Dining table Maintenance https://www.povison.com
வீடு / குடும்பம்

டைனிங் டேபிளை சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்க சில எளிய ஆலோசனைகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வீட்டின் டைனிங் டேபிளை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிப்பது என்பது ஒரு தனிக்கலை. வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முதலில் பார்ப்பது நம் சமையலறையையும் டைனிங் டேபிளையும் தான். சிலர் வீட்டு டைனிங் டேபிளில் ஊறுகாய் பாட்டில் திறந்து இருக்கும். அன்றைய சமையல் பாத்திரங்கள் கேட்பாரற்று கரண்டிகளுடன் காய்ந்த நிலையில் ஈக்கள் மொய்த்து காணப்படும். ஒருபுறம் பிள்ளைகளின் புத்தகங்கள், பேனா பென்சில்கள், போதாதற்கு வாட்டர் கேன். அதிலிருந்து தண்ணீர் கொட்டி கீழே ஒரு சிறு குளம். வீட்டு சாவி முதல் டிவி ரிமோட் வரை டைனிங் டேபிளில்தான் அடைக்கலம் புகுந்திருக்கும். சாப்பாட்டு மேஜையை சுத்தமாக வைப்பது ஒரு சவாலான விஷயம்தான். முக்கியமாக, தினசரி அதை பயன்படுத்தும்போது சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம் மற்றும் ஆரோக்கியமான விஷயமும் கூட.

சாப்பிட்டு முடித்ததும் டேபிளில் உள்ள பாத்திரங்களை அகற்றுவதுடன் ஊறுகாய் பாட்டிலையும் எடுத்து விட வேண்டும். சில வீடுகளில் டைனிங் டேபிளில் எப்பொழுதும் ஊறுகாய் பாட்டில்கள், தயிர், பழங்கள், ஏன் மருந்து மாத்திரைகள் கூட இடம் பிடித்திருக்கும். ஒவ்வொரு முறையும் பயன்பாட்டிற்குப் பிறகு டைனிங் டேபிளை மென்மையான காட்டன் துணியால் துடைத்து சுத்தம் செய்து விட வேண்டும். அப்போதுதான் அன்னபூரணியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

சமையல் அறையும் சாப்பிடும் இடமும் மிகவும் சுத்தமாக இல்லையென்றால் வறுமையை நாமே வரவேற்பது போல் ஆகிவிடும். நோய் நொடிகளை உண்டாக்கி விடும். தினமும் மேசையை அழுக்கு, தூசி துடைத்து வைப்பதும், சிந்திய நொறுக்குத் தீனிகள் மற்றும் குழம்புக் கறைகளை ஈரத்துணி கொண்டு துடைத்து அகற்றுவதும், ஈ, எறும்புகள் அண்டாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

டைனிங் டேபிளை சுற்றி மகிழ்ச்சியான ஓவியங்கள், கலைப் பொருட்கள், பழக்கிண்ணங்களின் ஓவியங்கள் அல்லது  பல வண்ண மலர்களின் கிண்ணங்கள் ஆகியவற்றை அமைக்க, அது பசியைத் தூண்டுவதுடன் ஒரு நல்ல நேர்மறை எண்ணங்களையும் தோற்றுவிக்கும். சாப்பாட்டு அறை சுவர்களுக்கு இனிமையான வண்ணங்களை தேர்வு செய்வதும், டைனிங் டேபிளை வருடத்திற்கு ஒரு முறை பாலிஷ் செய்து மெருகூட்டுவதும் புத்துணர்ச்சியுடன் கூடிய நேர்த்தியை நம் சாப்பாட்டு மேஜைக்குத் தரும்.

மரத்தாலான டைனிங் டேபிள் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக விரிசல் ஏற்படாமல் இருக்க அறை வெப்பநிலையை சீராக பராமரிப்பதுடன், வெப்ப சேதத்தை தடுக்க சூடான பொருட்களை நேரடியாக டேபிளின் மேற்பரப்பில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. கண்ணாடி டைனிங் டேபிள் என்றால் அதை சுத்தமாக பராமரிக்க லேசான கண்ணாடி கிளீனர் மற்றும் மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்தி கறைகளை கவனமாக துடைக்கவும். அமில மற்றும் சிராய்ப்புப் பொருட்களைத் தவிர்ப்பது அவசியம்.

மார்பிள் டைனிங் டேபிள் என்றால் அதற்கு மென்மையான துணியைக் கொண்டு லேசான சோப்பு மற்றும் தண்ணீர் கலவையை பயன்படுத்தி மெதுவாக சுத்தம் செய்வதும், நீர் கோடுகளை தவிர்க்க உடனடியாக துடைத்து உலர விடுவதும் அவசியம். சாப்பாட்டு மேஜை மரத்தாலானது என்றால் அமிலமற்ற கிளீனர் மூலம் மேஜையின் மேற்பரப்பை ஈரப்படுத்தி துடைக்கலாம். கூடுதல் பளபளப்பிற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பர்னிச்சர் பாலிஷை பயன்படுத்த புதுசு போல் மின்னும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT