட்டும் சிரிப்பை ஏற்படுத்தும். விளையாட்டுத்தனமும் குறும்புத்தனமும் நிறைந்தவர்கள்.
6. ஆச்சரியப்படுத்தும் அறிவு: அவர்களது ஆச்சரியப்படுத்தும் அறிவால் சுற்றியுள்ளவர்களை அடிக்கடி பெரும் வியப்பில் ஆழ்த்துகிறார்கள். சாதாரண நபர்களின் கற்பனைக்கு எட்டாத வகையில் இது இருக்கும்.
7. புதிய சொற்களை உருவாக்குதல் : விஷயங்களை இன்னும் துல்லியமாக அல்லது வேடிக்கையாக விவரிக்க அவர்கள் தங்கள் புதிய சொந்த வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை கண்டுபிடிப்பார்கள்.உதாரணமாக எழுத்தாளர் சுஜாதா பல வார்த்தைகளை கண்டுபிடித்துள்ளார். மத்யமர், பல் உரசினான் போன்றவை.
8. வித்தியாசமான தூக்க முறைகள்: அவர்கள் வசீகரிக்கும் திட்டம் அல்லது யோசனையில் சிக்கிக்கொள்வதால் எல்லோரையும் போல இரவில் தூங்க மாட்டார்கள். இரவு முழுவதும் விழித்திருப்பது போன்ற வழக்கத்திற்கு மாறான தூக்கப் பழக்கங்களைக் கொண்டிருக்கலாம்.
9. விசித்திரமான சிக்கலைத் தீர்க்கும் பழக்கம்: அவர்கள் வேடிக்கைக்காகவோ அல்லது மனப் பயிற்சியாகவோ எளிமையான சிக்கல்களைத் தீர்க்க மிகவும் சிக்கலான முறைகளைப் பயன்படுத்தலாம்.
10. தூய்மையின்மை: இவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டார்கள். கலைத்துப் போட்ட துணிமணிகள், புத்தகங்கள் நடுவில் அமர்ந்து இவர்கள் சிந்திப்பதும் வேலை செய்வதும் நடக்கும் அப்போதுதான் அவர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகள் தோன்றும்.