சென்ற தலைமுறையில் சோப்பு என்பது சில வகைகளில் மட்டும் குளிக்க, துணிகளுக்கு போட என இருந்தது. ஆனால் தற்போது குளியல் சோப்பு என்பது பல கலர், வடிவம், வாசனை என பல விதங்களில் வருகிறது. மூலிகை சோப்பு, புத்துணர்வு கொடுக்கும் சோப்பு, நோய்களைத் தீர்க்க,தோலை ஸ்பெஷலாக பராமரிக்க என விதம் விதமாக நம்மை ஆக்ரமித்துள்ளன.
வெப்ப மண்டல பகுதியில் நாம் இருப்பதால் அதிக வெப்பம், சுற்றுப்புற மாசு என தினம் பல இன்னல்களை அனுபவித்து கஷ்டப்பட வேண்டி உள்ளது. உடலின் வியர்வை, அழுக்கு, தூசு என நாம் இருவேளை குளிக்க சோப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.
அதிகமாக வியர்க்கும்போது சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் நோய்க்கிருமிகள் மற்றும் தொற்றை ஏற்படுத்தி விடுகிறது. நம் உடலின் பெரிய உறுப்பான தோலை சுத்தமாக வைக்க வேண்டியது அவசியமாகிறது.
நிறம் கொடுக்க சாயங்கள், நறுமணத்திற்காக வாசனைப் பொருட்கள், திடப் பொருளாக மாற்ற என பல வேதிப்பொருட்கள் கலந்த கலவைதான் சோப்பு என்பது. சருமத்தை மிருதுவாக்க மாய்ச்சரைசிங் ஏஜெண்ட் கலப்பர்.
ஸ்ட்ராங்கான சோப்பு நம் உடலில் அரிப்பு, அலர்ஜி, தலைவலி என பல பிரச்சனைகளை கொடுக்கும். ஒரு சோப்பின் PH மதிப்பு மிக முக்கியமானது. இந்த pH மதிப்பு 5.5 முதல் 6.5 வரை இருக்கும். இவ்வாறு உள்ளவை நம் சருமத்தின் ஈரப்பதத்தை காக்கும். அதிக pH மதிப்பு இருப்பவை சருமத்தை பாதிக்கும். அதிக வாசனை, அதிக நுரை வருபவை என சோப்பு தேர்ந்தெடுக்கும் போது கவனமாக நம் ஸ்கின்னுக்கு உகந்ததை தேர்வு செய்து வாங்க வேண்டும்.
அதிக நுரை, தரும் சோப்புகள் சருமத்தை வறட்சி அடையச் செய்யும். அதிக சோப்பு பயன்பாடு தோலின் ஈரப்பதத்தை நீக்கி டிரைனெஸ், தடிப்பு, அரிப்பு என பல உபாதைகளை தந்து விடும். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் சாதாரண குளியல் சோப் பயன்படுத்தலாம். அதில் அலர்ஜி என ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனை படி மெடிகேட்டட் சோப்பை உபயோகிக்கலாம்.
எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கிளிசரின் சோப்பை தவிர்க்க வேண்டும். வியர்வை வாடை அதிகம் உள்ளவர்கள் ஆன்டி பாக்டீரியல் சோப்பை உபயோகிக்கலாம். கடலைமாவு, நலங்கு மாவு என குளியலுக்கு பயன்படுத்தலாம். இதையுமே அதிகமாக உபயோகிக்க தோல் வறட்சியை உண்டாக்கும். பீர்க்கங்காய் தோல் கொண்டு அதிகமாக தேய்த்து குளிக்கக் கூடாது. சருமத்தில் உள்ள எண்ணெய், ஈரப்பதத்தை நீக்குவதால் கவனமாக மென்மையாக தேய்த்து குளிக்க வேண்டும்.
தற்போது பாடி வாஷ், ஃபேஸ் வாஷ் என உடலை தூய்மையாக்க பல்வேறு வகையான பிராண்டுகள் உள்ளன. தகுந்த மருத்துவ ஆலோசனைபடி உபயோகிக்க நல்ல பலன்களை தரும்.