Disagreement husband and wife 
வீடு / குடும்பம்

திருமண வாழ்க்கை சிதையாமல் இருக்க சில சிம்பிள் யோசனைகள்!

பொ.பாலாஜிகணேஷ்

திருமணம் என்பது புனிதமான ஒரு சடங்கு. திருமணத்திற்கு முன் ஒரு ஆண் அல்லது பெண் தனது வாழ்க்கை முறையில் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு ஆணும் பெண்ணும் சில நெறிமுறைகளை கடைபிடித்தால்தான் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்த முடியும்.

பொதுவாகவே குடும்பத்தில், ‘நான் பெரியவன், நீ பெரியவள்’ என்று பேச ஆரம்பித்து விட்டாலே போதும், அந்த வீட்டில் ஈசியாக நுழைந்து விடும் சண்டை. இதில் கவலை தரும் விஷயம் என்னவென்றால் இப்போதெல்லாம் திருமணமாகி சில மாதங்களிலேயே விவாகரத்து வேண்டி நீதிமன்ற வாசலில் நிற்கும் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீதிமன்றத்தில் நீதி தேடி போகும் ஜோடிகள் ஒரு நிமிஷம் யோசனை செய்து தங்களுடைய வாழக்கை முறையை மாற்றிக் கொண்டாலே மகிழ்ச்சியுடன் வாழலாம். ஆனால், அப்படிச் செய்வதில்லை. திருமண வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமான உறவு. இதனை சிதையவிடாமல் எப்படி கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

கணவன் - மனைவி என இருவருமே ஒருவரை ஒருவர் நோகடிக்கும் வகையில் உணர்வுபூர்வமான விஷயங்களில் விளையாடக் கூடாது. இது மனரீதியாக உங்களுடைய துணையை அதிகம் பாதிக்கும். சண்டைகள் போடாமல் யாருடைய இல்லற வாழ்க்கையும் இனித்திடாது. அப்படி உங்களுக்குள் வரும் பிரச்னையின்போது, உங்களுடைய துணை சமாதானமாக பேச வரும்போது, அவர்களை அவமதிப்பது போல், ‘உன் வேலையைப் பாரு, நீ சும்மா இரு’ போன்ற எரிச்சலூட்டும் வார்த்தைகளைப் பேசாதீர்கள். குறிப்பாக, மனைவிகளிடம் இது போன்ற வார்த்தைகளை பேசாமல் இருப்பது நல்லது.

கணவன்மார்களே, உங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால், அதுபற்றி கண்டிப்பாக மனைவியிடம் அமர்ந்து பேசி ஆலோசித்து விசேஷம் பற்றி திட்டமிடுங்கள். அப்படி நீங்கள் செய்யத் தவறும் பட்சத்தில், உங்கள் மனைவி அதை வெறுமையாக உணர்வார்.

கணவன் - மனைவி பிரச்னை வந்தால், தயவு செய்து உடனே விவாகரத்து என்கிற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். இதுதான் பல வாழ்க்கையை கோர்ட் வரை கொண்டு செல்கிறது. மாறாக, கணவனோ அல்லது மனைவியோ அமைதியாக இருந்து பின்னர் உங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை கணவனிடமோ, மனைவியிடமோ சொல்லுங்கள். கோபத்தில் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அமைதியான நிலையில் உங்களை கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.

உங்கள் மனைவியை அடுத்தவரோடு ஒப்பிட்டு பேசுவது தவறு. மனைவி செய்வதில் ஏதாவது தவறு இருக்கிறது என நினைத்தால் அதனை, அவரிடம் நீங்களே கூறி சரிசெய்து கொள்ள சொல்லுங்கள். குறிப்பாக, மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் மனைவியை ஒருபோதும் விட்டுக்கொடுத்து பேசாதீர்கள்.

கணவன் - மனைவி பிரச்னை எப்போதும் நான்கு சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும். எப்போது சுவரை விட்டு வீட்டுப் பிரச்னை வெளியே செல்கிறதோ அப்போதுதான் உண்மையான பிரச்னையே துவங்கும். எனவே, கணவருடன் சண்டை இருந்தால் கூட மனைவி அதனை தோழிகளிடம் கூட பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஒருசில எளிமையான விஷயங்களை பின்பற்றினாலே உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

இன்வெர்டர் செயல்பாடும், பழுதுபடுதலும் மற்றும் பராமரிப்பு முறைகளும்!

இனிய வாழ்வு தரும் கசப்பான உணவுகள்..!

கருப்பு உளுந்து சட்னி-பூண்டு கார சட்னி செய்யலாமா?

இத தெரிஞ்சுக்கிட்டு உங்கள் படுக்கை அறையில் தாவரங்களை வைங்க! 

நமக்கான வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தெரியுமா?

SCROLL FOR NEXT