கோலம் நம் இந்திய மண்ணின் கலாசாரத்தையும் பாரம்பர்யங்களையும் பறைசாற்றுகின்றன. ஊர்கள், மதங்கள், மொழிகள், இனங்கள் என வேறாக இருந்தாலும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது அழகான வண்ணக் கோலங்கள் . பண்டிகைகள், விழாக்களின்போது தெருக்களில் மலரும் வண்ணக் கோலங்களை ரசித்து பாராட்டிச் செல்வோர் பலர் உண்டு. அதிலும் மார்கழி என்றாலே ஆண்டாள் பாசுரங்களுடன் ஆடவர் பெண்டிர் என்ற வித்தியாசமின்றி லயித்துப் போடும் அழகான கோலங்களையும் தவிர்க்க முடியாது. தற்போது மார்கழி மட்டுமின்றி, தொடர்ந்து வரும் பொங்கல் போன்ற அனைத்து விசேஷ தினங்களிலும் கோலங்கள் போடுவது வழக்கமாகி விட்டது.
மார்கழியில் அதிகாலை எழுந்து வாசல் தெளித்து உடலை வளைத்துப் போடும் கோலங்களால் நமது உடலுக்குத் தேவையான தூய காற்றை ஓசோன் மூலம் சுவாசித்து ஜிம்முக்கு போகாமலே உடற்பயிற்சி செய்த பலனைப் பெறுகிறோம் . அன்று கற்பனை வளம் கொண்டு அம்மாக்கள், பாட்டிகள் மட்டுமே போட்ட கோலங்கள் இன்று இணையதளங்களின் உதவியால் இளையவர்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வைக்கிறது. முகநூல், இன்ஸ்டா போன்ற இணைய தளங்களில் கோலங்கள் போட்டு பிரபலமானவர்கள் உண்டு.
கோலங்களில் பல வகைகள் உண்டு. அன்று அரிசி மாவுக்கே முதலிடம். காரணம், அரிசி மாவினால் போடும் கோலங்கள் மார்கழியின் இரவு நேரக் குளிருக்கு புற்றுக்குள் பதுங்கிய சிறு எறும்புகள், பூச்சிகள் போன்றவற்றின் பசி போக்கும் நற்செயலுக்கு உதவுகிறது என்பதே. அந்தக் காலங்களில் செயற்கையான கற்களை அரைத்து விற்கப்படும் கோல மாவு இல்லை என்பதால் கிராமங்கள் தோறும் மாட்டின் சாணம் கரைத்த நீரினால் வாசலை மெழுகி அரிசி மாவினால் கோலமிட்டு சுற்றிலும் செம்மண் கரை கட்டி விடும் கோலங்களே அதிகம். இதில் மாட்டின் சாணம் கிருமிநாசினியாகச் செயல்பட்டு நோய்களை வரவிடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தும் கவசமாகிறது. இந்த மார்கழியில் போடும் கோலங்களின் உச்சியில் பூசணிப்பூ வைக்கும் பழக்கத்திற்கு பல அறிவியல் காரணங்களுடன், பூ வைக்கும் வீடுகளில் திருமணத்திற்கு தயாராக இருக்கும் கன்னிப் பெண்கள் உள்ளனர் எனும் சுவாரஸ்ய காரணமும் உண்டு.
சிக்குக்கோலம், கம்பிக்கோலம், புள்ளிக்கோலம், படிக்கோலம், ரங்கோலி எனப் பல வகைகளில் உருவாகும் கோலங்களில் இன்று கை தேர்ந்தவர்களால் உருவங்களை வரையும் அசத்தலான கோலங்களும் அடங்கும். கோலங்கள் நமது கற்பனையை தூண்டுவது மட்டுமல்ல, நமது சிந்தனையை ஒருமுகப்படுத்தும் தியானதுக்கும் ஒப்பாகிறது. இதன் மூலம் நமது எண்ணங்கள் நல்விதமாக மாறி, அன்றைய நாளைப் புத்துணர்ச்சியுடன் ஆக்குகிறது. இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகி விட்டதால் பெரிய கோலங்களைப் போட்டு அழகு பார்க்கும் வாய்ப்பைப் பலரும் இழந்து, சிறு கோலங்கள் இட்டு திருப்தி கொள்கின்றனர். நாகரிகம் பல விஷயங்களை மாற்றி விடுகிறது. அதில் கோலமும் ஒன்றாகி விட்டது.
ஆன்மிகத்தில் கோலங்களுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரித்தான கோலங்களின் மாதிரிகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர். உதாரணமாக, நவராத்திரியின் ஒன்பது நாளும் வரையப்படும் கோலங்களைச் சொல்லலாம். கோலத்தினை செல்வம் நல்கும் மகாலட்சுமியின் அம்சமாக சொல்வது ஐதீகம். வாசலைத் தூய்மைப்படுத்தி அழகிய கோலமிட்டால் மனதில் உற்சாகமும் உடலில் நலமும், இவற்றால் வாழ்வில் செல்வமும் பெறுவது உறுதி.