உடலில் நீர்ச்சத்து குறையும்போது நமக்கு அதிக சோர்வாக இருக்கும். அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட்டவுடன் சோர்வு காணாமல் போய்விடும். தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இதை அப்படியே பழமாகவும் சாப்பிடலாம். ஒரு கப் தர்பூசணி சாற்றில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அதன் மேல் கொஞ்சம் நறுக்கி புதினாவைத் தூவி ஜூஸ் போல குடித்தால் சோர்வு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
வெள்ளரியும் தர்பூசணி போலவே அதிக நீர்ச்சத்து கொண்டது. வெள்ளரியை நறுக்கி அப்படியே சாப்பிடலாம் அல்லது கொஞ்சம் மிளகு தூள் தூவி, புதினா துவையலை தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். இது கூடுதல் புத்துணர்ச்சி கொடுக்கும்.
அன்னாசி பழமும் உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். இதை நறுக்கி பழமாகவும் சாப்பிடலாம். ஜூஸ் போட்டும் குடிக்கலாம். நறுக்கிய அன்னாசி ஒரு கப், வெள்ளரிக்காய் ஒரு கப் ஆகியவற்றை நன்கு மிக்சியில் அரைக்க வேண்டும். இதில் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு குடித்தால் உடல் சோர்வு பறந்து ஓடிவிடும்.
திராட்சையில் வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் கள் நிறைய உள்ளன. குறிப்பாக, கருப்பு திராட்சையில் இவை அதிகம் உள்ளது. உடலுக்கு நீர்ச்சத்தும் ஊட்டச்சத்தும் சுறுசுறுப்பையும் கூட்டுகிறது.
பப்பாளி பழமும் உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. பப்பாளியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை மூளைக்கு உற்சாகம் தந்து சுறுசுறுப்பாக வைக்கிறது. ஒரு கப் பப்பாளியை மிக்ஸியில் அரைத்து அதில் அரை கப் தயிர் சேர்க்க வேண்டும். இதில் அளவாக தேன் கலந்து சிறிதளவு ஏலக்காய் தூள் தூவி குடிக்க வேண்டும். இந்த பப்பாளி லஸ்ஸியை காலை 11 மணிக்குக் குடித்தால் நாள் முழுக்க புத்துணர்ச்சி பெறலாம்.
புத்துணர்வு தரும் இயற்கையின் பானம் இளநீர். இது உடலுக்கு மிகவும் சத்தானது, குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் தரக்கூடியது. மேலும், இது உடலில் உள்ள உப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைந்தது என்பதால் உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.
மோர் வைட்டமின் பி, பொட்டாசியம், புரதம் நிறைந்த இயற்கை உணவு. மோர் குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு பெறுகிறது. இது உடலுக்கு இயல்பான குளிர்ச்சி தந்து உடல் வெப்பத்தை தணிக்கிறது.
கீரைகளில் அதிக புத்துணர்வு தருவது புதினா. புதினாவின் நறுமணம் மூளையின் செயல்பாட்டை தூண்டி சுறுசுறுப்பு தரும். பொதுவாக, புதினா உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும். எலுமிச்சை சாற்றுடன் புதினா சேர்த்து அருந்தும்போது உடலுக்கு குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும். புதினா இலைகளைக் காய வைத்து அரைத்து வைத்த பொடியை பயன்படுத்தி மின்ட் டீ குடிக்கலாம். இதனால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
எலுமிச்சை சாறு உடலுக்கு அதிக புத்துணர்ச்சியைத் தரும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதில் தேவையான தண்ணீரை சேர்த்து வெல்லத்தைப் போட்டுக் கரைத்து குடிக்கலாம். வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு வலிமையைத் தருவதோடு, சோர்வையும் நீக்கும்.
ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து அதில் ஒரு கரண்டி தேன் சேர்த்து பருகலாம். இதனால் உடலுக்கு உடனடி எனர்ஜி கிடைக்கும்.
இளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நுங்கை நறுக்கி போட்டு அதை சாப்பிட்டாலும் கோடைக்கு உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.
கோடையில் வெளியில் செல்லும் முன் வாயில் ஒரு நெல்லிக்காயை அடக்கிக் கொண்டு சென்றாலும் நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.