வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் துடைப்பத்தில் கூட சாஸ்திர, சம்பிரதாயங்கள் அடங்கியுள்ளன. வீட்டை பெருக்கும் துடைப்பம்தானே என்று சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். துடைப்பத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். லட்சுமி வாசம் செய்யும் 108 பொருட்களில் துடைப்பமும் ஒன்று. அதனால் அந்த துடைப்பத்தை எப்படி எல்லாம் பராமரிப்பது நமக்கு நன்மைகளைச் செய்யும்? துடைப்பத்தை எப்படி வைத்துக் கொள்ளக் கூடாது? என்பது பற்றிய விஷயங்களைப் பார்ப்போம்.
1. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நீங்கள் வீட்டை பெருக்கும்பொழுது வீட்டில் இருக்கும் அனைவரும் எழுந்து இருக்க வேண்டும். அதாவது யாரும் தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுது வீட்டை பெருக்கக் கூடாது. அதேபோல ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது வீட்டைப் பெருக்கக் கூடாது.
2. துடைப்பத்தால் வீட்டை கூட்டும் பொழுது பெரிய பொருட்கள் வைத்திருந்தால் அதனை அகற்றி விட்டு அல்லது அதற்கு அடியில் கட்டாயம் துடைப்பத்தை வைத்துப் பெருக்கி விட வேண்டும். நீங்கள் பெருக்கும் பொழுது உள்ளிருந்து வெளிப்புறமாக குப்பைகளை அள்ளுவது போல பெருக்க வேண்டும். வெளியிலிருந்து உள்ளே வருவது போல குப்பையை தள்ளக் கூடாது.
3. துடைப்பத்தை கையில் வைத்துக் கொண்டு யாரிடமும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. கீழே போட்டு விட்டு கைகளை அலம்பி விட்டு பின்னர் அவர்களிடம் பேசலாம். அதேபோல துடைப்பத்தை கையில் வைத்துக் கொண்டு சமைக்கக் கூடாது. சமையல் பொருட்களை தொடவும் கூடாது. குழந்தைகளைக் கூட தொடக்கூடாது. துடைப்பத்தை ஒரு முறை கையில் எடுத்து விட்டால் அதை வைத்து விட்டு நன்கு கைகளை கழுவிவிட்டு பின்னர்தான் மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.
4. ஒருவர் வெளியில் சென்றவுடன் உடனே துடைப்பத்தை எடுத்து வீட்டை கூட்டக் கூடாது. இது அமங்கலம் தரும் செயலாகும். வாசலை கூட்டி பெருக்குவது, வீட்டை கூட்டி பெருக்குவது, குளிப்பது போன்ற செயல்களை ஒருவர் வீட்டை விட்டு வெளியில் சென்ற உடனேயே செய்யக்கூடாது. சிறிது நேரம் கழித்த பிறகு இந்த வேலைகளை நீங்கள் செய்யலாம்.
5. துடைப்பத்தை எப்பொழுதும் படுக்க வைக்கக் கூடாது. துடைப்பத்தை மற்றவர்கள் கண் பார்வையில் படும்படி வைக்கவும் கூடாது. துடைப்பத்தை படுக்க வைத்தால் தேவையற்ற சினத்தை பெண்களுக்கு உருவாக்கும் என்கிறார்கள் . எனவே, எப்பொழுதும் நேராக நிமிர்த்தி வையுங்கள்.
6. துடைப்பத்தை எப்பொழுதும் நம் உயரத்தை விட அதிகமான உயரத்தில் ஆணி அடித்து மாட்டக் கூடாது. கதவிற்குப் பின்னால் மறைவாகத்தான் வைக்க வேண்டும். நீங்கள் ஆணி அடித்து மாட்டி வைப்பதாக இருந்தால் உயரம் குறைவாக ஆணி அடித்துக் கொள்ளுங்கள். துடைப்பம் உயரமான இடத்தில் இருக்கக் கூடாது.
7. பெருக்கும்பொழுது யார் மீதும் துடைப்பம் பட்டுவிடக்கூடாது. இது அமங்கலம் தரும் செயலாகும். மேலும், பெருக்கிக் கொண்டிருக்கும்பொழுது முடிகள் ஏதாவது தெரிந்தால் அதனை கைகளால் எடுத்து வெளியில் போட்டுவிட்டு பின்னர் பெருக்க வேண்டும். முடியுடன் சேர்த்து பெருக்கினால் துடைப்பதில் முடி மாட்டிக் கொள்ளும். அப்படி மாட்டிக்கொண்ட முடிகளை கைகளால் அகற்றி வெளியில் வீசிவிட வேண்டும். பின்னர் கைகளை அலம்பி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அப்படியே துடைப்பத்தில் முடிகளை சுற்றி வைப்பது தரித்திரம் உண்டாகும் செயலாகும்.
8. துடைப்பத்தை எப்பொழுதும் ஒருவர் தாண்டி செல்லக் கூடாது. அதில் லட்சுமி உறைந்திருப்பதால் துடைப்பத்தை தாண்டி சென்றால் வந்த லட்சுமி திரும்பி சென்று விடுவதாக ஐதீகம். வீட்டை கூட்டும்பொழுதுதான் தொலைபேசியில் சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படியே போட்டு விட்டு அதனைத் தாண்டி வந்து எடுப்பார்கள். அப்படிச் செய்யக்கூடாது.
9. வீட்டு பூஜை அறையை துடைப்பத்தைக் கொண்டு கூட்டக் கூடாது. எப்பொழுதும் துணியால்தான் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையை பெரிதாக வைத்திருந்தால் நீங்கள் அதற்கென தனியாக ஒரு துடைப்பத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
10. துடைப்பத்தை வைத்து நீங்கள் பெருக்கும்பொழுது உள்ளங்கைகளை கொண்டு முழுமையாக அழுத்தம் கொடுத்து பிடிக்க வேண்டும். அதேபோல நின்றுகொண்டே பெருக்கக் கூடாது. சற்று குனிந்து நிமிர்ந்து பெருக்க வேண்டும். இதனால் உங்களுக்கு இயற்கையாகவே அகுபிரஷர் கிடைத்து நல்லதொரு ஆரோக்கியம் உண்டாகும்.
துடைப்பத்தில் இருக்கும் இத்தகைய விஷயங்கள் அறிவியல் ரீதியாகவும் பார்த்தோமானால் தெளிவான விளக்கம் கிடைக்கும்.