பராமரிப்பின்றி இருக்கும் வீடுகள் கரப்பான் பூச்சிகள் வாழும் சொர்க்க பூமியாகும். இதனால் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் விரைவில் கெட்டுப்போகும். அது மட்டுமின்றி, அவை அங்குமிங்கும் ஓடுவதைப் பார்ப்பதற்கு அருவருப்பையும் ஏற்படுத்தும். அதுவும் மழைக்காலங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதை காணலாம். சமையல் அறை மற்றும் பல்வேறு இடங்களின் சந்து பொந்துகளில் மறைந்திருக்கும் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க சில எளிய ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
சமையலறையின் சிங்க், அலமாரி, பாத்ரூம் போன்றவற்றின் இடுக்குகளிலேயே இவை அதிகமாக அலையும்.சரியான முறையில் வீட்டை சுத்தம் செய்து பராமரித்தால் அவை திரும்ப வராது. சமையல் அறையில் பாத்திரம் கழுவும் இடம் எப்போதும் சுத்தமாகவும், ஈரம் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இரவில் அடுப்பு மேடையை சுத்தமாகவும் உணவு துகள்கள் சிதறாமல் இருப்பதையும் கவனித்து சுத்தம் செய்தல் வேண்டும். இதனை சாப்பிடுவதற்கே இரவில் கரப்பான் பூச்சிகள் சமையலறைக்கு வரும். அதேபோல், பாத்திரங்கள் கழுவும் சிங்கையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் கரப்பான் பூச்சிகள் வராது. மேலும், பாத்திரங்களை நன்றாக அலசி ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பில் போட்டு வைத்தால் சிங்க் சுத்தமாகி விடும். கரப்பான் பூச்சி வருவதைத் தவிர்க்கலாம்.
வீட்டின் குப்பைக் கூடையை நன்றாக மூடி வைத்து, அதில் நாப்தலின் உருண்டைகளைப் போட்டு வைக்கலாம். அலமாரிகள், புத்தகங்கள் வைக்கும் இடம், கிச்சன் மேடை என அனைத்திலும் இதனைப் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் வராது.
பவுல் ஒன்றில் ஒரு டம்ளர் தண்ணீரில் 4 கிராம்புகளை தட்டிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கரைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்ப்ரே செய்தால் கிராம்பு வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் வராது. அதேபோல், பவுல் ஒன்றில் ஒரு ஸ்பூன் சக்கரையுடன் ஒரு ஸ்பூன் டிடர்ஜண்ட் பவுடர் கலந்து அடுப்பு , சிங்க் அருகில் வைத்தாலும் கரப்பான் பூச்சிகள் வராது.
ஒரு பவுலில் 2 ஸ்பூன் புளித்த தயிர், அரை டீஸ்பூன் சர்க்கரையோடு தண்ணீர் சேர்த்து கலந்து கரப்பான் பூச்சி உள்ள இடங்களில் வைத்து விட்டால் கரப்பான் பூச்சிகள் அதில் விழுந்து இறந்து விடும். மேலும், இரவில் கிச்சனில் ஜீரோ வாட்ஸ் லைட் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளும் வராது. மேற்கண்ட ஆலோசனைகளில் ஏதாவது ஒன்றை செய்து கிச்சனை சுத்தமாக வைத்து உடல் ஆரோக்கியத்தைப் பராமரியுங்கள்.